குறுந்தொகை நறுந்தேன் – 19
-மேகலா இராமமூர்த்தி
தலைவனின் வரவை மகிழ்ச்சியின் வரவாகவே தலைவி எண்ணி மகிழ்ந்தாள். அவனை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உண்டியிட்டாள்.
தான் வருமட்டும் தலைவிக்குத் துணையாயிருந்து அவளை ஆற்றியமைக்காகத் தோழியை வெகுவாய்ப் போற்றினான் தலைவன்.
தோழியோ முறுவலித்தவாறே, ”ஐய! தலைவியை ஆற்றுவித்த பெருமை என்னைச் சாராது; அதனை ஒரு காக்கைக்குச் சாற்றுதலே முறை” என்றாள் பொடிவைத்து!
தலைவன் வியந்து, ”அப்படியா? அது எப்படி?” என்றான்.
”ஆம், சின்னாட்களுக்குமுன் நம் வீட்டு வாயிற்பக்கம் ஒரு காக்கை வந்தமர்ந்தது. கா…கா என்று வெகுநேரம் கரைந்துவிட்டுச் சென்றது. இதோ… நீங்களும் வீடுவந்து சேர்ந்துவிட்டீர்கள்!
உம் பிரிவால் தோள்நெகிழ்ந்து வாடியிருந்த என்னருமைத் தோழிக்கு நும் நல்வரவை முன்கூட்டியே அறிவித்த அந்தக் காக்கைக்குப் பலியாக, திண்ணிய தேரையுடைய வள்ளலான நள்ளியின் கானகத்தில் வாழும் இடையரின் பலபசுக்கள் பயந்த நெய்யுடன், தொண்டி எனும் ஊரில் நன்கு விளைந்த வெண்ணெல்லரிசியால் சமைத்து வெம்மையுற்ற சோற்றை ஏழுகலங்களில் ஏந்திக் கொடுத்தாலும் அது குறைவே” என்றாள். (காக்கைக்கு இடும் உணவைப் பலி என்று கூறல் மரபு.)
காக்கையைச் சிறப்பித்துப் பாடல் பாடியமையால் நச்செள்ளையார் எனும் பெயரிய இப்புலவர் ’காக்கைபாடினியார் நச்செள்ளையார்’ எனும் அடையோடு சிறப்பிக்கப்படுகின்றார்.
திண்தேர் நள்ளி கானத் தண்டர்
பல்லா பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத் தேந்தினுஞ் சிறிதென் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே. (குறுந்: 210 – காக்கைபாடினியார் நச்செள்ளையார்)
காகத்தைப் புகழ்ந்த தோழியின் நன்மொழியை இரசித்துச் சிரித்தான் தலைவன்.
”குற்றமற்ற சிறகுடைய காக்கையே! தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்ட என் மகள் திரும்பிவந்தால் இறைச்சியொடு கலந்த சோற்றை உனக்குப் பொற்கலத்தில் தருவேன்; அவர்கள் வரவுக்காக நீ கரைவாயாக!” என்று மகட்போக்கிய தாயொருத்தி, காக்கையிடம் வேண்டும் ஐங்குறுநூற்றுப் பாடலை மேற்கண்ட குறுந்தொகைப் பாடலோடு நாம் பொருத்திப் பார்க்கலாம்.
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெம்சின விறல்வேல் காளையொடு
அம்சில் ஓதியை வரக்கரைந் தீமே. (ஐங்: 391 – ஓதலாந்தையார்)
காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவர் எனும் நம்பிக்கை பன்னெடுங் காலமாகவே தமிழரிடம் இருந்துவரும் தொல்நம்பிக்கை என்பதை இப்பாடற்செய்திகள் நமக்குத் தெள்ளிதின் உணர்த்துகின்றன.
தலைவனைக் காணாது தலைவிகொண்ட பிரிவெனும் தாகத்தைத் தணித்த காகத்தை நாமும் கொண்டாடுவோம்.
தலைவன் பொருள்வயிற் பிரிந்ததால் சிலகாலம் தடைப்பட்டிருந்த தலைவன் தலைவியரின் இல்லறம் மீண்டும் இனிதே தொடங்கிற்று.
செய்வினை முற்றுவித்த செம்மல் உள்ளத்தொடு தலைவியை விரும்பிப் பொருந்திய தலைவன், ”குறிய காம்பையுடைய குவளையின் அலர்ந்த செவ்வியை உடைய மலர் மணக்கின்ற தலைவியின் நல்ல மெல்லிய கூந்தலெனும் பாயலின்கண்ணே யாம் இருந்தோம்; பெரிய மேகமே! தங்கிய இருள்கெடும்படி மின்னி, குளிர்ந்த நின் துளிகளுள் இனியவற்றைச் சிதறி, குறுந்தடியால் அடிக்கப்படும் முரசைப்போல் முறையாய் முழங்கி, பன்முறை இடித்து மழைபெய்து வாழ்வாயாக!” என்று வானை வாழ்த்தினான்.
இல்லறம் நடாத்துதற்கு வேண்டிய பொருள் கைவந்தமையால் இனி அறஞ்செய்தற்குத் தடையில்லை. தலைவியைச் சேர்ந்தமையால் இன்பத்துக்கும் குறைவில்லை. ஆதலால் உளம் நிறைவுற்ற தலைவன் அம் மூன்றும் நடத்தற்கு ஏதுவாகிய வானை வாழ்த்துகின்றான்.
தாழிருள் துமிய மின்னித் தண்ணென
வீழுறை இனிய சிதறி ஊழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெருவான் யாமே
செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு
இவளின் மேவின மாகிக் குவளைக்
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே. (குறுந்: 270 – பாண்டியன் பன்னாடு தந்தான்)
தலைவியின் கூந்தல் மணம் குவளைமலரின் மணத்தை யொத்தது என்பதைப் பிறிதொரு தலைவனும் ஒரு குறுந்தொகைப் பாடலில் கூறக் காண்கிறோம்.
குவளை நாறுங் குவையிருங் கூந்தல்“ (குறுந். 300:1)
இவற்றை நோக்குகையில் அற்றைப் புலவரில் நக்கீரர் தவிர்ந்த மற்றையோர் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டு எனும் கருத்துடையோராய் இருந்திருப்பரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
மனையறத்தின் நற்பயனாய்ப் பெறற்கரிய பேறாகிய மக்கட்பேற்றினைத் தலைவி பெற்றாள். இன்பப் புதையலாய்க் கிடைத்த மகவினைத் தலைவனும் தலைவியும் ஊச்சிமோந்து கொண்டாடினர்.
அக்குழந்தை, இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்சோற்றை உண்ணும் அழகினைக் கண்கள் விரிய, சிந்தை நிறையப் பார்த்திருந்தனர்.
குழந்தை பிறந்ததிலிருந்து அதனைக் கவனிக்கவேண்டிய பெரும்பொறுப்பும் பணியும் தலைவிக்கு வாய்த்தது. அப்பணியிலேயே மூழ்கித் திளைத்த அவளுக்குத் தலைவனுடனான இன்ப வாழ்வில் நாட்டம் குறைந்தது. குழந்தையைக் கண்ணும் கருத்துமாய்ப் பராமரிப்பதிலும் பேணுவதிலுமே கழிபேருவகை கொண்டாள்.
தலைவனும் புதல்வன்பேரில் அன்பும் பாசமும் கொண்டவன்தான் என்றாலும் தலைவியைப்போல் எப்போதும் குழந்தையுடனேயே இருக்கவேண்டிய அவசியமும் தேவையும் அவனுக்கு இருக்கவில்லை. ஆதலால் வீட்டைவிட்டு வெளியிடங்களில் சுற்றிவரலானான்.
விழாக்கள், ஆடல் பாடல் நிகழ்வுகள் என்று ஒவ்வொரு நாளும் புலன்களுக்கு இன்பம்தரும் வகையில் பொழுதைக் கழித்துவந்தான். விரைவிலேயே அவ்வூரின்கண் வாழ்ந்துவந்த பரத்தை ஒருத்தியோடு அவனுக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அவளுடனேயே அல்லும் பகலும் காலம் கழிக்கத் தொடங்கியவன், தன் மனை மறந்து, விடுதல் அறியா விருப்பினனாக, அவளுடன் அவள் மனையிலேயே தங்கிவிட்டான்.
தலைவனின் கூடா ஒழுக்கம் தலைவிக்குத் தெரிந்தது. வேதனையின் வெம்மையில் அவள் உள்ளம் எரிந்தது.
தன் கணவனைப் பரத்தையொருத்திக் கண்ணியமின்றிக் கவர்ந்துகொண்டாளே என்று தோழியிடம் கூறி வருந்தினாள் அவள். தலைவி தன்னை பழித்துரைப்பதும், புறங்கூறுவதும் அந்தப் பரத்தையின் காதுக்கும் எட்டியது.
வெகுண்டாள் அவள்!
“தலைவி தன் அறியாமையின் காரணமாய் என்னை வெறுக்கும் வகையில் தலைவன் மகிழ்தற்குரியவளாய் யான் இருப்பேனாயின், திரண்ட கொம்பையுடைய வாளைமீனின் கருமுதிர்ந்த பெட்டையானது கொத்தினையுடைய தேமாவின் உதிர்ந்த இனிய கனியைக் கவ்வுதற்கு இடமாகிய மிகப் பழைய வேளிருடைய குன்றூர்க்குக் கிழக்கேயுள்ள குளிர்ந்த பெருங்கடல் எம்மை வருத்துவதாக” என்று ஆவேசத்தோடு சூளுரைத்தாள்.
கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூல் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் தீம்பழங் கதூஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி
மனையோள் மடமையிற் புலக்கும்
அனையே மகிழ்நற்கியா மாயின மெனினே. (குறுந்: 164 – மாங்குடி மருதன்)
தலைவனின் காதற் பரத்தை சொல்லுகின்ற செய்தியின் உள்ளுறை இதுதான்:
மனையிலேயே உறையும் தலைவி வீட்டுக்கு வெளியில் நடப்பவற்றை அறியாதவளாய் இருக்கின்றாள். அதனால்தான் வாளையின் பெட்டை எவ்வித முயற்சியுமின்றி மாங்கனியைப் பெற்றதுபோல் யான் தலைவனை அடைய எவ்வித முயற்சியும் செய்யாதபோதும் அவனாகவே வலியவந்து என்னைப் பற்றிக்கொண்டதை அவள் அறியவில்லை. ஆகவே என்மீது பழியில்லை; என்னைத் தூற்றுவதும் முறையில்லை” என்கிறாள்.
”யாருக்குமே தீங்கு நினையாத நல்லுளம் படைத்தவர் யாம்” என்றுதான் மானுடர் அனைவரும் தம்மைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள்கின்றனர். காதற் பரத்தை மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
[தொடரும்]