-மேகலா இராமமூர்த்தி

தலைவன் பரத்தையின் மனையிலேயே தங்கிவிட்டதனால் தலைவிகொண்ட வருத்தத்தையும் வேதனையையும் கண்ட தோழி தலைவனின் கூடா ஒழுக்கத்தைத் தலைவியிடம் கடிந்துபேசத் தொடங்கினாள்.

”அழகு மனைவியும் அருமைப் புதல்வனும் அகத்திருக்க, அவர்கள்பால் அன்போ அக்கறையோ சிறிதுமின்றி ஒரு குடும்பத் தலைவன் மனையறம் மறந்து புறத்தொழுக்கம் மேற்கொள்ளும் செயலின் திறத்தை எப்படிப் புகழ்வதென்றே தெரியவில்லை” என்றாள் வஞ்சப் புகழ்ச்சியாய்! அவள் முகம் சினத்தில் சிவந்திருந்தது.

இதே தலைவனின் குணநலன்களைப் புகழ்ந்து, இவனுக்காகப் பரிந்துபேசி இவனைக் காதலிக்க வைத்த அருமைத் தோழி இன்று கடுஞ்சினத்தோடு தலைவன் குறித்துக் கொடுஞ்சொற்கள் கூறியது கூரிய முள்ளெனத் தலைவியின் உள்ளத்தில் பாய்ந்தது. எனினும் அதனைச் சமாளித்துக்கொண்டு தோழியைச் சமாதானப்படுத்த முற்பட்ட தலைவி,

தோழி! சமீபத்தில் குழவியீன்ற பெரிய கொம்பையுடைய
பெண்ணெருமையானது, உழவனால் கட்டப்பட்ட buffaloதன்னுடைய இளங்கன்றிடமிருந்து அகலாமல் பக்கத்திலுள்ள பசிய பயிர்களை மேய்வதற்கு இடமாகிய ஊரினனான நம் தலைவனின் திருமனையில் வாழ்கின்ற, வயதில் முதிய பெண்டிராகிய, நமக்குச் செய்யவேண்டிய கடமைகள் எத்தனையோ இருக்க, அவனோடு ஊடியிருக்கும் இவ்வேளையில் அவனைப் பற்றிக் குறைகூறிக்கொண்டிருப்பதால் என்ன பயன் விளையப்போகின்றது?” என்றாள்.

இதுமற்  றெவனோ  தோழி  துனியிடை
இன்ன
 ரென்னும்  இன்னாக்  கிளவி
இருமருப்
 பெருமை  யீன்றணிக்  காரான்
உழவன்
 யாத்த  குழவியின்  அகலாது
பாஅற்  பைம்பயிர்  ஆரும்  ஊரன்
திருமனைப்  பலகடம்  பூண்ட
பெருமுது
 பெண்டிரே  மாகிய  நமக்கே.  (குறுந்: 181 – கிளிமங்கலங்கிழார்/ கிள்ளி கிழார்)

நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. எனினும் அதுபற்றியே பேசி இனி ஆகப்போவதென்ன…? நமக்கிருக்கும் வேறு வேலைகளைப் பார்ப்போம் என்று சொல்வதன் வாயிலாகத் தான் ஒன்றும் தலைவனின் அன்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கவில்லை என்பதைப் புலப்படுத்த முற்படும் தலைவி, நாம் பிள்ளைபெற்று வயதில் மூத்தவராய் ஆகிவிட்டோம்; அதற்கேற்ற வகையில் பக்குவத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியிருப்பது அவளுடைய மனமுதிர்ச்சியின் வெளிப்பாட்டைக் காட்டுகின்றது எனலாம்.

வாழ்வில் ஏற்படும் வலிகளும் துன்பங்களும் மனிதர்களுக்குப் பல பாடங்களைக் கற்பிப்பத்தோடு பக்குவத்தையும் கற்றுக்கொடுத்துவிடுகின்றது என்பதற்குத் தலைவியின் மொழிகள் தக்கதோர் சான்று.

மாதங்கள் சில சென்றன. பரத்தையுடனான வாழ்வில் தலைவனுக்கு நாட்டம் குறையலாயிற்று. மனையாளுடனும் மலர்க்கண் புதல்வனுடனும் தன் மனையின்கண் மீண்டும் மகிழ்ந்துவாழ விரும்பினான்.

ஆயினும் மனை மறந்து, தலைவி தனைத் துறந்து போற்றாவொழுக்கம் புரிந்த தன்னைத் தலைவி மன்னித்து ஏற்றுக்கொள்வாளோ மாட்டாளோ என்னும் ஐயம் உள்ளத்துள் ஊடாடியதால் தானே நேரடியாகச் சென்று தலைவியைக் காண நாணினான். ’வாயிலாக’ வேறுயாரையேனும் தலைவிபால் அனுப்ப வேண்டும் என்று சிந்தித்தான். அவ்வாறே தானறிந்த பாணன் ஒருவனைத் தலைவியிடம் தூதனுப்பினான்.

இவ்விடத்தில் வாயில்கள் குறித்துச் சில வார்த்தைகள் கூற விழைகின்றேன்.

வாயில்கள் என்போர் தலைவனுக்கும் தலைவிக்கும் ஊடல் ஏற்பட்டுப் பிரிவு நேர்ந்திருக்கும் காலத்து, அவர்களை மீண்டும் இணைத்துவைக்கத் தூதுசெல்லும் மக்களாவர்.

தோழி  தாயே  பார்ப்பான்  பாங்கன்
பாணன்  பாட்டி  யிளையர்  விருந்தினர்
கூத்தர்  விறலியர்  அறிவர்  கண்டோர்
யாத்த
 சிறப்பின்  வாயில்க  ளென்ப(தொல். பொருள். கற்பியல். 52)

எனும் தொல்காப்பிய நூற்பா கற்புக்காலத்துத் (திருமணத்துக்குப் பின்) தலைவன் தலைவியரிடையே தூதாகச் சென்று அவர்களிடையே உள்ள ஊடலைத் தீர்ப்பவர்கள் யாவர் எனும் பட்டியலை நமக்கு அறியத் தருகின்றது.

தலைவியின் தோழி, செவிலி/நற்றாய், தலைவனின் உடனிருந்து அவனை நெறிப்படுத்தும் நூல் வல்லோனாகிய பார்ப்பான், தலைவனின் தோழனாகிய பாங்கன், பண்ணில் வல்லவனாகிய பாணன், பாடினி (பாட்டி என்பது பண்ணொடு பாடும் மகளிரைக் குறிக்கும்), இளையோர், புதியவர்களாகிய விருந்தினர், கூத்தர், விறல்பட ஆடும் நாடக மடந்தையராகிய விறலியர், அறிவிற்சிறந்தோர்/கணிவர், பரத்தையர் பிரிவின்கண் தலைவன் தலைவியரைக் கண்டோர் ஆகிய பன்னிருவரும் தலைவன் தலைவியர்க்கிடையே தூதுசெல்லும் வாயில்களாகும் தகுதியுடையோர் என்கின்றது தொல்காப்பியம்.

தலைவன் அனுப்பிய பாணன் தலைவியின் இல்லம்வந்து நின்றான். வாயிலில் நிழலாடுவது கண்டு உள்ளிருந்து வெளியே வந்தாள் தோழி. அவளைப் பின்தொடர்ந்து தலைவியும் வந்தாள். தலைவியிடம் நேரடியாகப் பேசத் தயங்கிய பாணன், தோழியிடம் தலைவனின் கல்யாண குணங்களைப் (!) புகழத் தொடங்கினான்.

”தலைவன் யாருக்கும் தீங்கு நினையாத உத்தமன்; இனியவே பேசும் நன்மொழியன். அவன் இம்மைச் செய்தன யானறி நல்வினைகளே. ஆதலால் அறியாமல் அவன் செய்த பிழையை மறந்து அவனை ஏற்றுக்கொள்ளுதல் தலைவிக்கு நலம் பயக்கும்” என்று கூறினான்.

தோழியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

யாரினும்  இனியன்  பேரன் பினனே
உள்ளூர்க்
 குரீஇத்  துள்ளுநடைச்  சேவல்
சூன்முதிர்  பேடைக்  கீனில்  இழைஇயர்
தேம்பொதிக்
 கொண்ட  தீங்கழைக்  கரும்பின்
நாறா
 வெண்பூக்  கொழுதும்
யாணர்
 ஊரன்  பாணன்  வாயே.  (குறுந்: 85 – வடமவண்ணக்கன் தாமோதரனார்)

பாண! ஊரிலிருக்கும் குருவியின் துள்ளிய நடையுடைய ஆண்பறவையானது கருத்தரித்திருக்கும் தன் sparrow nestபெண்குருவி முட்டையீனுதற்கு ஏற்ற இல்லம் அமைத்தற்கு வேண்டி, தேன்பொதிந்த இனியகோலையுடைய கரும்பின் மணமற்ற வெண்பூவைக் கோதியெடுக்கும், புதுவருவாயை உடைய ஊருக்குத் தலைவன், உன் சொல்லளவில் மட்டுமே அனைவரினும் இனியன்; தலைவியின்மாட்டுப் பேரன்புடையன். ஆனால் உண்மையில் அவன் அங்ஙனம் இலன்!” என்றாள் சீற்றத்தோடு.

கரும்பின் வெண்முகைகளைப் பிரித்து அறிவிற்சிறந்தsugarcaneflowers துக்கணங்குருவியானது செய்த கூட்டினைப் பற்றி நற்றிணையும் வியந்து பேசுவது இப்பாடலோடு வைத்தெண்ணத் தக்கது.

………….கரும்பின்
வேல்போல்
வெண்முகை பிரியத் தீண்டி
முதுக்குறைக்
குரீஇ முயன்றுசெய் குடம்பை… (நற்: 366: 7-9)

தோழியின் சீற்றமொழி கேட்ட பாணனின் முகம் பேயறைந்ததுபோல் மாற்றம் கண்டது. இனி இவர்களிடம் தன் பசப்பு மொழிகள் பயன்படா என்றுணர்ந்த அவன் அங்கிருந்து விரைந்து நடையைக் கட்டினான். தலைவனிடம் நடந்தவற்றை விவரித்தான்.

பிறரை நம்பிப் பயனில்லை என்றுணர்ந்த தலைவன், தானே சென்று தலைவியின் பிணக்கைத் தீர்ப்பதே சிறந்தது என்ற முடிவோடு தன் இல்லம் நோக்கிச் சென்றான்.

வழக்கம்போல் தோழியே எதிர்ப்பட்டாள் முதலில். தலைவன் அவளைக் கண்டு நட்போடு புன்னகைத்தான். தோழி அதனைக் காணாதவள்போல் வேறுபக்கம் பார்த்தாள்.

”நீங்கள் அனைவரும் நலந்தானே?” என்று பேச்சைத் தொடங்கினான் தலைவன்.

“எங்கள் நலத்திற்கு என்ன குறை?” என்றாள் தோழி வெடுக்கென்று.

”புரிகிறது…என்மீது உங்களுக்கெல்லாம் கடுங்கோபம்; அதனால்தான் வார்த்தைகளிலும் அனல் பறக்கிறது” என்றான் தலைவன் செயற்கையான புன்னகை ஒன்றை வரவழைத்துக்கொண்டு!

”ஐயா! உங்களுக்குப் பழைய நிகழ்வுகளெல்லாம் மறந்தேபோய்விட்டது. அவற்றைச் சற்றே நினைவுடுத்த விரும்புகின்றேன்” என்றாள் தோழி.

அடுத்து அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்ற அச்சத்தோடும் மருட்சியோடும் அவளை நோக்கிக் கொண்டிருந்தான் தலைவன்.   

[தொடரும்]

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *