குறளின் கதிர்களாய்…(200)
-செண்பக ஜெகதீசன்
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. (திருக்குறள்-603: மடியின்மை)
புதுக் கவிதையில்…
அழித்திடும் சோம்பலை
ஒழிக்காமல்
தன்னுள்ளே கொண்ட
அறிவிலான் பிறந்த குடி,
அழிந்திடும்
அவன் அழியுமுன்னே…!
குறும்பாவில்…
அழிவைத்தரும் சோம்பலை அழித்திடாமல்,
அகத்தே கொண்ட அறிவற்றவன்
குடியழியும் அவனுக்கு முன்னே…!
மரபுக் கவிதையில்…
அகில வாழ்வில் நிலைபெறவே
-அழித்திட வேண்டும் சோம்பலதை,
பகையாம் மடியை ஒழிக்காதே
-பக்க துணையாய்க் கொண்டிருக்கும்
வகையிலாப் பேதை பிறந்தகுடி
-வீழ்ந்தே யழிந்து போய்விடுமே,
தகுதி யில்லா யிவன்தனக்குத்
-தானே சாவு வருமுன்னே…!
லிமரைக்கூ…
அழிந்திடும் முதலிலவன் குடி
அறிவிலா சோம்பேறி அழியுமுன்னே,
காரணமவன் அழிக்காதுவிட்ட மடி…!
கிராமிய பாணியில்…
அழிச்சிடு அழிச்சிடு சோம்பல அழிச்சிடு
அழிவத் தருகிற சோம்பல அழிச்சிடு…
அழிவத்தரும் சோம்பல அழிக்காம
அதுனோடயே வாழுகிற
அறிவுகெட்ட சோம்பேறி
அழிஞ்சிபோவு முன்னாலே,
அழிஞ்சிபோவும்
அவன்பொறந்த குடியெல்லாமே…
அதுனால
அழிச்சிடு அழிச்சிடு சோம்பல அழிச்சிடு
அழிவத் தருகிற சோம்பல அழிச்சிடு…!