நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்க இல்லினாய் மாநில சிகாகோ நகரின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான எல்ஜினில் கருணை வடிவான க்ரெக் ஷில்லெர் என்பவர் சென்ற வாரம் கடுமையான குளிர் நிலவியபோது வீடற்ற ஏழைகளைத் தன் வீட்டின் அடிமட்டத் தளத்தில் (basement) தங்குவதற்கு அனுமதித்தார்.  சென்ற வாரமும் இப்போதும் நிலவிவரும் குளிர் சாதாரணமானதல்ல. பல வருடங்களின் ரிக்கார்டை மாற்றியிருக்கும் குளிர்.  உடம்பின் எலும்புகளைக்கூட துளைக்கும் குளிர்.  அமெரிக்காவில் வீடற்றவர்கள் இருக்கிறார்களா என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்.  இந்தியாவில்போல் எப்போதுமே தெருவில் குடியிருப்பவர்கள் அமெரிக்காவில் குறைவு.  இப்படி வீடற்றவர்களில் பலர் நிரந்தரமாக வீதிகளில் குடியிருப்பவர்கள் இல்லை.  எல்ஜினில் வாழும் 1,10,000 பேரில் 100 பேர்தான் இப்படித் தற்காலிக வீடற்றவர்கள்.  இவர்களில் சிலர் சிறைக்குச் சென்றுவிட்டு விடுதலையாகித் திரும்பும்போது அவர்கள் தங்குவதற்கு உறவினர்கள் யாரும் இல்லாமல் இருக்கலாம்; அல்லது அவர்கள் போதைப் பொருள் உபயோகத்திற்கு அடிமையாகி அதனால் வேலையை இழந்து அதனால் வாழ்வாதாரத்தை இழந்து தற்காலிகமாக இரவு தங்குவதற்கு இடம் இல்லாமல் இருக்கலாம்; அல்லது அவர்கள் பார்க்கும் வேலையில் கிடைக்கும் பணத்தில் வீட்டு வாடகையும் கொடுத்து மற்றச் செலவுகளையும் சமாளிக்க முடியாமல் இருக்கலாம்.

இவர்கள்தான் வீடற்றவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.  இப்படி இரவில் தங்க இடம் இல்லாதவர்களுக்குப் பெரிய நகரங்களும் சிறிய நகரங்களும் இரவில் தங்கத் தங்குமிடங்கள் (shelters)  கட்டிக் கொடுத்திருக்கின்றன.  ஆனால் வீடற்றவர்களில் சிலர் இங்கு தங்கப் பிரியப்படுவதில்லை.  அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.  இரவு பத்து மணிக்கு அந்த விடுதிகளின் கதவுகள் மூடப்பட்டுவிடும்.  அதன் பிறகு வருபவர்களுக்கு அவை திறக்கப்படுவதில்லை.  மேலும் அங்கு போதைப் பொருள்கள் சாப்பிடுவது, மதுபானங்கள் குடிப்பது ஆகியவை தடைசெய்யப்படுகிறது.  சிலர் அங்குள்ள நடைமுறை விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை விரும்புவதில்லை.

இவர்களுக்கு இரவில் தங்க இடம் கொடுத்த ஷில்லரை எல்ஜின் ஊராட்சி கண்டித்திருக்கிறது; இந்தச் சேவையை நிறுத்தவும் ஆணை இட்டிருக்கிறது.  அவர் வீட்டின் அடிமட்டத் தளத்தில் தேவையான வெளிச்சம் இல்லையென்பதும் தீ விபத்து போன்ற சமயங்களில் (அமெரிக்காவில் வீடுகள் மரத்தால் கட்டப்பட்டவை; எளிதாகத் தீப்பற்றிக்கொள்ளும் தன்மை உடையவை) தப்புவதற்குத் தேவையான வாசல்கள் இல்லையென்பதும் ஊராட்சியின் கண்டனத்துக்குரிய காரணங்கள்.

‘ஷில்லருக்கு மிகவும் இளகிய மனம்.  அதை மறுப்பதற்கில்லை; அதை நாம் போற்ற வேண்டும்.  ஆனாலும் சில விதிகளை அவர் மீறியிருக்கிறார்.  அதனால் அவர் வீடற்றவர்களை இரவில் தன் வீட்டில் தங்கவைப்பதை நாம் தடுத்தே ஆக வேண்டும்.  மேலும் நகரில் மூன்று விடுதிகள் இருக்கின்றன.  அவை சட்டத்திற்குட்பட்டவை’ என்று ஊராட்சி அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.  அமெரிக்காவில் மனிதர்கள் தங்குவதற்குச் சில சட்ட திட்டங்கள் இருக்கின்றன.  பல அளவுகளிலான அப்பார்ட்மென்ட்களில் எத்தனை பேர் தங்கலாம் என்பதற்கு வரைமுறைகள் இருக்கின்றன.  அதேபோல் மேலே குறிப்பிட்ட வகையான விடுதிகள் எங்கு கட்டப்பட வேண்டும், எப்படிக் கட்டப்பட வேண்டும் என்பதற்கும் விதிகள் இருக்கின்றன.  இந்த விதிகளைப் பின்பற்றாத வீடுகளில் மனிதர்களைத் தங்கவைப்பது சட்டத்திற்குப் புறம்பானதாகக் கருதப்படுகிறது.

பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம், தனிமனித சொத்துரிமைகள் ஆகியவற்றிற்காகப் போராடும் ஒரு வழக்கறிஞர் ஊராட்சி தன் வரம்பிற்கு மீறி ஷெல்லர் விஷயத்தில் தலையிட்டிருக்கிறது என்று நினைக்கிறார்.  ‘ஷில்லர் வீடற்றவர்களுக்கு உதவ விரும்புகிறார்.  வீடற்றவர்களுக்கு இரவில் தங்குவதற்கு இடம் தேவைப்படுகிறது.  இதில் தலையிட ஊராட்சிக்கு உரிமை இல்லை’ என்று வாதாடுகிறார்.  ‘உதவி தேவைப்படும் அவசர காலங்களில் மட்டும்தான் ஷில்லர் தன் வீட்டில் இவர்களுக்கு அடைக்கலம் தருகிறார்.  ஆண்டு முழுவதும் இதைச் செய்வதில்லை’ என்கிறார் அவர்.  உண்மை நிலையை உணராது விதிகளைத் திணிப்பது அவ்வளவு சரியல்ல என்பதும் இவரது அபிப்பிராயம்.

ஷில்லர் ஏற்கனவே மற்றவர்களோடு சேர்ந்து ‘மேத்யூ 25:40’ என்ற அவசரகால விடுதி ஒன்றைத் திறந்திருக்கிறார்.  பைபிளின் புதிய ஏற்பாட்டின் மேத்யூ 25:40-இல் ‘என் சகோதர, சகோதரிகளுக்கு நீங்கள் செய்யும் எந்த உதவியும் எனக்குச் செய்ததற்குச் சமம்’ என்று யேசு கூறியிருப்பதன் அடிப்படையில் இந்த விடுதிக்கு மேத்யூ 25:40 என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் வெப்பநிலை பாரன்ஹீட் 15 டிகிரிக்குக் கீழ் சென்றால்தான் இந்த விடுதி திறக்கப்படும்.  ஷில்லர் வெப்பநிலை 15 டிகிரிக்குக் கீழே செல்லும்வரை தன் வீட்டில் இவர்களுக்கு இடம் கொடுக்கக் காத்திருப்பதில்லை.  15 டிகிரிக்கு மேலேயும் குளிரைத் தாங்க முடியாது என்பது இவருடைய வாதம்.  ‘என்னுடைய வாழ்வாதாரத்திற்கு நான் மெக்கானிக் வேலை பார்த்தாலும் என் உள்ளம் இந்த வீடற்றவர்களுக்கு உதவுவதைத்தான் விரும்புகிறது’ என்று ஒரு வானொலிப் பேட்டியில் கூறியிருக்கிறார் 53 வயதான ஷில்லர்.

‘நான் இரவில் தங்க இடம் கொடுத்து உதவுபவர்கள் எல்லாம் என் நண்பர்கள்.  இதை நான் ‘சினிமா இரவுகள்’ என்று அழைப்பேன்.  அப்போது அவர்களுக்கு நான் சூடான பானங்கள், தின்பண்டங்கள் வழங்குவேன்.  அதிக பட்சம் 15 பேர் தங்கியிருந்திருக்கிறார்கள்.  அவ்வப்போது அவர்களை நான் கவனித்துக்கொள்வேன்’ என்கிறார் ஷில்லர்.  (அமெரிக்காவில் நண்பர்கள் சேர்ந்து இரவில் சினிமா பார்ப்பது வழக்கம்.  இதை movie nights என்பார்கள்.)   தன் வீட்டில் வீடற்றவர்களைத் தங்கவைப்பதற்கு முன் தன்னுடைய கார் ஷெட்டில் இவர்களைத் தங்கவைத்திருக்கிறார்.  தேவையான ஹீட்டர் வசதிகள் எல்லாம் செய்துகொடுதிருக்கிறார்.  ஒரு முறை ஒருவருக்கு இருதய வலி ஏற்பட்டு அவசர மருத்துவ உதவியை நாட வேண்டியதாயிற்று.  அப்போது வீட்டுக்கு வந்த அந்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்ததால் அப்போதைக்கு கார் ஷெட்டில் அவர்களுக்குத் தங்க இடம் கொடுப்பதை நிறுத்த வேண்டியதாயிற்று.  இப்போது இவர் வீட்டில் அவர்களைத் தங்கவைப்பதைப் பற்றியும் யாரோ புகார் கொடுத்திருக்கிறார்கள்.  அவர்கள் தன்னுடைய பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்கிறார் ஷில்லர்.  தனக்கு வேண்டாதவர்கள் செய்த வேலை இது என்கிறார்.

மனிதனின் மனதில் ஊற்றெடுக்கும் இம்மாதிரியான இரக்க உணர்வுகளுக்கும் – இவை மனிதர்களால் வியந்து பாராட்டப்பட்டாலும் –  அரசு விதிக்கும் விதிகளுக்கும் – இவையும் மனிதர்களால் மதிக்கப்பட்டாலும் – இடையே மோதல் ஏற்படுவதுண்டு.  இம்மாதிரி சமயங்களில் சிலவற்றில் நீதிமன்றங்கள் தலையிட்டு இரண்டில் எது மனித நலத்திற்குச் சிறந்தது என்று தீர்மானிக்கும் உரிமையைப் பெறுகின்றன.

ஷில்லர் தன் வீட்டின் அடிமட்டத் தளத்தில் வீடற்றவர்களைத் தங்கவைப்பது தடைசெய்யப்பட்ட பிறகு ஊராட்சி அதிகாரிகளும் ஷில்லரும் சந்தித்து வீடற்றவர்களுக்கு இரவில் மிகக்குளிர் காலத்தில் தங்க வசதிசெய்து கொடுப்பது பற்றி பல விவாதங்கள் நடத்தினர்.  காவல்நிலையங்களின் வராந்தாக்களில் அவர்களைத் தங்கவைப்பது பற்றியும் ஒரு யோசனை இருக்கிறது.  தன்னுடைய உரிமைகளில் தலையிடுவதாகக் குறைகூறி ஊராட்சியின் மீது வழக்குத் தொடுப்பதாக இருந்த ஷில்லர் இப்போதைக்கு அந்த யோசனையைக் கைவிட்டுவிட்டார்.  ‘ஊராட்சியின் விதிகளை நான் மதிக்கிறேன்.  ஆனால் சில நேரங்களில் சில விதிகளைக் கொஞ்சம் தளர்த்தலாம் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்’ என்கிறார் ஷில்லர்.

இல்லினாய் மாநில எல்ஜின் நகரில் இப்படி நடந்துகொண்டிருக்க, நியூயார்க் நகரில் யாருக்கும் தெரியாமல் கேண்டிடோ அர்கேஞ்சல் என்பவர் ஒரு விடுதியை நடத்தி வருகிறார்.  ஷில்லர் வீட்டின் அடிமட்டத் தளத்தில் விடுதி இரவு பத்திலிருந்து காலை எட்டு மணிவரை திறந்திருக்கும் என்றால் இவருடைய கடையின் அடித்தளத்தில் 24 மணி நேரமும் வீடற்றவர்கள் தங்கலாம்.  ஒரே ஒரு கண்டிஷன்.  இரவு பத்து மனிக்குக் கடையை மூடிவிட்டால் அதன் பிறகு யாரும் உள்ளே வர முடியாது.  வேண்டுமானால் வெளியே போகலாம், ஆனால் மறு நாள் எட்டு மணிக்குக் கடை திறக்கும்வரை உள்ளே வர முடியாது.  (அமெரிக்காவில் பல கட்டடங்களில் கதவை சாவி இல்லாமல் உள்ளேயிருந்து திறக்கலாம்; ஆனால் வெளியேயிருந்து திறக்க முடியாது.) பக்கத்து பார்க்குகளில், தெருக்களில் தங்க இடம் இல்லாமல் இருந்தவர்களை இவர் தன் கடையின் அடிமட்டத் தளத்தில் தங்கவைத்திருக்கிறார்.  இதில் பல மன நோயாளிகளும் சிறை சென்று மீண்டவர்களும் உண்டு.  இவர் இப்படிச் செய்வதற்கு முக்கிய காரணம், அவர் சொல்வதுபோல், இவரிடம் வசதி இருக்கிறது, அவர்களிடம் இல்லை.

டொமினிகன் ரிபப்ளிக் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் அர்கேஞ்சல்.  ஒரு கால்பந்து ஆட்ட வீரராக வேண்டுமென்று விரும்பி பல ஆட்டங்களில் கலந்துகொண்டார்.  ஆனால் ஒரு முறை தோள்பட்டையில் அடிபட்டு ஆட முடியாமல் போன பிறகு 1989-இல் அமெரிக்காவிற்கு வந்துவிட்டார்.  டீம்களில் பல தரப்பட்ட பையன்களோடு விளையாடியபோது ஒருவருக்கொருவர் உதவுவதன் அர்த்தத்தை நன்றாகப் புரிந்துகொண்டதாகக் கூறுகிறார்.  இது ஒவ்வொருவரும் சமூக நலனுக்காகச் செய்ய வேண்டிய காரியம் என்கிறார்.

அமெரிக்காவிற்கு வந்த பிறகு நியுயார்க் நகரில் ஒரு சிறிய கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.  சாமான்களை ஷெல்புகளில் அடுக்குவது, காலை உண்விற்காக சாண்ட்விச் தயாரிப்பது என்று ஆரம்பித்து பதினான்கு வருடங்களில் அந்தக் கடையையே விலைக்கு வாங்கினார்.  கடையை வாங்கும் முன் இலவசம் கேட்டு வருபவர்களைக் கடையில் தங்கவைக்கலாமா என்று தன் முதலாளியிடம் கேட்டபோது, ‘எப்போதுமா, உனக்கு என்ன பைத்தியமா?’ என்று கேட்டாராம் இவருடைய முதலாளி.  கடையை வாங்கிய முதல் மாதத்திலேயே வீடற்ற ஏழை ஒருவரை தன் கடையில் தங்குமாறு இவர் அழைத்தாராம்.

எப்போதும் பத்துப் பேராவது இவர் கடையின் அடிமட்டத் தளத்தில் தங்கி இருப்பார்களாம்.  அடிமட்டத் தளத்தின் தரை கரடு முரடாக இருப்பதால்  சாமான்கள் கட்டிவரும் அட்டைகளைப் படுக்கைகளாக உபயோகிக்கிறார்கள். ஒரு தெருவில் கிடந்த பெரிய தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று, தேவையென்றால் உணவைச் சூடுபடுத்திக்கொள்ள ஒரு சிறிய மின்சார அடுப்பு, விளக்குகள் இவைதான் அங்குள்ள சாதனங்கள்.  இதற்காகும் மின்சாரக் கட்டணமான 400 டாலரை அர்கேஞ்சல் செலுத்துகிறார்.   மூலையில் ஷவர் போன்ற ஒரு சாதனம்.  இந்த வசதிகளோடுதான் அங்கு தங்கியிருப்பவர்கள் நாட்களைக் கழிக்கிறார்கள்.  அங்கு வசிப்பவர்களிடம் அவர் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை.

நிறைய வசதிகள் அற்ற இந்த இடத்தில் தங்குபவர்களுக்கு இதைத் தற்காலிக இடமாகத்தான் அர்கேஞ்சல் கருதுகிறார்.  தினமும் காலையில் கடை திறந்ததும் அங்கிருப்பவர்களை வெளியே போய் வேலை தேடும்படி ஊக்கப்படுத்துகிறார்.  ‘பறவைகள்போல் வெளியே பறந்து செல்லுங்கள்.  உங்கள் வாழ்க்கையை நீங்களே அமைத்துக்கொள்ளும் வழி புலப்படும்.  நான் இறந்த பிறகு எங்கு போவீர்கள்?’ என்கிறார் அவர்களிடம்.  சிலர் அவருடைய இந்த யோசனையைப் பின்பற்றாவிட்டாலும் சிலர் அதைப் பின்பற்றி வேலை தேடிக்கொண்டு இவரைத் தேடிவந்து தங்கள் புதிய வாழ்க்கையைப் பற்றி இவரிடம் கூறுகிறார்கள்.

அர்கேஞ்சல் கடையில் தங்கியிருப்பவர்களுக்கு வெளியில் கிடைக்காத ஒன்று இங்கு நிறையக் கிடைக்கிறது: அது அன்பு கலந்த கருணை.  நியுயார்க் மாநகர ஊழியர்கள் இவரைக் கண்டுகொள்ளாதவரை இவர்களுக்கு இது கிடைத்துக்கொண்டே இருக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.