-டாக்டர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி

 “சமூகம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நீண்ட காலமாக ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக மக்கட்கூட்டமாக ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பு. தம் தேவைகளைப் பெறுவதற்காக மக்கள் தங்கள் உறவுகள் இவை என்று முடிவுசெய்து அவை நடைபெற வேண்டிய வழிகளைப் பற்றிய விதிகளை வகுத்துக் கொள்கின்றனர். அவை பொருளாதார அமைப்பு, கல்வி, கலை, சமயம், பொழுதுபோக்கு, சட்டம், சமயச் சடங்குகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் அமைந்து சமூகத்திற்கு நிலைபேற்றை அளிக்கின்றன”என்ற சமூகப் பார்வையுடன் திணைசார் மக்கள் கூட்டத்தின் தொகுதியாகிய சங்ககால மக்கள் வாழ்வியல் பதிவுகளில் பெண்களின் நிலைப்பாடு சுட்டப்பட்டுள்ள சான்றுகளின் வழி அறியவேண்டியதாகின்றன.கலைக்களஞ்சியம் – தொகுதி 4 – தமிழ்வளர்ச்சிக் கழகம் – சென்னை – பக். 477-47.

காதலானாலும் சரி, காமம் ஆனாலும் சரி கடைசிக் காலம் வரை ஆண்மகனுக்காகவே பிறந்து அவனுக்காகவே அவன் பொருட்டே வாழ்ந்து அவனுக்குள்ளாகவே அடக்கமாகிய பெண்ணைத் தான் சங்க இலக்கியம் காட்டப் போகிறதோ எனும் ஊகத்தினோடே உங்களை அழைத்துச் செல்கிறேன் நேயர்களே! கணவனுக்காக மட்டுமே தன்னை அலங்காரம் செய்துகொண்டு அவனது நலத்திற்காகவே வழிபட்டுச் சாவதற்கு நான் அஞ்சவில்லை. செத்தால் அடுத்த பிறவியில் வேறு ஒருத்தி பிறந்து உன்னோடு சேரமுடியாது போய்விட்டால் என் காதலனை என்னால் எப்படி மறக்கமுடியும் என்று ஒரே காதல் கணவனுக்காக ஏங்குபவளாகவே காணப்படுகிறாள்.

இம்மைமாறி  மறுமையாயினும்;
நீயாகியர்  என்  கணவனே
யானாகியர் நின்  நெஞ்சுநேர்பவளே”(குறுந்.49)     என்ற குறுந்தொகைப் பாடல்              எத்தனை      பிறவி              எடுத்து வந்தாலும்              உன் மனத்துக்குப் பிறந்தவளாக நான் மட்டுமே இருக்க வேண்டும் என்று பெண்களின் தீராத்தாகத்துடன் திகழ்ந்த மனத்தைக் காட்டுகிறது.

கணவன்       மறுமணம்   புரிந்தபொழுதும்   அவனை              வாழ்த்தி வரவேற்றிருக்கிறாள். பரத்தமையை அவன் நாடியபோதும் வசை பாடாமல் கடவுள் கற்புத்தன்மையால் ஏற்றுக் கொண்டிருந்திருக்கிறாள். அப்படி இல்லாமல் எதிர்த்துக் கேள்வி கேட்டால் குடும்பப் பெண்ணுக்குத் தகாது என்பதும் அச்செயல் அவர்களுக்கு வறுமையை உருவாக்கும் என மூட நம்பிக்கையால் முடக்கப்பட்டிக்கிறாள். தனக்காகத் தன் காதலனைக் கடிந்துரைப்போரை              அதற்காகவே           தடுத்தும் இருக்கிறாள். தலைவனுக்குப்  பழி     நேராதவாறு             அவனது பரத்தமை ஒழுக்கத்தைப் பிறருக்கு மறைக்க முயல்வதும் அவள் இல்லறக் கடமைகளுள் ஒன்றாகவே மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. ஐங்குறுநூறு             –  292:2-5;
குறுந்தொகை–  252ஆம்   பாடல்; அகநானூறு 316-10-117.

மனைக்கு விளக்கம் மடவாள் என்பதற்கேற்ப சங்ககாலப் பெண்களின் இல்வாழ்க்கை, குடும்ப நலன்முன்னிறுத்தியே செயல்கள் அமைந்திருக்கின்றன.

”விருந்து எதிர்கொள்ளவும் பொய்ச்சூள் அஞ்சவும்
அரும்பெறல் புதல்வனை முயங்கக் காணவும்
 ஆங்கு அவிந்து ஒழியும் என் புலவி தாங்காது
 அவ்வவ் இடத்தான் அவை அவை காண
பூங்கண் மகளிர் புனைநலம் சிதைக்கும் மாய மகிழ்நன் பரத்தமை நோவென்     தோழி கடன்நமக்கு எனவே”(கலி.75-27) என்று கலித்தொகைத் தலைவி மேற்சொன்னவை அனைத்தையும் ஆமோதித்துத் தன் தோழியிடம் புலம்பித் தீர்த்திருக்கிறாள் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது. சிறு பருவத்திலேயே பெண்கள் இல்லப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். வீட்டுக்குத் தேவையான தண்ணீரைக் கிணறு, ஆறு, குளங்களில் எடுத்துவரல், வீட்டுத் தோட்டம் அமைத்தல், உணவுப் பொருள் தொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துள்ளனர். குறிஞ்சி நிலப்பெண்கள் தினைப்புனக் காவல்புரிந்துள்ளனர். விளைந்த திணையைப் பாதுகாத்துக் காயவைத்துச் சேமித்தும் வைத்தனர். தன் தந்தை தமையன்மார் வேட்டையாடிக் கொண்டுவந்த விலங்குகளின் ஊனினைப் பாதுகாத்து எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கேற்ப பக்குவப்படுத்தி வைத்தார்கள். இவ்வேலைகளினூடே தம் காதலையும் வளர்த்துக் கொண்டார்கள். நற்றிணை – 134-3-6, குறுந்தொகை – 335-1-2, ஐங்குறுநூறு – 365-1.3.

முல்லை நிலப்பெண்கள் வீடுகளில் உள்ள கறவைப் பசுக்களிடம் தீம்பால் கறந்து கன்றுகளை அவற்றிற்குரிய தாம்புகளில், கழிகளில் பிணைத்து அவற்றைப் பாதுகாத்திருக்கிறார்கள். மாடுமேய்த்தல் தொழிலையும் செய்திருக்கிறார்கள் என்பதை முல்லைக் கலியில் கலித்தொகைப் பாடல் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. கூடுதலாக நாள்தோறும் தயிர்கடைந்து மோராக்கி அதனைப் பிறநிலங்களுக்கு எடுத்துச் சென்று விற்றுப் பொருளீட்டி வீட்டின் பொருளாதாரத்தை மேம்பாடடையவும் செய்துள்ளனர். (கலித்தொகை – 111, 116).

மருதநிலப் பெண்கள் விதைத்த போது உடனிருந்து களையெடுத்து விளைந்த கதிர்களைப் பறவைகள் பற்றிச் செல்லாது காத்துப் பின் அறுத்துஇடித்து அரிசியாக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார்கள் என்று அகநானூறு காட்டுகிறது. பூவிற்ற பெண்களையும் நற்றிணையில் இடம்பெறச் செய்துள்ளனர். அகநானூறு–145-16-19,  நற்றிணை  –  97-6-9.

நெய்தல் நிலப்பெண்கள் கடல்மேற் சென்றவர் வரும்வரைக் காத்திருத்தல் இரங்குதலாக இருந்தபோதும் ஆடவர் கரைவரும்போது கொண்டு வருகின்ற மீன்களைப் பிற இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்றல், விற்றதுபோக மீதம் உள்ள மீன்களை உணக்கல், அதாவது உலரவைத்து கருவாடு        தயாரித்தல், உப்புவிளைத்தல்,         விளைந்த உப்பை நெல்லாகப் பண்டமாற்று              வியாபாரம் செய்தல் ஆகியன அவர்களின் முதன்மைப் பணிகளாக விளங்கின.

நானிலத்தும் வாழ்ந்த பெண்கள் தம் தந்தையர், கணவர், தமையன்மார் ஆகியோருக்குப் பணியின் இடையே உணவுகொண்டு போய்த் தருதலையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கலித்தொகை – 108-31-32, அகநானூறு – 60-1-6. ஆதரவற்றோருக்  காதரவளித்த செய்தியை,

“கறை பட்டு  வந்த  நம்  சேரியின்  போகா
முடமுதிர்  பார்ப்பானைத் தோழி!நீ போற்றுதி என்றி”                        (கலி. 65: 7-9) என்பதாகக் கலித்தொகைப்பாடல் உணர்த்துகிறது.

உடன்போக்கில் பிரிந்த   மகளை மருமகன் வீட்டில் சென்று காணும் பொறுப்பு தாய்            அல்லது செவிலித்தாய்க்கே இருந்துள்ளது. எனவே பிள்ளைகளின் நடத்தை, திருமணம் முதலானவற்றைக் கவனிக்கும் முழுப்பொறுப்பும் தாய்க்கே இருந்திருக்கிறது. இத்தன்மை தாய்வழித் தலைமையின் ஓர் எச்சமாக விளங்குவதாகக் கொள்ள முடிகிறது.

முதுமை         அடைந்த       பெண்கள்              இறைவழிபாடு,      விரிச்சிகேட்டல், சகுனம் பார்த்தல்   போன்றவற்றை              நம்பிக்கையுடன் மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். வீட்டில் உள்ள இளஞ்சிறார்களைப் பாதுகாப்புடன் புறத்தே வழிபாடு போன்றவற்றிற்காக அழைத்துச் சென்றும் வந்துள்ளனர். மதுரைக் காஞ்சி – 460-467. வயது முதிர்ந்த பெண்டிரைப் பாதுகாக்கும் பொறுப்பு அவள் மகனுக்கு உரித்தாகியது என்பதைப் புறநானூறு(159-1) சுட்டிக்காட்டுகிறது. யாரும் இல்லாத போது தம் முயற்சியில் தானே பொருளீட்டியும் வாழ்வு நடத்தியிருக்கிறாள் பெண்.

“பெரும்  பின்னிட்ட  வால்நரைக்  கூந்தலர்
  நன்னர் நலத்தர்    தொன்முது  பெண்டிர்……   
 தாம் வேண்டு  பண்ணியம்
 கமழ் நறும்பூவோடு மனைமனை மறுக”(மது.கா. 408)

 என மதுரைக் காஞ்சி குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. “பெண்டிரும் தம் பதம் கொடுக்கும்”(புறம்.151-5) என்று புறநானூறும் குறிப்பிடுகிறது. “அவளை மாறி யாம் வரும் செல்வம் எம் கேள்வன் தருமோ”என எதிர்வாதாடிப் பொருளீட்டிய நிலையும் இருந்துள்ளது. கலித்தொகை – 106, 44-45.

கள்ளினைக் காய்ச்சித் தயாரிப்பதையும் விற்பதையும் பணியாகக் கொண்டவர்கள் அரியற் பெண்டிர் என அழைக்கப்பட்டனர். கள்ளடு மகளிர் எனப் பெரும்பாணாற்றுப் படையில்(339) குறிப்பு வருகிறது. பிறர் ஆடைகளைத் தூய்மைசெய்யும் பணியையும் பெண்களே மேற்கொண்டிருந்தனர். இவர்கள் புலத்தியர் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் தூய்மை செய்த ஆடைக்குக் கஞ்சி போட்ட குறிப்புச் செய்தியும் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

சங்க  காலத்திலேயே    சுயஉதவிக்குழுக்கள்              இருந்துள்ளன.         பிறரை மகிழ்வித்தலை              நோக்கமாகக்          கொண்டு      செயல்படும்              விறலி, பாடினி போன்றவரைத் தொழில் மகளிர் என்றே கூறலாம். இவர்களைத்தாம் பிறபெண்டிர் போல் தனித்துப் பணியாற்றாது குழுவினருடன் இணைந்து வினையாற்றியிருக்கிறார்கள். ஆனால் தலைமைப் பொறுப்பு ஆடவரைச் சார்ந்ததாகவே உள்ளது. மலைபடுகடாம் – 568-570. குற்றேவல் மகளிர் செல்வந்தர் இல்லங்களில் வேலை பார்த்துள்ளனர். அரண்மனைப் பணி, அந்தப்புரக் காவல் இவற்றையும் மகளிரே மேற்கொண்டனர்.

“பீடு கெழு  சிறப்பிற்  பெருந்தகை  அல்லது
  ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்”(நெடு.வா.106-107).

என்ற நெடுநல்வாடைப்  பாடல்வரி     அதனை உறுதிப்படுத்தி நிற்கின்றது. சங்கச்    சமூகம்              பெண்மைக்குப்      பல      ஏற்றங்களையும் வழங்கிச் சிறப்பித்துள்ளது.    பெண்             மகவு, பெண்             குழந்தை       மிக்க விருப்பத்துடனேயே              ஏற்றுக்            கொள்ளப்பட்டுள்ளது.      நல்ல வேளையாக கள்ளிப்பால்            சம்பவங்கள்              ஏதும்  நிகழ்ந்ததாக சான்றுகள் இல்லை. சிறுகுடி நல்கூர்ந்தார் செல்வ மகள்”என்றே  கலித்தொகை பெண்பிறப்பைப்  கொண்டாடி மகிழ்ந்துள்ளது.              குறிப்பிட்ட வயது அல்லது பருவம் வரும் வரைப் பெண் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி ஊஞ்சலாடியும், அம்மானை பாடியும், கழஞ்சாடியும் விருப்பம் போல் ஆடிப்பாடிக் களித்துள்ளனர். நீராடல், மலைவளம், சோலைவளம் காணல் முதலானவற்றில் ஆண்களுக்குச் சமமாக மட்டும் அல்லாமல் இணைந்தும் இன்பம் நுகர்ந்து மகிழ்ந்துள்ளனர். பரிபாடல் – 10,19, கலித்தொகை – 27, புறநானூறு -243, குறுந்தொகை – 3. விரும்பிய பெண்ணை மணப்பதற்குத் தடைகள் வந்த போதிலும் தந்தையுடன் சேவகனாகப் பணிபுரிந்தேனும் அவன் மகளை மணந்து கொள்ள முயன்ற செய்திகள் நகைபட விளங்குகின்றன.

ஆய்தொடிக் குறுமகள் வேண்டும் பொருளைக் கலம்நிறையக் கொண்டுவந்து உன்வீட்டாரிடம் தந்து மணம் முடிப்பேன். மறுத்தால் நான் என் வீடு, சுற்றம் இவற்றை விட்டு நீங்கி உன் தந்தையுடன் அவன் அளத்தில் உப்பு உழுவேன். பெரிய நீர்க் குட்டத்தில் அவன் கீழ்ப்பணிவேன். அவன் இட்ட பணியைச் செய்தேனும் உன்னைப் பெறுவேன் என்று பெறுவதற்காக ஆண் தன்னைத் தாழ்த்தி இரங்கி வருதலும் ஒரு வகையில் பெண்ணை மதிப்புடைய நிலையில் வைத்திருந்தமையையே காட்டி நிற்கின்றது.

திருமணச்    சடங்குகளில்            பெண்களே              பங்கேற்றுள்ளனர்.              ஆயினும் புதல்வன் பெற்ற மங்கல மகளிர்க்கு மட்டுமே இச்சடங்கின் போது பங்கேற்கும் உரிமை உண்டு எனும்போது ஒருவகையில் பெண்குழந்தை பெற்றவள் இரண்டாம் நிலையில் தான் வைக்கப்பட்டாள் என்பதையும் காட்டுகிறது. அகநானூறு – 86-7-20.

பதிற்றுப்பத்தின் பழைய உரையில் ஒரு குறிப்பு இடம் பெறுகிறது. அதாவது சேர மன்னர்களைக் குறிக்கும் போது “ஆன்றோள் கணவ, திருந்திய இயன்மொழித் திருந்திழை கணவ, ஒடுங்கீர் ஓதிக் கொடுங்குழை கணவ”என அவரது உரிமைமகளிராம் தேவியரும் சேர்த்துச் சுட்டப் பெறுகிறார்கள். இவ்வாறு சேர்த்துப் பாடப்பட்டதால் பெண்மை பெருமைப் படுத்திவிட்டார்கள் என எண்ணிவிடவேண்டாம். “மகளிரைச் சார்த்து வகையால் பாடுதலின்றித் தனித்துப் பாடுதல் மரபு அன்று. ஆதலில் இங்கே சேரனொடு சார்த்தி அவன் மாதேவியைச் சிறப்பித்தார்”என்ற குறிப்பு தனித்துப் பாராட்டப் படமாட்டாள் பெண். முழுவதும்    புறக்கணிக்கப்படாமல் உரிமை ஆடவருடன் இணைத்தாவது பாராட்டுப் பெற்ற நிலையை பெண் மதிப்புடனே இருந்துள்ளாள் என்பது விளங்குகிறது. பதிற்றுப்பத்தில் மட்டும் சிறப்பாக ஒரு விளக்கம் காணப்படுகிறது. அதாவது மன்னனைக் குறிப்பிடும்போது சேரமன்னனின் மகன் என்று மட்டும் கூறாது “ஆராத்திருவில் சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்றமகன்”(பதிற்.4ம்பத்து, பதிகம்-1-3) எனத் தாயையும் முன்வைத்து அறிமுகம் செய்தலும் பதிவாகியுள்ளது. அரசனை வாழ்த்தும் போது “வேயுறழ் பணைத்தோள் இவளோடு ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே”(பதிற். 21,37-38)எனவும் அவன் தேவியயோடு இணைந்து வாழ்தலையும் எண்ணியே வாழ்த்தியுள்ளனர். மற்றோர் இடத்து அரசன் தாயை,
“வயிறு மாசிலியர் அவன் ஈன்றதாயே”(பதிற்.20,27)எனவும் போற்றியுள்ளனர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மீது பதிற்றுப்பத்துள்ஆறாம்பத்து பாடிய காக்கைபாடினியார் நச்சௌ்ளையார் அதற்காக அணிகலனுக்கு என்றுஒன்பது துலாம்பொன்னும் நூறாயிரம் பொற்காசும் பரிசாகப் பெற்றுள்ளார். இச்சம்பவம் பெண்பாற் புலவர்களும் ஆண்பாற் புலவர்களைப்போலவே ஒன்றாகவே பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறனர். சங்ககாலச்              சமூகப்பெண்கள் நிலையினை சங்க கால              வாழ்வியல் எனும் நூலாசிரியர் ந. சுப்பிரமணியர்பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

“அக்காலத்துச் சமுதாயம் பெண்ணுக்கு எவ்வளவு கவுரவமும் பெருமையும் தர உடன்பட்டதோ அதற்கு உட்பட்டுப் பெண் ஆணின் உடைமையாகவே கருதப்பட்டாள்”என்ற அவரின் கூற்று சிந்தனைக்குரியது. திருமணத்திற்கு முன் தழையுடை அணிவதில் பெண்கள் காட்டும் விருப்பம் திருமணத்திற்குப் பின் இல்லை.(நற்றிணை – 123, 3.5) தந்தையில்லாவிட்டால் தமையன்மார் பொறுப்பில் விடப்பட்டு வாழ்ந்துள்ளனர். பொழுது போக்குதல் எனத் தனியே இல்லாது தொழிலும் இணைந்தே இடம்பெற்றிருக்கின்றது.(அகநானூறு – 320, குறுந்தொகை– 335) சமூகம்         தமக்கு            விதித்த கட்டுப்பாடுகளை விரும்பிஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை      “கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே     ஆயமகள்”என்றுதான்              கூறிய வரிகளால் மெய்ப்பிக்கிறாள். மணம் புரிவதற்கும், மாலையிடுவதற்கும், மாட்டை ஏர் பிடித்துக் காட்ட வேண்டும் என்மனத்தில் இடம் பிடித்திடல் போதாதா? என எதிர்கேள்வி கேட்டதாக சுவடே இல்லை.(கலித்தொகை – 103,63-64) கருத்து வேறுபாடு காரணமாகப் பெண்கள் கணவனால் புறக்கணிக்கப்பட்டுப் பெற்றோரிடம் திரும்பியிருக்கலாமே என்று தோன்றும் வகையில் மருதத்திணைப் பாடல் அமைந்துள்ளது.

”தணந்தனை ஆயின் எம்இல்    உய்த்துக் கொடுமோ”(குறுந். 354)என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். தலைவியைப் பிரிய நினைத்தால் எம்மை எங்கள் பிறந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவாயாக எனப் பரத்தையற்பிரிவின் போது கூறியதாக கயத்தூர் கிழான் எனும் புலவர் பாடல் பாடியிருக்கிறார். பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் வேறுபாடு காணப்படுகிறது. முன்னோர் பெயரைப் புதல்வன் மட்டுமே பெறுகிறான். புதல்விக்கு இச்சிறப்பு வழங்கப்பட்டதாக யாண்டும் காணப்படவில்லை. முன்னோரிலும்      மிகுதியும்     தந்தைபெயரே “மேதக்க       எந்தை பெயரால்”(கலி.81:-35)என்று  கலித்தொகையில் போற்றப்படுகின்றதேயன்றித் தாய்க்கு              அவ்வுரிமையோபெருமையோ இருந்ததாகத் தெரியவில்லை.

ஆண்பெண் இருவரும் கருத்தொருமித்துக் காதல் வயப்பட்டு மறைவொழுக்கம் கொள்கையில் பிறர் அறிய நேரிடுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் அது அலராகி, அம்பலமாகிப் பெண்ணுக்கு மதிப்புக் குறைவைத் தருகிறது. இற்செறிக்கப்படுகிறாள். தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறாள். அன்னையிடம் அடிவாங்கும் துன்பமும் அவளுக்கு நேர்கிறது.    ஆனால் ஆணுக்கு அலரினால்இத்தகைய    இடர்பாடுகள் இல்லை கூறப்போனால் அவனுக்கு எவ்விதப் பாதிப்பும் இருப்பதாக ஓரிடத்தும் அறிய முடியவில்லை.(கலி. 105:61-69) (குறுந். 373, 1.3)

தன்னை        விரும்பாத    பெண்ணை            வலிந்து பற்றிக்கொண்டாலும் ஆடவர்க்கு   அது    இழுக்காக    இல்லை. உற்றாரும் ஊரும் ஏதும் கூறுவதில்லை. இதனைப் போலவே பெண்ணை விரும்பியவனும் பெற்றவனும் பெண்ணின் கருத்து என்ன என்பதனைக் கூட அறியாது அவள் கருத்திற்கு இடந்தராது தம்முள் பகை பாராட்டித் திரிந்தும் உள்ளனர். புறநானூறு அதனைப் பதிவு செய்துள்ளது. அப்பாட்டில் தாய் மகளை அழகுடையவளாக வளர்த்தது அறமற்றசெயல் என்று அவளைப் பெற்ற தாய்க்கும் வசைபாட்டு பாடப்படுவது விந்தையே! (நற். 149: 1-5) (புறம். 336).

தன்னை விரும்பாத பெண்ணின் படத்தை வரைந்து பனைமடலால் குதிரை செய்து அதில் ஊர்ந்து கொடியேற்றி ஊரறியச் செய்து வேறு வழியில்லாமல் ஒரு பெண்ணின் அன்பைக் கட்டாயத்தின் பேரில் வேறுவழியே இன்றி வலுக்கட்டாயமாகப் பெறுதலையும் ஆண்கள் செய்திருக்கிறார்கள்.(கலி. 138:8-13, குறுந். 173). களவுக் காலத்தில் இத்தகைய செயல்பாடுகள். கற்புக் காலத்திலோ இன்னுங் கூடுதல்தான். பெண்களுக்கு கற்பொழுக்கம் வலியுறுத்தப்பட்டது. கற்பென்றால் தலைவியின் மனநிறை-மனத்திண்மை,       தலைவன்மீதுகொள்ளும் அன்பு, விருந்தோம்பல், தலைவனின் பரத்தையர் ஒழுக்கத்தைக் கடிந்து அவனைத் திருத்தி ஏற்றுக்கொண்டு குடும்பக்கட்டுக்கோப்பு கலையாமல் காத்தல் என்றெல்லாம் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

மேற்சொன்ன விளக்கங்களால் கற்பெனும் சொல் சமூக அறத்தை வலியுறுத்த எழுந்ததே என அறிய முடிகிறது. இத்தகைய கற்பு வாழ்வு வாழ்வதையே சங்கத் தலைவியர் விரும்பினர் என்று வேறு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து பதிவு செய்கிறார்கள்.

சங்கப் பெண்ணின் உள்ளம் என்னபாடுபட்டு இருக்கும் என்பதை தற்போதைய உளவியல் வல்லுநரும் கணித்துச் சொல்லமுடியாத ஒரு கட்டம். தலைவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டிருப்பானாம்,“தலைவி பூப்பின் புறப்பாடு நாட்களை    முடித்துவிட்டாள்.              அவள் புதல்வனைப்
பெறுதற்குத் தயாராக செவ்வணி அணிந்துள்ளான், புதல்வனைப் பெறுதற்குத் தயாராக உள்ளாள்”(பரி. 9: 20-22)என்று ஏவல் மகளிர் செவ்வணியாடை அணிவகுப்பு நடத்துகிறார்கள். இது பெண்மையை மதிப்பிடுதலா மதிப்புக் குறைத்தலா என்பது ஆழமாக நோக்கத்தக்கது. இந்நிகழ்வு சங்கச் சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு வாரிசுகளைப்பெற்றுத்தரும் கருவியாகக் கருதப்பட்டார்களோ என்ற எண்ணத்தை எழுப்புகிறது.(பொரு. 85-89).

ஆனாலும், இந்த ஒரு சான்று தவிர வேறு சங்கப் பாடல்களில் இந்நிகழ்வு மீளவும் சுட்டப் படாமையால் இவ்வழக்கம் அக்காலத்திலேயே கடியப் பட்டிருக்கவேண்டும் என்ற உறுதியையும் கூடவே தருகிறது.

பெண்கள் ஆண்களின் போகப் பொருளாகவே பெரிதும் கருதப்பட்டார்களோ என்ற ஐயம் எழுகிறது. புலவர் தனக்குப் பொருள் வழங்கிய புரவலரை வாழ்த்தும் போது,

“விலங்கிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
 மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்
 மகிழ்ந்து இனிது உறைமதி பெரும
விரைந்து நீ  பெற்ற நல்லூழியையே”(மது.கா.778-781)

என்று வாழ்த்தியிருப்பது மிகவும் சிந்தனைக்கு உரியது. ஆடவரின் களியாட்டிற்குப் பெண் கள்ளெடுத்துஉதவுதல் இயல்பான ஒன்றாகவே காட்டப்பட்டுள்ளது. ஆங்காங்கே காணப்படுகிற பெண்ணைப் பற்றிய எல்லை மீறிய வருணனைகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன.(பொரு. 6-8,       35-41).

ஆணின் பலதார மணத்தைச் சமூகம் பாராட்டி ஏற்றுக் கொண்டுள்ளது. அவ்வாறு அவனது வாழ்வில் நுழைந்த பெண்களுக்கு இல்லக் கிழத்தி, காமக்கிழத்தி என்று பட்டங்கள் வேறு வழங்கியுள்ளனர். ஆனால் கொண்ட கணவனால் புறக்கணிக்கப்பட்ட மகளிர் நீர் அருந்தியபின் வீசியெறியப்பட்ட பனை ஓலைக் குடையாக, சூடிய பின் கழிக்கப்பட்ட பூவாக இழித்துரைக்கப்படுவது எண்ணத்தக்கது.(கலித். 23: 8-15).

’கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்’ என்ற கூற்றிற்கேற்ப நல்ல உணவுகூட அவள் கண்ணில் காட்டப்படுவதில்லை. சுவையற்ற மிக எளிய உணவை நேரம் தவறிய நேரத்திலேயே அவள் உண்டிருக்கிறாள்.(புறம். 248). “சிறிய வெண்மையான ஆம்பல் செடியின் முன்பு நாம் இளமையுடன் இருக்கும் காலத்தில் தழையாடையாய் இருந்து உதவின. இப்பொழுது பெரியசெல்வத்தை உடைய கணவன் இறந்தபிறகு உண்ணும் வேளை தவறித் துன்பந்தரும் உறங்கும் வேளையில் உண்பதற்கு அவை தம் அல்லியிடத்து உண்டான புல்லரிசியைத் தந்து உதவின”என்று ஒக்கூர் மாசாத்தனார் எனும் புலவர் தம்பாடலில் பதிவு செய்துள்ள தாபதநிலையைப் புறநானூறு குறிப்பிடுகிறது.

மேலும் கூந்தல்களைந்து, பரல்பொதிந்த இடத்தில்              பாயின்றித்தூங்கும்         துன்பநிலையைக் கண்டு கணவனோடு  தீக்குள்           மாய்த்தாள் என்று பூதப்பாண்டியன்  தேவி  பெருங்கோப் பெண்டு              பற்றிய           ஆனந்தப் பையுள் துறைப்பாடல்              பகர்கின்றது.

கணவனோடு தீயுள் மாயத்துடிக்கும் பெண்களுக்குக் கைம்மை நோயின் கொடூரம் அவர்களைத் தூண்டி தீயும் பொய்கையும் ஒன்று என்பதைப் போல எண்ணுவராம். “ஓடும் செம்பொன்னும் ஒக்கவேநோக்குவர்”என்று இறையடியார்களின் பற்றற்ற தன்மையைப் பெரியபுராணம் எடுத்துக்கூறியது. தீயும் பொய்மையும் ஒன்றாகவே என்னும்,பரிதாபத் தன்மையை “நன்னீர்ப்பொய்கையின் நளியெரி புகுவர்”என்று மணிமேகலையும் எடுத்து இயம்புகின்றது.(மணி. 2:45).

கணவனை இழந்தோர் அத்தனை பேரும் தீயுள் மாய்ந்திருப்பது சாத்தியக் கூறுதானா? அப்படி மாயாத பெண்கள் என்ன செய்திருப்பர்? என்ற              வினாக்கள் எழுவது           இயல்பே.              கைம்பெண்டிர்       நூல்நூற்றுக் கழித்துள்ளனர். இக்கட்டாய வாழ்க்கை முறையால் பருத்திப் பெண்டாகின்றனர்.(புறம். 326) (பருத்திப் பெண்டு – பஞ்சினால் நூல் நூற்கும்     பெண்டு)பாதுகாக்க   ஆரும் இல்லாதபோது ஆளில்பெண்டு ஆகின்றாள்.(நற்.353:1-2) இவர்களுக்கு இறந்துபட்ட கணவனே இறந்தபின்பும் வழிபாட்டிற்குரிய துணையாகின்றான். சிறிய இடத்தை மெழுகித் தருப்பைப்புல் பரப்பி அதன்மேல் பிண்டம் வைத்து இறந்தோரை வழிபடும் மரபினை, வேள் எவ்வி இறந்து பின்பு அவன் மனைவி பிண்டமிடக்கண்டு வருந்திப் பாடிய கையறு நிலைப் பாடல் புறநானூற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.(புறம். 234).

பகைவரை அவமதித்த பல்வேறு செயல்பாடுகளில் அவரைப் பெண்ணாக உருவகித்தலும் நிகழ்ந்துள்ளது. இச்செயல் பெண் என்றால் இழிபொருள் அல்லது ஆணிற்கு அடுத்த இரண்டாம் நிலை உடையவள் என்பதையே சுட்டிநிற்கின்றது.

போரிடலுக்கு மகளிர் ஏற்புடையவர்கள் அல்லர். வினையே ஆடவர்க்கு உயிரே; மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே என்றுதான் சங்க கால வாழ்வியல் அமைந்திருக்கிறது. என்றாலும் கூட அதற்குப் பெண்ணை இரண்டாம் நிலைப்படுத்துதல் மட்டும் காரணமா? வேறு ஏதேனும் இருக்கக் கூடுமா என்று எண்ணவும் தோன்றுகிறது. அதற்கு இந்தியப் பண்பாடும் தமிழரும் என்ற தன் நூலில் எஸ் இராமகிருஷ்ணன் அவர்களின் கருத்துரை ஏற்புடையதாக அமைகின்றது.

“போர்  வீரத்தைப்  போற்றும்  சமுதாயத்தில்  மகளிர்  களம்  புகுந்து  விந்தைநிகழ்த்தும்   உரம்  உடையவரே ஆயினும் போர்களில் பெண்கள்அழிந்தால் வம்சம் விளங்குவதற்கு வாய்ப்புக் குன்றும்         என்பதை மறப்பதற்கில்லை.ஆடவர்பலர் களத்தில்              உயிரிழந்தார் ஆயினும் பலதாரமான முறையினால் அனைத்துப் பெண்களும் இல்லறம் ஓம்பி மக்கட் செல்வத்தை அடைவது சாத்தியம். பெண்களே களம்புகுந்து பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர் எனில் மக்கட்செல்வப்பெருக்கத்துக்கு வழியில்லாது போகும்”என்ற கூற்று பொதுவாக நகையைத் தருவது போலிருப்பினும் ஆழ்ந்து சிந்தித்தற்குரியது.

சங்ககாலச் சமுதாயத்தில் கல்வியின் பெருமை உணரப்பட்டிருந்தது. சங்க இலக்கியப் புலவர் கூட்டத்துள் முப்பது பெண்பாற் புலவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் ஒளவையார்தான் அதிகமாக ஐம்பத்து ஒன்பது பாடல்களைப் பாடியவர். பூதப்பாண்டியனின் பெருங்கோப்பெண்டு முதலாக வெண்ணிக் குயத்தியார், குறமகள் இளவெயினி வரையார், அரசகுலமகளிர் தொடங்கி        சாதாரணக்              குடிமக்கள்   ஈறாக அமைந்திருப்பது              குறிப்பிடத்தக்கது. ஔவையார் ஆண்களுக்கு இணையான இடத்தையும் சிறப்பையும் பெற்றிருக்கிறார். தாயுடன் இணைத்த மகளாக அஞ்சியத்தை மகள் நாகையார் என்று ஒரு பெண்பாற் புலவர் பெயர் பெற்றிருப்பதும் கவனத்தைக் கவர்கிறது  ஈர்க்கிறது. சங்ககாலச்              சமுதாய வழக்கங்களில் பரந்து காணப்பட்டதொரு குறையாக எதிர்மதிப்புடைய பரத்தமை அமைந்துள்ளது. பரத்தமை காரணமாக தலைவன் வாயில் நேர்தலும் தலைவி அவள் பொருட்டுத் தோழி வாயில் மறுத்தலும் நிகழ்ந்ததைக் காணும் போது பரத்தையர் என்ற தொழில் முறைப் பெண்கள் இருந்துள்ளனர் என உறுதிப்படுகிறது.

பலதாரமணம் உள்ள தமிழர் சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி எனும் கற்புசார் கோட்பாடு புகுத்தப்பட்டபோது உடனடியாக அதனை ஏற்க இயலாத அல்லது விரும்பாத சூழல் நிலவியிருக்கக்கூடும். அதனைப் போலவே ஒருத்திக்கு ஒருவன் என்ற விதிக்குள் அடைபட விரும்பாத மகளிரைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டப் பரத்தை என்று அழைத்தும் இருக்கலாம்.

காலப்போக்கில் அவர்களும் அல்லது அவர்தம் வாரிசுப் பெண்களும் குலமகளிர் போன்று வாழ விரும்பிய நிலையில் தன்னை விரும்பி ஏற்றுக் கொண்ட ஆடவனுடன் மட்டும் வாழ்க்கை நடத்திக் “காமக்கிழத்தியர்”என்ற தகுதியைப் பெற்றிருக்கக் கூடும். இத்தகையோரை ஆண்கள் மணம் செய்து கொண்ட செய்தியினையும் கலித்தொகை (82:9-24) காட்டி நிற்கின்றது. பரத்தமை மறை ஒழுக்கமாக அன்றிப் பலரறிந்த வினையாக நிகழ்ந்துள்ளது. போரில் ஆடவர் மிகுதியும் மடியவே திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு இல்லாத மகளிர் பரத்தையராக மாறும் நிலை உண்டாகியிருக்கக் கூடும் என்று செ. பழனிச்சாமி என்பவர் புறநானூற்றில் தமிழர் பண்பாடு எனும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

சமூகத்தில் பொருளாதாரத்தில் உயர்வு பெற்றவராக அரசமகளிர் திகழ்ந்துள்ளனர். பொது நிலையில் பிற பெண்களின் நிலைபோலவே இவர்கள் இருப்பதாகக் காட்டப் பட்டிருப்பினும் சில தனித்த மதிப்பிழத்தல் நிகழ்வுகள் இவர்களுக்கு மட்டுமே நிகழந்துள்ளன. அரசன் போரில் தோல்வியடைந்தால் வென்றவர்களால் அரசமகளிரே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பெண்டிரது கூந்தலைக் கொய்து அதில் கயிறு திரித்து, அதனால் யானைகளைக் கட்டியிழுத்து அவமதிக்கப்பட்டனர் என்று பதிற்றுப்பத்து (5-15-17) பதிவு செய்துள்ளது.

கொண்டி மகளிராக சிறைப்பிடிக்கப்பட்டு அடிமைகளாக வெற்றி பெற்றோர் நாட்டுக்கு வலிய அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஊர்ப் பொதுமன்றத்தில், கோயில்களில் விளக்கேற்றுதல் முதலான பணிகளைச் செய்யவும் ஏவல் மகளிராக மாற்றப்பட்டனர். இவையே அரசமகளிரை உடன்கட்டை ஏறத் தூண்டியிருக்க வேண்டும். (பட்டி. 246-249).

எக்காலச் சமூகத்திலும் ஒரு போக்குத் தன்மை, விதிகள் கடைப்பிடிக்கப் பட்டாலும் விலகிச் செல்லுதலும் விதிமீறல்களும் நிகழ்ந்துதான் இருக்கும். அவற்றால் சில விவகாரமாயும் சில விறுவிறுப்பானதாயும் அமைந்து விளங்குவன. அவ்வகையில் பார்த்தோமேயானால், சங்க கால மகளிர் தம் உள்ளம் கவர்ந்தவனைப் பிறர் அறியக் கூறுவது இல்லை; கூறக்கூடாது என்பது விதி. ஆனால் இச்சூழலில் பெருங்கோழி நாய்கன்மகள்              நக்கண்ணையார் தம் மனம்     கொண்டவன் சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி என வெளிப்படுத்தியிருக்கும் துணிவு வியக்கத்தக்கது.(புறம். 84-86) கோசர்,           தன்     வயலில்          பசு      மேய்ந்தது              என்பதற்காக           அப்பசுவின் உரிமையாளரான அன்னிமிஞிலியின் தந்தையின் கண்களைப் பறித்து விடுகின்றனர். தன் தந்தையின் கண்களைப் பறித்த கோசரை அப்பெண் பழிவாங்கியதைச் சங்கப்பாடல் பாராட்டுகிறது. இச்சம்பவம் ஆணுக்குப் பெண் ஆணவத்துக்கு ஆட்படாத அடங்காமையைக் காட்டுகிறது.(அகம். 216:8-11).

வெள்ளிவீதியார் சுரம்பல கடந்து தன் காதலரைத் தேடிச் சென்றுள்ளார். தன் துணைவன் ஆட்டனத்தியைத் தேடித் தேடி அலைந்து கண்டுபிடித்த ஆதிமந்தியை ஒன்றுக்க மேற்பட்ட பாடல்கள் காட்டுகின்றன. ஆதிமந்தியிடம் ஆட்டனத்தியைக் கண்டு ஒப்படைத்த பெண் மருதியென்றும், அதன்பின் அவள் தன்னைக் கடலுள் புகுந்து மாய்த்துக்கொண்டாள்          என்றும்              அகநானூற்றுவழி (222:5-15) அறியமுடிகிறது. ஆதிமந்தியின் இக்கடும் முயற்சி அரிதாக நிகழக் கூடியது என்ற வகையில் சிறப்புப் பெற்றுள்ளது. இக்கதையே பின்னாளில் மன்னாதி மன்னன் எனும் திரைப்படமாக உருவானது என்பது தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறிந்ததே. (அகம். 236 : 14-20, குறுந். 31).

தொகுத்துப் பார்ப்பின் சங்ககாலப் பெண்கள் மென்மையானவர்கள்; ஆணின் அன்புக்கு உரியவர்கள்; அறியாமை கொண்டவர்கள்; பொறுமை மிகுந்தவர்;     மக்கட்     பேற்றிற்கு     உரியவர்கள்     என்ற     வகைகளில் ஆண்களால்  பாதுகாக்கப்  படவேண்டியவர்களாகவே  பெண்கள்  விளங்கினர். எனவே   அன்பாலும்,   பரிவாலும்   பெண்டிரை   ஆண்கள்   தம் ஆளுகைக்குஉட்படுத்தினர். கட்டுப்பாடுகளையும், கடமைகளையும் வரையறுத்தனர். இதற்குப் பெண்களிடையே எதிர்ப்புக் குரல் எழவேயில்லை. எனவே இந்த அன்பும் பரிவும் சிறுகச் சிறுக ஆணவம் ஆதிக்கமுமாக மாறிப் பெண்ணை அடிமைப் படுத்தும் ஆணாதிக்கப்போக்கு வளர்வதற்குச் சங்கச் சமூகம் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்பது தெளிவு.

*****

கட்டுரையாளர்
இணைப்பேராசிரியர்  (ம)  துறைத்தலைவர்
தமிழ்த்துறை
தியாகராசர் கல்லூரி
மதுரை-625009

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *