பெருவை பார்த்தசாரதி

 

 

 

 

 

 

 

கனவுகள் இரண்டும் தோழியாம்…அதிலொன்று

…….கண்ணான மற்றொன்றிடம் “வீண்சவால்” விட்டதாம்..!

கனவு பொய்த்தால் தற்கொலை செய்வேன்! யார்

…….கனவிலுமினி வரவே மாட்டேனென சபதமிமிட்டதாம்.!

அனவரதம் சபதம் வேண்டாம்! சகதோழியுரைத்தது

…….ஆனமட்டும் சொல்லியும் அத்தோழி கேட்கவில்லை.!

மனதிற்கிட்ட கட்டளைக் குட்பட்டு..மீண்டுமொரு

…….சனனமெடுக்க வழியில்லாக் கனவையே கண்டதாம்.!

 

 

அண்டத்தில் நிறைந்திருக்கும் ஊழல் அனைத்தும்

…….அருகிவந்து முற்றிலும் அழிந்தொழிந்து விட்டதாம்.!

பண்டத்தின் விலை யனைத்தும் குறைந்ததாலின்று

…….பரந்துதிரிந்த பரதேசிகளும் பாருலகில் இல்லையாம்.!

அண்டை அயலார் நாடுகளெல்லாம் ஒன்றுகூடியே

…….ஓருலகம் ஓருயிர் ஓரினமென்றே கொண்டாடியதாம்.!

துண்டுவேட்டி கரையிலாத தூயவெண்மை ஆடை

…….தரித்திவ் வுலகனைத்தும் நிரம்பியதோர்க் கூட்டமாம்.!

 

 

துண்டாக்கும் எல்லைக்கோடு பூகோளத்தில் இல்லை

…….தொண்டாற்றும் மனமுடையீர் மட்டுமே நிறைத்ததாம்.!

உண்டாக்கி அழிக்கும் அணுவாயுதமில்லை! இதுபோல

…….கண்ட கனவெலாம் மெய்யாகாமல் பொய்யானதாம்.!

கண்டகனவால் கொண்ட தென்னவோ சோகம்தான்

…….கனவுக்கே பொறுக்கவில்லை! வாக்கும் தவறவில்லை.!

கொண்டசவாலை மனதாரயேற்று தற்கொலை செய்து

…….கொண்டதிலதன் தோழிக்கு மிகுந்த தாளாத்துயரமே.!

 

=============================================================

நன்றி தினமணி வெளியீடு:: 11 th March’2018

 

நன்றி:: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *