இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 10 – சமயம் எனும் உயர் அறிவியல்

0

அவ்வை மகள்

வள்ளலார் பற்றிய நமது இறையியல் சிந்தனைகளில், சமயம் எனும் உயர் அறிவியல் பற்றி பேசுவது வேண்டும். சமயம் என்பது யாது என வரையறை செய்வோமேயானால், சுய அறிவால் கடவுளை உணர்ந்து புரிந்து கொள்வது எனலாம். கடவுள் என்பது யாது என வரையறை செய்வோமேயானால், கடவும் ஆற்றலே கடவுள் எனலாம்.

இந்நிலையில், அடுத்ததாக எந்த ஆற்றல் அது, அது எதனைக் கடவுகிறது என்கிற இரண்டு வினாக்கள் எழுகின்றன.

இவற்றிற்கான விடையை அறியும்போது, எந்த ஆற்றல் அதிபகிரண்டமாம் ஆடலியக்கம் நிரம்பிய ஆதிப்பரவெளியை இயக்குகிறதோ அதுவே கடவுள் எனக் கொள்கிறோம். அக்கடவுள் கடவுவது என்ன என உற்றுப் பார்த்தால் ஆதிபரவெளியாம் அதிபகிரண்டத்தில் உள்ள பகிரண்டங்களாம் பல கோடி பரவெளிகளையும், அப்பரவெளிகள் ஒவ்வொன்றிலும் உள்ள கோடானுகோடி நாட்டிய அரங்குகளாம் அண்டங்களில் (காலக்ஸி) அனாயாசமாய்த் தொங்கியபடி நடமாடிக்கொண்டிருக்கிற சூரியன்கள்,நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள், உடுக்கோள்கள், உள்ளிட்ட மாபெரும் பருப்பொருட்கள் யாவற்றையும் கடவுள் கடவிக்கொண்டிருக்கிறது எனப் புரிகிறது.

இவ்வாறாக அந்தரத்திலே நடமாடிக்கொண்டிருக்கிற அப்பருப்பொருட்களுக்கிடையே எவ்வித நூலிணைப்பும் இல்லை! நூலின்றியே – வரிசையாய்க் கோர்க்கப்பட்டிருக்கிற சரமாலையாய் – என்றும் வீழாத சரமாலையாய் – தேர்ந்த அணிவகுப்பாய் – பொருண்மையும் ஆற்றலும் ஒன்றிணைந்த சராசரமாய் அவை தொங்கிக்கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல – அவை சும்மா தொங்கிக்கொண்டிருக்கவில்லை; ஒவ்வொரு சரத்தில் உள்ள ஒவ்வொவொரு சரமணியும் தொங்கலிட்டபடியே, தனது அச்சில் தானே சுழன்றும், ஒரு மையப் பொருளைக் கவனத்தில் கொண்டபடி அந்த மையப்பொருளைச் சுற்றிச் சுற்றி ஓயாமல் வலம் வந்தபடி நடனமாடுகிறது. ஓவ்வொரு சரமணியும் இவ்வாறு தன்னில் தானே லாவகமாய்ச் சுழன்று மற்றொன்றைச் சுற்றிச் சுற்றி மெய்மறந்தவாறு சுழல் நடனமாய் நாட்டியமாட, ஒரு ஒட்டுமொத்தப் பார்வையாய் அனைத்து சரமணிகளின் நடனத்தையும் ஒருசேரப் பார்த்தால் அது அளப்பரியதான – சொற்களால் விவரிக்க இயலாத மாமாமா பிரம்மாண்டம்! அதுவும் அவை ஏனோ தானோவென்று தான்தோன்றித்தனமாய் நடனமாட வில்லை – அவற்றின் ஆடலில் – அசைவில் – நாட்டிய இயக்கத்தில் ஒழுங்கும், முறைமையும், நியதியும் இருக்கிறது. ஒரு துளி பிசகினாலும் சொல்லொணாப் பேராபத்து என்பதான நிலையில், மிகத்துல்லிய கணக்கீடு அவற்றின் சுழற்சி வேகத்திலும், இடைவெளியிலும், விட்ட அளவிலும், அவற்றின் பொருண்மையிலும், வேகத்திலும் காணப்படுகிறது.

மேலும், ஒரு பகிரண்டத்தில் நடனமாடும் பருப்பொருட்கள் யாவும் குடும்ப உறவு கொண்டு வசித்து வருகின்றன. இந்த உறவுகளில், துணை மற்றும் பிள்ளைகள் அடங்கிய குடும்பம், உபபெருகுடும்பம், பெருகுடும்பம், மாபெரும் குடும்பம் எனத் தொகுதி-பகுதிகளான உறவு முறைகள் அமைந்திருக்கின்றன. அவை அங்கே குடும்பத்தொகுதிகளாய் ஒருங்கே ஒருமித்துச் சுழல் நடனமிடுகிற காட்சி கற்பனை எல்லைகளுக்கு அப்பாற்பட்டதொரு விந்தை. அப்பருப்பொருட்களில் பலவும் பிரமாண்டமான உஷ்ணமும், ஜ்வாலையும், சூறாவளியும் கொண்ட சீற்றத்தோடும் தீட்சணியத்தோடும், தலைவிரிகோலமாய் வெப்பக்கொழுந்துகளை அள்ளிவீசியப்படி அகோரமாய் சுழன்று கொண்டிருக்கின்றன. சில பொருட்கள் தண்மையோடு, ஆரவாரம் இல்லாமல் அமைதியாகவும், மெதுவாகவும் சுழன்று வலம் வந்து கொண்டிருக்கின்றன. சிலபொருட்கள் ஒட்டியாணம் அணிந்து ஒயிலாக விளங்க, சில அணிகலனினின்றி எளிமையாய் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொவொரு நிறம்; ஒவ்வொருபொருளுக்கும் ஒவ்வொவொரு வகை ஒளி. மேலும், சிறிது, பெரிது, மத்திமம் என உருஅளவீட்டில் அவை வெவ்வேறு. இப்பொருட்களில் பெரியவை யாவும் பெரும்பாலும் உருண்டைப்பந்துகள் போன்ற வடிவே என்றாலும், பிறவற்றில் பல உடுக்கை போன்றும், எலும்பு போன்றும், மண்டை ஓடு போன்றும், பிடித்த களிமண் பிடி போன்றும் வெவ்வேறு வடிவங்கள் கொண்டவையாய் இருக்கின்றன.

ஒரு பகிரண்டத்தில் உள்ள காலக்சி எனப்படும் ஒரு நாட்டிய அரங்கு ஒன்றின் வடிவமைப்பைக் கொஞ்சம் உற்று நோக்குவோம். காலக்சி என்பது சுழல் கொண்ட ஒரு பறக்கும் முறுக்குச் சக்கரம் – எளிமையாகச் சொல்லப்போனால் – அது ஒரு மழுவாயுதம். காலக்சியின் மத்தியில் ஒரு திட்டு போன்ற மேட்டுப் பகுதி உள்ளது. Galactic Bulge என்றழைக்கப்படும் சிவப்பு நிறத்தில் உள்ள இந்தத் திட்டுப்பகுதியில்தான் முதிர்ந்த நட்சத்திரங்கள் செறிந்து காணப்படுகிறன. முதிர்ந்த நட்சத்திரங்கள் சிவப்பு நிறம் என்பதால் இது அழுத்தச் சிவப்பு நிறமாக இருக்கிறது. இந்த சிவப்பு மேட்டுக்கு நடுவிலே அதி உக்கிரமான ஒரு ஓட்டை – அதாவது சுழல் மையம் உள்ளது. இதுதான் காலக்சி மழுவின் – சுழற்சி மூலம். இதனை காலக்சியின் தொண்டை – நெஞ்சுக்குழி என்பது பொருத்தமாக இருக்கும். இந்த நெஞ்சுக்குழிக்கு அளப்பரிய உறிஞ்சுத்தன்மை உண்டு.

அடுத்து காலக்சியின் கரங்களுக்கு வருவோம். காலக்சியாம் மழுவுக்குக் கரங்கள் இருக்கின்றன. நவீன அறிவியலும் இவற்றைக் கைகள் என்றே அழைக்கிறது. இந்தக்கரங்களின் தன்மை என்னவென்றால் இவற்றிற்கும் சுழலிட்டபடி சுருட்டி இயங்கும் தன்மை உண்டு. மேலும், இக்கரங்கள் பொதுவாக சிவப்புப் பின்னணியில் நீலப்புட்டாக்கள் வைத்தாற் போன்றிருக்கும். காலக்சியின் கரங்களில் புது நட்சத்திரங்கள் ஓயாமல் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. புது நட்சத்திரங்கள் பொதுவாக நீல நிறத்தத்தில் இருக்கும் என்பதால் நீல நிறப் புட்டாக்கள். பொதுவாக, ஒரு சுழல் காலக்சிக்கு (Spiral Galaxy) நான்கு பிரதான கரங்கள் உண்டு. நமது காலக்சியான பால்வண்ணப்பாதை எனும் நடன அரங்குக்கு, எட்டு கரங்கள் இருப்பதாக இந்தியாவின் சந்திராயன் வழங்கியுள்ள பதிவுப் படத்திலிருந்து அறிகிறோம். (காண்க: http://chandra.harvard.edu/photo/2006/w3/milkyway_ill.jpg). நமது காலக்சியின் அமைப்பை உற்றுப்பார்த்தால், நடுவில் உள்ள திட்டு போக , தேகம் முழுவதும் சுற்று முறுக்காய் எட்டு கரங்களும் எட்டு திசைகளிலும் சுழன்று வியாபித்திருக்கின்றன.

நமது பால்வண்ணப் பாதை எனும் நடன அரங்கு, தடுப்பு உள்ள முறுக்குச் சுழல் சக்கரமாகும் (Barred Spiral Galaxy), தடுப்பு என்றால் உண்மையில் தடுப்பு அல்ல; தடுப்பு இருப்பது போன்ற தோற்றம். காலக்சியின் செவ்வுடலுக்கு மேலே ஒரு வெள்ளொளிப் பூச்சு சீராக அமைந்திருக்கிறது. இந்த வெண்பூச்சு காலக்சியின் கரங்களின் மேல் நெடிது ஓடுகிறது. கரங்களின் வியாபமே காலக்சியின் உடலில் பெரும் பகுதி என்பதால், நமது பால் வண்ண காலக்சி என்பது உடல் முழுவதும் வெண்ணீறு பூசப்பட்ட சிவந்த உடலாய் மிக அழாகான தோற்றம் கொண்டு விளங்குகிறது.

காலக்சியின் கரங்களில் நட்சத்திரங்கள் தொடர்ந்து உருவாகிறது என்றோம். அந்த உருவாக்கத்தில் வாயுக்கள் விளைகின்றன. இவ்வாயுக்களில் பெரும்பகுதி ஹைட்ரஜன் வாயு. ஹைட்ரஜன் என்பது முதல் தனிமம். தனிமங்களின் ஆதி இது தான். அனைத்து வேதிமங்களுக்கும் மூல காரணம் ஹைட்ரஜன் தான். எடுத்துக் காட்டாக, நமது சூரியனில்,ஹைட்ரஜன் அணு உட்கரு சேர்க்கைக்கு உடன்பட, அங்கே இரண்டாம் தனிமமான ஹீலியம் பிறக்கிறது.

இவ்வாறு தொடர் அணுக்கரு இணைப்பு வினைகள் தொடர்வதால், பிற தனிமங்களும் காலக்சியில் நட்சத்திரங்களின் உருவாக்கலில் விளைகின்றன. இவ்வாறான அணு உட்கரு வினைகள் காலக்சியின் கரங்களில் நிகழும்போது – கரங்கள் (தம் முறுக்குச் சுருள் விசையால்), அங்கு விளையும் வாயுக்களை, காலக்சியின் மையத்தை நோக்கி வாரி வீசுகின்றன. அவ்வாறு வீசப்படும் வாயுக்களை காலக்சியின் மையத்தில் உள்ள தொண்டை உறிஞ்ச முற்படுகிறது; (உரலில் மாவு அரைப்பதாய் கொஞ்சம் நினைவில் கொண்டு வாருங்கள் – மையத்தை நோக்கி வீசுதல் என்றால் என்னவென்று புரியும்). அப்போது, அந்த வாயுக்கள், சுழல் ஓட்டையின் வட்டவிளிம்பில் நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு தான், ஒவ்வொரு காலக்சியும் தன் தொண்டையில் வாயுக்களையும், மற்ற தனிம ஆவிகளையும் (vapors of elements) உள்ளிழுத்து நிறுத்துகிறது. (இந்த வாயுக்களுடன், நீராவி கலந்திருக்க பெரும் வாய்ப்பு உள்ளது. காலக்சியின் குளிர்ப்பிரதேங்களில் பனிக்கட்டி நிரவிப்பரவி இருப்பதிலிருந்து இதனை உணரலாம். உடுக்கோள்களுக்குள்ளே நீராவித்துகள்கள் இருப்பதையும் அறிவியல் கூறுகிறது.)

தன்னுடைய நெஞ்சுக்குழியில், மிடறு விழுங்கி – அதனை முழுங்கிக் கீழே தள்ளாமல் ஒரு மனிதனால் நிறுத்தமுடிவதைப் போல், வாயுக்களை, காலக்சி உள்ளிழுத்து நிறுத்துகிறதால் ஏற்படும் ஆற்றல் இயக்கத்தால், காலக்சியாம் மழு தங்குதடையில்லாமல் சிரஞ்சீவியாய் இயங்கிக்கொண்டே இருக்கிறது. மழுவின் தொண்டை இவ்வாறாக அடர்த்தியான வாயுக்களைத் தொண்டைக்குழியில் இருத்தி வைத்துக் கொள்ளவில்லையென்றால் மழு சரியாக விரைவாக இயங்க வாய்ப்பில்லை. எனவே காலக்சியில், தொண்டைத் தேக்கம் அதாவது மிடறு அடக்குதல் என்பது மழுவின் சுய இயக்கத்த்திற்கு ஒரு இன்றியமையாத தேவையாக இருக்கிறது என்பதை உணர்க. இந்த நுணுக்க அமைப்பை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நம் மெய் சிலிர்க்கிறது.

அதுமட்டுமல்ல காலக்சியாம் மழு, கிடைமட்டமாகச் சுற்றவில்லை. அது சரிந்த கோணத்தில் பறக்கிற ஒரு முறுக்குச் சக்கரமாகும். சுருங்கச்சொல்லின், பகிரண்ட நடனத்தில், நடனமிடும் மேடையே சுழல்மேடை! அதுவும் அது சரிந்து சுழல்கிற மேடை!! – அதுவும் அது சும்மா அற்பசொற்பமாய்ச் சுழலவில்லை!!! வேகம் என்றால் பகீரத வேகம். பற்றாக்குறை மிகுந்த நவீன அறிவியலின் பற்றாக்குறை அளவீடுகள் படியும், அதனது பற்றாக்குறை கணக்கீட்டின் படியும், நமது பால்வண்ண காலக்சியும் , அதன் உடனிணைக் குழுவும் (Local Group), ஒரு நொடிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்று வலம் வருவதாக அறிகிறோம். அப்படியெனில், நமது காலக்சி மழுவின் இயக்கம் எத்தனை பயங்கரமானதாக இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். இது ஊனை-உயிரை ஒடுக்கி நம்மை மயிர்க்கூச்செறியவைக்கும் சர்க்கஸ் காட்சி போன்றது!

காலக்சி மழுவின் தொண்டைத் தேக்கமும், கர இயக்கமும், அதன் வெண் பூச்சும் மட்டும் சொற்பதம் கடந்த பிரம்மாண்டம் கொண்டவை அல்ல. அதனைச்சுற்றி அமைந்திருக்கிற ஒளிவட்டமும் (Halo) அளப்பிடற்கரியது. ஒளி என்றால் அது பிரத்யேகமான ஒளி என்பதான அரிய ஒளி அது. வெள்ளொளியும் கருமையும் ஒருசேர இருக்கும் புதின ஒளி அது. இந்த ஒளியை அளவிடக் கருவிகள் இல்லை – இந்த ஒளியை வருணிக்க அளபெடைகள் இல்லை.

காலக்சி மழுவில் உள்ள கரு ஒளி Dark Halo எனப்படுவது; இந்தக் கரு ஒளி, காலக்சி மழுவின் தொண்டையைச்சுற்றித் துவங்குவது போல் இருக்கிறது. அங்கிருந்து அது அப்படியே காலக்சி முழுவதும் இலாவகமாய்ப் பரவி விரிந்து காலக்சியின் வெளி விளிம்பைத் தாண்டி அதன் வெளிவட்டத்தில் உள்ள வெள்ளொளியோடு இரண்டறக்கலந்து நீக்கமற நிறைந்து நிற்கிறது. இந்தக் கரு ஒளியை விளக்க இன்றைய அறிவியல் பெரும்பாடுபட்டு வருகிறது. பொதுவாக இவ்வாறு, ஒரு பொருண்மை ஒளி ஒரு பொருளின் மையப்பகுதியிலிருந்து கிளம்பி உள்ளிருந்து வெளியீடாகச் சென்று, அதன் புறவட்டத்தைக் கடக்கிறது என்றால் அப்பொருளின் வேகம் குறையும். ஆனால், நமது காலக்சியின் வேகம் குறைவதில்லை. இன்றைய அறிவியல், காலக்சியின் கரு ஒளியை விளக்க வழிதெரியாமல் தன கையாலாகாத்தனத்தை இவ்வாறு கூறுகிறது: “நமது பால்வண்ணப் பாதையில் உள்ள கரு ஒளி அதிநுட்ப விசித்திரமாய் இருக்கிறது – இதில் என்ன இருக்கிறது என்று சொல்ல இயலவில்லை; ஏனெனில் அது காட்சிக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. விளக்க இயலாத ஓரிரு பொருட்கள் கொஞ்சம் தென்படுகின்றன என்று கொள்ளலாம் – அவை வரையறைக்கு உட்படுத்தமுடியாத நட்சத்திரங்களா? புரியவில்லை! ஆனால் இன்னமும் ஏதேதோ – ஏதோதோ இருக்கின்றன என்றே உறுதியாக ஹேஷியம் கூறமுடியும்! ஆனால் அவற்றையும் இக்கரு ஒளியையம் இதுகாறும் நாம் பயன்படுத்தி வந்திருக்கிற – எமக்குத் தெரிந்த ஈர்ப்பு சக்தி தியரியால் (Gravitational Theory) விளக்க வழி இல்லை.” (காண்க, இங்குள்ள முதன்மை ஆய்வுக்கட்டுரைகளை; https://en.wikipedia.org/wiki/Dark_matter_halo)

பகிரண்டத்தின் இயக்கத்தின் முன்னே அறிவியல், கைகட்டி வாய்பொத்தி, “அவர் தலைவர்!அன்னவர்க்கே சரண் நாங்களே!” என நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து சரணாகதி ஏற்பதைக் காண்கிறோம். தனது பற்றாக்குறை கணக்கின் படி அதிபகிரண்டத்தில் சுமார் 2000 கோடி காலக்சிகள் இருக்கலாம் என்று ஊகிக்கிறது இன்றைய அறிவியல். ஆப்படியெனில் 2000 கோடி காலக்சி மழுக்களின் ஒட்டுமொத்த இயக்கம் எத்தன்மையதாய் இருக்கும் என்று மீண்டும் நீங்களே ஊகித்துக்கொள்ளவேண்டும். அதிலும் 75% காலக்சிகள் முறுக்குச் சுற்று காலக்சிகளே! ஆக்கபூர்வமான இந்த சிருஷ்டிப் பிரளயத்தை எடுத்துச் சொல்ல எந்த மொழிக்கும் எந்த கவிக்கும் திராணி இல்லை.

ஒரு பகிரண்டத்தில் நடக்கிற நாட்டியதொகுப்பைப் பார்க்கிறபோது, அந்த நடனத்தில், மிகக்கடுமையான கட்டுப்பாடு தெரிகிறது. பிசகில்லா தர்மமும் அங்கே தலை யெடுத்து நிற்கிறது. ஒன்றை ஒன்று சார்ந்தவாறு ஒருங்கிணைந்து, வேகத்தகவமைப்பு செய்து கொண்டு அங்குள்ள பொருட்கள் அதியற்புதமானதோர் கூட்டு நடனம் செய்வதும் தெரிகிறது. அந்த நடனத்தில் தெரிகிற கட்டுப்பாடு மட்டுமின்றி அங்கே உள்ள சகிப்புத்தன்மையும் போற்றுதலுக்கு உரியது.

பகிரண்டத்தில், ஆக்ரோஷணப் பொருட்கள் அமைதிப்பொருட்களுக்குக் கட்டுப்படுகின்றன. அமைதிப்பொருட்களோ ஆக்ரோஷணப் பொருட்களைக் கண்டு பயந்தொடுங்காமலும், அவற்றை வெறுக்காமலும், அவற்றின் இயல்பைப் பொறுத்துக்கொண்டு, அவற்றுடன் அனுசரித்தும் சமரசம் செய்து கொண்டும் வெகுஇயல்பாய்த் தம் பணியில் முழுக்கவனம் செலுத்தி இயங்குகின்றன. ஒவ்வொரு பொருளின் தனித்துவத் தன்மையும், அனைத்தின் கூட்டுப்பண்பும் சிறப்பு குணாதிசயங்களாகப் புலனாவதுதான் ஒரு பகிரண்டத்தின் அடையாளம். ஒவ்வொரு பொருளும் அதன் ஒளிநிலைக்கு ஏற்றாற்போல் நடனமிடுகிறது என்பதும் மாபெரும் விந்தை.

ஒட்டுமொத்தமாக சுருங்கச் சொல்லவேண்டுமெனில், பகிரண்டத்தில் உள்ள பொருட்களுக்கு இடையே இருக்கிற வித்தியாசங்கள் மலைக்கும் மடுவுக்கும் போல. இருப்பினும், மாறுபாடுகளை மறந்து அவை ஒற்றுமையாய்க் களிநடம் செய்யும் விதத்தைப் பாக்கிறபோது எவருக்கும் பேரானந்தம் ஏற்படும் எனலாம். “அன்னை- அன்னை ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை!” என்ற பாரதியின் எளிய வாசகம் காண்க.

ஒரு பகிரண்டத்தில் நிகழும் நடனத்தைக் கண்ட நாம், இப்போது பகிரண்டங்களின் தொகுப்பான அதிபகிரண்டத்து கூட்டு நடனத்தை – கூத்தைச் சிந்திப்போமென்றால், அது எத்துணை – எத்துணை ஏகாந்தமாய் இருக்கும் என்பதை நாம் உய்த்துள்ள முடியும். எவரோ இசைக்கும் தாள, சுருதி, லய இசைக்குப் பொருத்தமாய் தான் அதிபகிரண்டக் கூத்து – அக்களி நடனம் அடி தப்பாமல் வெகு சிரத்தையோடு செவ்வனே நித்தம் நடைபெறுகிறது என்பதை அறிவுப்பூர்வமாய் உணருவது நமக்கு எளிதாகிறது. அந்த இயக்குனரின் மையத்தலைமையின் இசைத்தல் இல்லையேல் – அசைத்தல் இல்லையேல் – ஆக்கினை இல்லையேல் – எந்த பகிரண்டமும், ஆதி பகிரண்டமும் இசைந்து இயங்க வாய்ப்பில்லை என்பதை நம்முள்ளம் மறுத்து மொழிய வாய்ப்பில்லை.

மேற்கண்ட அலசலின் இறுதியில், நாம் உணர்வது யாதெனில், சத்தியமாம் – நித்தியமாம் – பகிரண்டக் கூத்தின் சீர்மையை உணருங்கால், அச்சீர்மையைத் தொழுதும் போற்றியும் குதூகலிக்கும் பக்திப் பரவசம் எவருக்கும் பிறக்கும் என்பதே.

சிந்தித்துப் பாருங்கள் – குடியரசு நாளன்று நடக்கும் இராணுவ அணிவகுப்பைப் பார்க்கும்போதே நமக்கு உடல் புல்லரிக்கிறது என்றால். பகிரண்டத்தின் அணிவகுப்பு தரும் உணர்வை, பக்தியை, பரவசத்தை என்னெற்றுரைப்பது?

“ஐயா!” என ஓங்கிப் புலம்பி, ஆழ்ந்தகன்று உணர்ந்து, “ஏகாந்தம்! ஏகாந்தம்! ஏகாந்தம்!” என்று ஊனும், உள்ளும் நைந்து கரைந்து, அதிபகிரண்டமாம் இந்த ஏகாந்தத்தை உருவாக்கியது யார்? இந்த ஏகாந்தத்தை வழிநடத்துவது யார்? இந்த ஏகாந்தத்தை நெறிபிறழாமல் காப்பது யார்? என்று வினாத்தொடர் கொப்புளிக்க ஆங்கு அதிபகிரண்டத்தில் நிகழும் ஒருங்கிணைந்த ஆற்றல் எழுச்சியின் பால் உயர் மரியாதை உணர்வையும், உள்ளார்ந்த பணிவையும், அச்சத்தையும் கொண்டவராகிறோம்.

நம்முள் அதிபகிரண்டத்தின் துவக்கம் எது, எவர் அதைத் தொடக்கி வைத்தது, என்ற வினாக்கள் முளைத்து விட்டதென்றால் நமக்கு ஏற்கனவே ஒரு புரிதல் ஏற்பட்டுவிட்டது என்று பொருள்: அதாவது, தொடர் இயக்கத்தில் உள்ள அதீதப் பருப்பொருட்களை நிலைநிறுத்த ஒரு ஆற்றல்மிக்க மூலப்பொருள் நிச்சயம் அவசியம். அந்த முலமே, ஆதிப்பரவெளியாம் அதிபகிரண்டத்தில் உள்ள பகிரண்டமாம் பரவெளிநிலைகளில் காணப்படும் அனைத்து ஆற்றல்களின், அனைத்துப் பருப்பொருட்களின் துவக்கமாய் – ஆதியாய் – அமைந்திருக்க முடியும் என்பதும் உறுதியாகிறது. ஏனெனில் ஆதி இல்லாமல் எதுவும் உற்பத்தி ஆகமுடியாது. தலைமை ஆற்றல் இல்லாமல் எதுவும் இயங்கவும் வாய்ப்பில்லையே.

மேலும், பகிரண்டத்தில் உள்ள இயக்கங்கள் யாவும் தொடர் இயக்கங்கள் – அதுவும் அவை நிலைத்ததான, சிரஞ்சீவியான உறுதித் தொடர் இயக்கங்கள் என்பதால் – இவற்றின் உற்பத்தித் தானமான அந்த பரஆற்றலாம் ஆதிமூலம் என்றும் சிரஞ்சிவியாய் நின்று அழிவற்றதன்மையுடன் அனைத்து ஆற்றல்களையும் தொடர்ந்து கண்காணித்து இயக்கும் வல்லமை உடையதானதொரு இயங்கு சக்தியாய் இருந்தாகவேண்டும் என்பதும் அவசியம். அத்தகையதான அந்த ஆதிமூலம், ஒரே க்ஷணத்தில் பொருண்மைக்குப் பொருண்மையாகவும் ஆற்றலுக்கு ஆற்றலாகவும் விளங்குவதாக ஒப்பற்ற துவிய (dual) பரம்பொருளாய் – உருவாய், அருவாய், அருஉருவாய் அமையப்பெற்றிருக்க வேண்டும் என்பதும் உறுதி.

இப்போது, கீழ்வரும், அப்பர் அருளிய தேவாரப் பாடலைக் கொஞ்சம் உங்கள் சிந்தனைக்கு கொண்டு வாருங்கள்:

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

இப்போது, சமயம் என்பது எத்தனை உயர் அறிவியல் என்பது விளங்கும்.

மேலும் பேசுவோம்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *