-மேகலா இராமமூர்த்தி

இளமையும் செல்வமும் இந்த உடம்பும் நில்லாது அழியும் இயல்புடையன. ஆகையால், செல்வமும் அதைக்கொண்டு நற்செயல்கள் செய்வதற்கான உடல்வன்மையும் இருக்கும்போதே வண்மையில் (வள்ளன்மை) ஈடுபடவேண்டும் என்பதை நாலடியார் தொடர்ந்து வலியுறுத்துகின்றது.

அடைதற்கரிய இந்த மானுட உடலைப் பெற்றவர்கள், அதன் பயனாகக் கொள்ளத்தக்க அறச்செயல்களை தம்மால் இயன்ற அளவில் செய்துமுடிக்கவேண்டும். எப்படியெனில், கரும்பை ஆட்டி அதன் சாற்றை எடுத்துச் சக்கையை விட்டுவிடுதல்போல், இந்த உடலை வருத்திப் பிறர்க்கு இயன்ற அளவில் அறச்செயல்களைச் செய்தல் வேண்டும். இல்லையேல் கரும்பின் சக்கைபோல் இவ்வுடம்பும் பயனின்றிக் கழியும் என்கிறது இப்பாடல்.

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க – கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.
(நாலடி – 34)

எனவே பெறற்கரிய மக்களுடம்பைப் பெற்றவர்கள், கரும்பைப் போல் தம்முடலை வருத்தி, நற்செயல்களைச் செய்துமுடித்தல் வேண்டும்.

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.
(நாலடி – 36)

எனும் நாலடியார், எமன் வருவது இன்றோ அன்றோ என்றோ என்று ஐயப்பட்டுக்கொண்டிருப்பதில் நாளைக் கடத்தாமல் அவன் நம் பின்னாலேயே இருக்கிறான் என்பதை உணர்ந்து, தீய செயல்களை நீக்கி மாட்சிமைப்பட்ட அறச்செயல்களை ஒல்லும் வகையிலெல்லாம் மருவிச் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.

இளையோர் முதியோர் பார்த்தோ, நாள் கிழமை பார்த்தோ மறலி வருவதில்லை. எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பற்றிச் செல்லும் அறனில் கூற்றுவன் அவன். ஆகையால் அவன் வரவு குறித்து ஆராய்ச்சி செய்வதினும், நற்செயல்கள் ஆற்றுவதில் காலத்தையும் பொழுதையும் பயனுறக் கழிப்பதே அறிவுடையார் செயல் என்பதையே இந்தப் பாடல் நமக்குப் புலப்படுத்துகின்றது எனலாம்.

ஆலம் விதையை நாம் பார்த்திருக்கிறோம் இல்லையா? எத்துணைச் சிறிய விதை அது! அதிலிருந்து தழைக்கும் ஆலமரமோ வானளாவி நின்று மன்னுயிர்களுக்கெல்லாம் நிழல்தந்து காக்கும் தன்மைத்து. அஃதொப்ப, தக்கார்க்குச் செய்யும் உதவி மீச்சிறிதாயினும் அஃது அவர் கையிற் சேர்ந்தால் வானளாவிய மீப்பெரு புண்ணியப் பயனை உதவி செய்தார்க்குத் தந்துவிடும் என்கிறது நாலடி.

உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங் – கறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும். 
(நாலடி –  38)

தரமான மனிதர்களுக்குத் தக்க காலத்தில் செய்த உதவியின் மாட்சியை ஆலம் விதையின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுக்கூறியிருப்பது இரசிக்கத்தக்கதாய் உள்ளது.

இதனையே வான்புகழ் வள்ளுவமும்,

”உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து”
  என்று வரையறுத்துச் செல்கின்றது.

அடுத்து, மனித உடலின் தூய்மையற்ற தன்மையைப் பேசுகின்றது நாலடியாரின் ஓர் அதிகாரம். இதிலும் பெண்டிரின் அழகை நயந்துசெல்லும் ஆடவருக்கு அறிவுகொளுத்தும் விதமாகவே பாடல்கள் காணக் கிடைக்கின்றன.

 தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடி
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே – எக்காலும்
உண்டு வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.
(நாலடி – 43)

தாம்பூலம் முதலிய மணப்பொருள்களை மென்று, தலைநிறையப் பூச்சூடி செயற்கையாக அழகுசெய்துகொண்டாலும், உணவை உண்பதனால் மனித உடலில் கழிவும் அழுக்கும் மிகுந்துகொண்டேதான் இருக்கும்; அஃது குறையாது! ஆகலின் அழுக்குடம்பின்மீது விருப்பங்கொள்வதில் பயனில்லை என்கிறது மேற்கண்ட பாடல்.

சோற்றால் அடித்த பிண்டந்தானே இந்த மனித யாக்கை! அதனால்தான் உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே என்று உயிரைக் காக்கும் உண்டியின் பெருமையை நம் தமிழ் நூல்கள் உ(ப)ரக்கப் பேசுகின்றன. உண்டியால் நிரப்பப்படும் உடலை எத்துணை முறை கழுவினாலும் அதில் சேரும் அழுக்குகளுக்குப் பஞ்சமில்லை. ஆதலால் நெஞ்சமே! துர்நாற்றமிகு இவ்வுடலை – பெண்ணுடலைக் காமக்கண் கொண்டு நோக்காதே என்பதே இந்தப்பாடல் நமக்குத்தரும் நற்செய்தி.

குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் – இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள். 
(நாலடி – 46)

என்பது மற்றொரு நாலடியார் பாடல்.

குடலும் கொழுமையும் குருதியும் எலும்பும் தசைநாரும் நரம்பும் தோலும் இடையிடையே வைத்த தசையும் கொழுப்புமாய் இருக்கின்ற இந்த உடற்பொருள்களில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவள் இனிய பூமாலை அணிந்த இந்தப் பெண் என்று வினா எழுப்புகின்றது இப்பாடல்!

சிந்தனையைத் தூண்டும் சீரிய கேள்வியே அல்லவா!

குடலும் குருதியும் எலும்பும் இன்னபிற உடற்பாகங்களும் அப்பெண்ணைச் சார்ந்தவையே என்றாலும் அவை மட்டுமே அவள் அல்லள். அதனைத் தாண்டிய உள்ள உணர்ச்சியும்  உயிரறிவும் அவள்மாட்டு உண்டன்றோ? எனவே பெண்மையை உடலில்மட்டும் தேடுவது மடமை! என்பதையே இப்பாடல் நுட்பமாய் விளக்குகின்றது என்பது உரையாசிரியர்கள் கருத்து.

ஆணென்ன பெண்ணென்ன? எல்லா மனித உடல்களும் பால் வேறுபாடின்றி நரை திரை மூப்பு பிணி சாக்காடு ஆகியவற்றிற்கு உட்பட்டே தீரவேண்டும் என்பதே இயற்கையின் நியதி. ஆகவே அளவற்ற உடற்பற்றும், காரிகையர்பால் காமப்பற்றும் களையப்பட வேண்டியவை என்று நாலடியார் சொல்வது சாலவும் பொருத்தமுடைய கருத்துதானே?

[தொடரும்]

*****

துணைநூல்கள்:

நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.