உயிரில்  கலந்த உறவே….

கண்தோன்றிய காலத்திலேயே

கற்பனையின்

கதைக்களமாக

வீறுகொண்டு

காதலித்தவளே…

குறிஞ்சியில்

குளித்து,

முல்லையில்

முகிழ்ந்து,

மருதத்தில்

ஊடல் கொண்டாய்….

வேப்பங்காயாய்

வெந்து தம்பியது

இணையிலா – நமது

காதல்….

பாண்டியனின்

துணையொடு,

குமரியிலிருந்து

குதூகலமாய்

வேங்கடத்திற்கு

பல்லக்கில் வந்த

மருமகளே….

சற்றும் எதிர்பார்க்காத

தருணத்தில்

இமயம் வரை

போர்புரிந்து,

பெண்மையின்

வன்மையையும்

மென்மையையும்

திண்மையையும்

உலகறியச்செய்தவளே……

உறக்கமில்லாத

இரவுகளில்

கால்களால் நடந்த கதையைக்கூறி

குமுறுவாய்…..

தொல்காப்பியனையும்

வள்ளுவனையும்

தோளில் சுமந்து,

நடைபயில்வித்து,

தலைசால் சான்றோன் ஆக்கியவளே….

பக்தியின்

பொருட்சுவையைச்

சுவைத்துச் சுவைத்து,

பரம் பொருளை

அறிந்தவளே…..

சிற்றின்பத்தேனை

சிற்றிலக்கியங்களில்

வழி நுகர்ந்தவளே….

பாரதிக்கும்

பாரதிதாசனுக்கும்

ஊன்றுகோலாய் நின்று,

எழுத்தாணியாய்

உருமாறி

வையம் முழுதும்

உலா வந்தவளே…..

மின்னூடகங்களிலும்

தகதகவென மின்னி,

ஒளிமயமாய்

ஒய்யாரியாய்

வாழ்பவளே…..

காற்றோடு

கை கோர்த்து,

நாமிருவரும்

கவி புனைந்த,

பல தருணங்களில்,

முரண்பட்டாலும்

நீயே – எந்தன்  பிம்பத்தின் பிரதி….

 

குமறும் எரிமலை

எல்லையற்ற

தருணங்களில்

கட்டுக்கடங்காத

மௌனங்கள்

குமுறுகின்றன

எரிமலைகளாய்…..

வசந்தத்திற்கான

போக்குகளெல்லாம்

வாய்ப்பினையெண்ணியே

தவம் இருக்கின்றன….

தனக்கான

தன்மானங்களெல்லாம்

கடன்வாங்கப்பட்டு

கந்துவட்டியினால்,

குட்டிமேல் குட்டி

போடுகின்றன..

சுயமரியாதையில்….

அசாதாரண மனிதர்களெல்லாம்

குகைக்குள் புகுந்த

புலிகளாய் உருமாறி

மென்று தின்று

தண்ணீர் குடிக்கின்றனர்

எலிகளை….

விண்ணப்பங்களை

கையில் ஏந்தியபடியே

இனம்புரியாத

தவிப்புகளும்

தழைகளும்

கைமீறி,

கடலைக்கடந்து

சென்றுவிட்டது

மௌனத்தைத்தேடி….

வலுவான வன்மங்கள்

சங்கமிட்டு,

கூட்டுக்கிளிகளாய்

குதூகலிக்கின்றன

தானும் பறந்துசெல்வதை மறந்து….

அலைக்கழிக்கின்ற

பொழுதுகளெல்லாம்

அதீத பிரியங்களோடு

இணையலாய்

தொற்றிக்கொள்கிறது

பாதங்களை….

மென்மையான

எண்ணங்களும்

வன்மையான

தருணங்களில்

கருத்தறித்து,

கூட்டுக்கிளிகளாய்

அடைபடுகின்றன….

தொட்டுவிடும்

தூரங்களைத்

தொடமுடியாதபடி

நிதமும்

களவாடப்படுகிறது

ஒவ்வொரு நம்பிக்கையும்….

 

முனைவர் வே. சுமதி,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.