Author: முனைவர்.சுமதி

  • தடமாறும் சொற்கள்

    முனைவர் வே. சுமதி

    தொப்புள் கொடியில்
    முளைவிட்ட
    சொற்பிளம்புகள்
    அறுக்கப்பட்டு
    ஆனந்தஜோதியாய்
    ருத்ரதாண்டவமாடுகிறது….
    பல நேரங்களில்
    உக்கிரமாகவே
    பிரசவமாகி,
    தலைவிரிகோலாமாய்
    தாண்டவமாடுகிறது…
    வலிகளான சொற்கள்
    மௌனத்தின்
    பாதைகளில்
    விழிகளை நோக்கி
    ஒற்றைக்காலில்
    கூத்தாடுகிறது….
    எண்ணங்களின்
    எண்ணற்ற வடிவங்களும்
    நல்லநேரம் பார்த்தே
    நிதானமாய்
    பிரயோகிக்கப்படுகிறது
    கானல்நீராய்…
    யுகயுகமாய் காத்திருந்த
    ஆயுதங்களின்
    கூர்முனைகள்
    நெம்புகோலால்
    பழுதுபார்க்கப்படுகிறது
    புழுக்களிடம்…..

    முனைவர் வே. சுமதி,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி.

    Share
  • சொற்களும் நானும்

    முனைவர் வே.சுமதி

    சொற்களில் குவிந்திருக்கின்றன
    ஓராயிரம் பொறாமையின் வன்மம்….
    சொற்களில் மறைக்கப்பட்டிருக்கின்றன
    எண்ணற்ற பாதைகள்….
    சொற்களில் ஊடுருவியிருக்கின்றன
    ஆயிரக்கணக்கான எதிர்பார்ப்புகள்….
    சொற்களில் வரையப்படுகின்றன
    கோடிக்கானக்கான மனிதர்கள்…
    சொற்கள் பிரதிபலிக்கின்றன
    எண்ணற்ற இருப்புகளை…
    சொற்கள் பெருமிதம் கொள்கிறது
    தனக்கான தனிமைகளில்…
    சொற்கள் வாழ்கிறன
    அர்த்தமுள்ள வாழ்க்கையில்….
    யாருமற்ற நேரங்களில்,
    தனக்கான இருப்பைத் தேடியே,
    நிசப்தமாகிறது
    சொற்கள்….

    Share
  • ஆன்மாவின் ஓசை

     

     

    வே.சுமதி

     

    அர்த்தமற்ற நிலையில்

    அறுந்து விழுகின்றன

    சபிக்கப்பட்ட வார்த்தைகள்….

    மந்திர நாடகங்கள்

    தினந்தோறும் அரங்கேற்றம்

    செய்யப்படுகின்றது

    நகர வீதிகளில்….

    ஆத்திச்சூடியின்

    மூச்சுக்காற்றில்

    கொஞ்சமாய் கொதித்துக்கொண்டிருக்கிறன

    வரலாற்றின் எஞ்சங்கள்…

    சர்வ காலமும்

    ஆகாயத்தின்

    அந்தப்புரத்திலிருந்து

    ஏதோ ஒன்று

    பந்தெனத் துள்ளிக்குதிக்கிறது…

    வானத்தில் கொஞ்சும்

    விண்மீன்களை

    ரசித்தபடி

    லயித்திருக்கிறது

    யாருமற்ற இந்த இரவு….

    கணத்த இதயம்

    இளஞ்சூட்டில்

    மிதமான தென்றல் காற்றோடு

    காத்துக்கொண்டேயிருக்கிறது..

    நிலாவில்

    வடை சூடும் பாட்டியோடு

    விளையாட…

    Share
  • உயிரில்  கலந்த உறவே….

    கண்தோன்றிய காலத்திலேயே

    கற்பனையின்

    கதைக்களமாக

    வீறுகொண்டு

    காதலித்தவளே…

    குறிஞ்சியில்

    குளித்து,

    முல்லையில்

    முகிழ்ந்து,

    மருதத்தில்

    ஊடல் கொண்டாய்….

    வேப்பங்காயாய்

    வெந்து தம்பியது

    இணையிலா – நமது

    காதல்….

    பாண்டியனின்

    துணையொடு,

    குமரியிலிருந்து

    குதூகலமாய்

    வேங்கடத்திற்கு

    பல்லக்கில் வந்த

    மருமகளே….

    சற்றும் எதிர்பார்க்காத

    தருணத்தில்

    இமயம் வரை

    போர்புரிந்து,

    பெண்மையின்

    வன்மையையும்

    மென்மையையும்

    திண்மையையும்

    உலகறியச்செய்தவளே……

    உறக்கமில்லாத

    இரவுகளில்

    கால்களால் நடந்த கதையைக்கூறி

    குமுறுவாய்…..

    தொல்காப்பியனையும்

    வள்ளுவனையும்

    தோளில் சுமந்து,

    நடைபயில்வித்து,

    தலைசால் சான்றோன் ஆக்கியவளே….

    பக்தியின்

    பொருட்சுவையைச்

    சுவைத்துச் சுவைத்து,

    பரம் பொருளை

    அறிந்தவளே…..

    சிற்றின்பத்தேனை

    சிற்றிலக்கியங்களில்

    வழி நுகர்ந்தவளே….

    பாரதிக்கும்

    பாரதிதாசனுக்கும்

    ஊன்றுகோலாய் நின்று,

    எழுத்தாணியாய்

    உருமாறி

    வையம் முழுதும்

    உலா வந்தவளே…..

    மின்னூடகங்களிலும்

    தகதகவென மின்னி,

    ஒளிமயமாய்

    ஒய்யாரியாய்

    வாழ்பவளே…..

    காற்றோடு

    கை கோர்த்து,

    நாமிருவரும்

    கவி புனைந்த,

    பல தருணங்களில்,

    முரண்பட்டாலும்

    நீயே – எந்தன்  பிம்பத்தின் பிரதி….

     

    குமறும் எரிமலை

    எல்லையற்ற

    தருணங்களில்

    கட்டுக்கடங்காத

    மௌனங்கள்

    குமுறுகின்றன

    எரிமலைகளாய்…..

    வசந்தத்திற்கான

    போக்குகளெல்லாம்

    வாய்ப்பினையெண்ணியே

    தவம் இருக்கின்றன….

    தனக்கான

    தன்மானங்களெல்லாம்

    கடன்வாங்கப்பட்டு

    கந்துவட்டியினால்,

    குட்டிமேல் குட்டி

    போடுகின்றன..

    சுயமரியாதையில்….

    அசாதாரண மனிதர்களெல்லாம்

    குகைக்குள் புகுந்த

    புலிகளாய் உருமாறி

    மென்று தின்று

    தண்ணீர் குடிக்கின்றனர்

    எலிகளை….

    விண்ணப்பங்களை

    கையில் ஏந்தியபடியே

    இனம்புரியாத

    தவிப்புகளும்

    தழைகளும்

    கைமீறி,

    கடலைக்கடந்து

    சென்றுவிட்டது

    மௌனத்தைத்தேடி….

    வலுவான வன்மங்கள்

    சங்கமிட்டு,

    கூட்டுக்கிளிகளாய்

    குதூகலிக்கின்றன

    தானும் பறந்துசெல்வதை மறந்து….

    அலைக்கழிக்கின்ற

    பொழுதுகளெல்லாம்

    அதீத பிரியங்களோடு

    இணையலாய்

    தொற்றிக்கொள்கிறது

    பாதங்களை….

    மென்மையான

    எண்ணங்களும்

    வன்மையான

    தருணங்களில்

    கருத்தறித்து,

    கூட்டுக்கிளிகளாய்

    அடைபடுகின்றன….

    தொட்டுவிடும்

    தூரங்களைத்

    தொடமுடியாதபடி

    நிதமும்

    களவாடப்படுகிறது

    ஒவ்வொரு நம்பிக்கையும்….

     

    முனைவர் வே. சுமதி,

    உதவிப்பேராசிரியர்,

    தமிழ்த்துறை,

    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.

    Share