திருமுறுகாற்றுப்படை உரை மரபு (சோமசுந்தரனார்)

0

-ஜெ.சுகந்தி

பழந்தமிழ் இலக்கியங்கள் பதிப்பித்த காலத்திலிருந்து இன்று வரையிலும் அதன் சுவைஅறிந்து உரை கூறும் மரபு இருந்து வருகிறது. இலக்கியங்களின் பொருளினை எளிமையாக்கி மக்களிடம் கொண்டு செல்வதில் உரையாசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதும் உரையாசிரியர்கள் தங்களுக்கு என ஒரு மரபை உருவாக்கிக் கொண்டு உரை எழுதுகின்றனர். அவ்வகையில் உரையாசிரியர்களில் சிறப்பிடம் பெறும் சோமசுந்தரனார் உரைஎழுதிய பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருஏரகத்தில் அமைந்துள்ள உரை  மரபுகளைப் பற்றி இக்கட்டுரை காண்போம்.

உரை விளக்கம்

இலக்கியம், இலக்கணம், உரை என்ற மூன்றும் மொழிப்புலத்தை மையமாகக் கொண்டு மூன்று வகைமைப்பட்ட தளங்கள். இவை, தமக்குள் நெருக்கமான உறவுகள் கொண்டவை. ஒன்றனுள் ஒன்று இவை விளக்கம் பெறுபவை. இலக்கியமும் இலக்கணமும் முதன்மையானவை என்றால் அவற்றின் காரியமாகவும் அவற்றின் விளக்கமாகவும் இருப்பவை உரைகள். 

மேலும், இலக்கிய இலக்கணங்களைச் செழுமைப்படுத்துவதற்கும், அவற்றின் வாசிப்புத் தளத்தைப் பொருளுடையதாகவும் விரிவுடையதாகவும் ஆக்குவதற்கும் உரைகள் உறுதுணை புரிவன. உரைகள் காலத்தின் தேவை. உரைகள் இல்லையெனில் பல தலைமுறைகளைத் தாண்டி வருகின்ற இலக்கிய இலக்கணங்களைப்புரிந்து கொள்வதிலும் விளக்குவதிலும் பெரும் துயரங்களும் தவறுகளும் தடைகளும் ஏற்படக்கூடும். முக்கியமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டுத் தோன்றிய சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியத்தையும் இந்த உரையாசிரியர்கள் தான் நம்மோடு நெருங்கயிருக்கச் செய்திருக்கிறார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில், உரைகள் மிக முக்கியமான இடம் வகிக்கின்றனர். வேறெந்த மொழிகளிலும் இத்தகைய உரைகளையோ, அவற்றின் நீண்ட வரலாற்றையோ, பன்முகப்பட்ட பரிமாணங்களையோ காணமுடியாது. தமிழ் மொழியின் தனிச்சிறப்பியலான பண்பு இதுவாகும்.

உரை என்பது உரைத்தல் அல்லது சொல்லுதல் என்ற பொருளுடையது. குரு, சீடன், ஆசிரியன், மாணாக்கன் என்ற உறவுமுறையில், ஒருவர் விளக்கிச்சொல்ல பலர் இருந்து கேட்க என்ற முறையில் எழுந்தது உரை கல்வி அல்லது தோரணி இதற்கு உண்டு. ‘கற்றிலனாயினும் கேட்க’ என்ற அடிப்படையிலான ஒரு தேவையையும் முறைமையையும் கொண்டது. விளக்குதல் என்ற பொருண்மையோடு கூடியது உரை ஆகும்.

சோமசுந்தரனாரின் உரைநெறி

பத்துப்பாட்டில், ஆறுபடைவீடுகளுள் ஒன்றான திருஏரகத்தில் அமைந்துள்ள உரைநெறிகள் பின்வருமாறு:

அவை,

1 சொற்பொருள்

2 காரணம் காட்டிப் பொருள் கூறுதல்

3 மேற்கோள் காட்டுதல்

4 தன் கருத்திற்கு ஒத்த உரையைக் கூறல்

5 ஒன்றிற்கும் மேற்பட்ட உரைகளைக் கூறல்

6 இயைபு சுட்டல்

சொற்பொருள்

சோமசுந்தரனார் அகலவுரையில் சிற்சில இடங்களில் மட்டும் அருஞ்சொற்பொருள் குறிப்பிட்டுச் செல்கிறார்.

இருவர்- தாயும் தந்தையும் (திரு.177)

அறுநான்கிரட்டி- நாற்பத்தெட்டு  (திரு.178)

ஞாண்- ஈண்டுப்பூணுவம் நூல் என்க  (திரு.183)

புலர – தம்முடம்பிலிருந்தே புலரும்படி என்க  (திரு.184)

காழகம்- ஆடை  (திரு.184)

உடீஇ-உடுத்து (திரு.184)

தன்-தன்னை (திரு.185)

ஏரகம்-திருவேரகம் என்னும் ஊர் (திரு.189)

காரணம் காட்டிப் பொருள் கூறுதல்

சில சொற்கள் படிமப் பொருளுடையனவாயிருக்கின்றன. சில உட்பொருள் உடையனவாயுள்ளன. அத்தகையவற்றிற்கு இன்ன காரணத்தால் இப்பொருளுடையதாகிறது எனச் சுட்டிச் சொல்லுதல் சோமசுந்தரனார் போன்ற உரையாசிரியர்களிடம் சிறப்பாக காணப்படுகின்றது. இவற்றில், சொல் காரண முறை கூறுதல், தொடர் காரண முறை கூறுதல் போன்ற இருநிலைகள் காணப்படுகின்றன.

சொல் காரண முறை கூறுதல்

‘இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி’ (திரு.178)

தாயும் தந்தையுமாகிய இருவர் குலத்தையும் உலகத்தார் நன்றென்று மதித்த பலவாய் வேறுபட்ட பழைய குடியார் பிறந்த என்றார். இருவர் என்பதனைத் தாயும் தந்தையுமாகிய இருவர் குடியும் உயர்குடி என்று உலகத்தாற் சுட்டிப் புகழப்பட்ட நற்குடிப் பிறப்பினர் என்றவாறு, அந்தணர்க்குரிய நல்லொழுக்கத்தே வழுவாமல் நிற்றற்குத் தலைசிறந்த ஓதுவாவது, உயர்குடிப் பிறப்பேயாகலின் அதனை விதந்தெடுத்தோதினார்.

மேலும்,

‘மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து’ (திரு.181)

நாற்சதுரமும், முச்சதுரமும் வில் வடிவமுமாகிய மூன்று வகையைக்கருதின ஆகவனீயம் தக்கிணாக்கினி காருகபத்தியம் என்னும் மூன்று தீயானுண்டாகிய செல்வத்திணையும் உடைய, என்றார். முத்தீ என்பதற்கு மூன்றாவன ஒன்று வேதத்தை வழங்கவும் ஒன்று தேவர்கட்குத் தக்கிணை கொடுக்கவும், ஒன்று பூலோகத்தை இரட்சை பண்ணவும்; இவ்வாறாய முத்தீ என்பாருமுளர் என்று கூறியுள்ளார்.

தொடர் காரண முறை கூறுதல்

‘இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅது’ (திரு.177)

ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல் நின்று கூறினார். மெய்ந்நூலில் அந்தணர்க்கோதிய இயல்பு ஆறாகலின் ‘இருமூன்று எய்திய இயல்பு’ என்றார். அவை, ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் தொடர்களை காரண முறையில் விளக்கம் கூறுகிறார்.

‘ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை’ (திரு.180)

மெய்ந்நூல் கூறும் நெறியானே கழித்த அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும் என்றார். கழித்தல் அருமை என்பது தோன்றக் கழிப்பி என்றார். உலகில் காம முதலிய நுகர்வார்க்குப் பதினாறாண்டு அகவை முதல் நாற்பத்தெட்டாண்டின் இறுதியாகவுள்ள பருவமே தகுதியான பருவம் ஆதலால், அத்தகைய பருவத்தினும் காம முதலியவற்றில் உளம் போக்காது அடங்கிய அருமை தோன்ற நல்லியாண்டு ஆறினிற் கழிப்பி என்றார்.

‘இருபிறப் பாளர் பொழுதறிந்து நூவல’ (திரு.182)

நூலணிதற்கு முன்னர் ஒரு பிறப்பும் பின்னர் ஒரு பிறப்புமாகிய இருபிறப்புனையுமுடைய அந்தணர் தாங்கள் வழிபடுங்கால மறிந்து வாழ்த்துக் கூறாநிற்படி என்றார். பொழுதறிந்து நுவல என்பதற்கு, ‘உதயகாலத்தும் மத்தியான்ன காலத்தும் அத்தமன காலத்தும் தாபனம், அநுட்டானம் பூசையாகிய மூன்று தொழிலையும் முயன்று செய்ய, என்பாரும் என்று கூறியுள்ளார்.

‘ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞான்’ (திரு.183)

முந்நூல் கொண்டு முப்புரியாக்குதலின் ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட ஒருபுரி மூன்றாகிய நுண்ணிய பூணூலையும் உடையதென்பர். ஒவ்வொரு நூலும் மூன்று புரி உடைத்தாய் மூன்றாகலின் ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண் என்று கூறியுள்ளார்.

‘புலராக் காழகம் புலர உடீஇ’ (திரு.184)

நீராடுங்காற் தோய்க்கப்பட்ட கலிங்கம் உடம்பிலே கிடந்து புலரவுடுத்து என்றார். நீராடிய ஆடை புலராத படியிலிருந்து வழிபடுவோர் என்பார் ‘புலராக் காழகம் புலர உடீஇ’ என்று கூறினார்.

மேற்கோள்

பொ.வே. சோமசுந்தரனார் பத்துப்பாட்டு நூற்பாவுக்குத் தாம் கூறும் உரை விளக்கம் ஒவ்வொன்றிற்கும் இயன்ற வரை தமக்கு முன் தோன்றிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டிக் கொண்டே செல்கிறார்.

1 தொல்காப்பிய நூல்களில் புறத்திணை மேற்கோள் காட்டுதல்

2 எட்டுத்தொகை நூல்களில் பதிற்றுப்பத்து மேற்கோள் காட்டுதல்

3 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் மேற்கோள் காட்டுதல்

4 காப்பிய நூல்களில் சிலப்பதிகார மேற்கோள் காட்டுதல்

போன்றவை சோமசுந்தரனார் மேற்கோள்களாகக் கையாண்டுள்ளார்.

தன் கருத்திற்கு ஒத்த உரையை கூறல்

சோமசுந்தரனார் தான் கூறும் கருத்திற்கு மேலும் விளக்கம் தரும் வகையிலும் தன் கருத்திற்கு அரண் செய்யும் வகையிலும் முந்தைய உரைக் கருத்துக்களைத் தருகிறார்.

———-பெரிது வந்து
ஏரகத் துறைதலும் உரியன் அதாஅன்று (திரு.188-189)

அச்செயற்குப் பெரிதும் மகிழ்ந்து திருவேரகம் என்கின்ற ஊரிலே இத்தலம் உரியன் என்றார்.

இதனை,

‘மலைநாட்டகத் தொரு திருப்பதி’

என்றார் நச்சினார்க்கினியர்.

ஒன்றிற்கும் மேற்பட்ட உரைகளை கூறல்

சோமசுந்தரனாரின் ஒரு நூற்பாவிற்கு இரு மாறுபட்ட கருத்துகளும் இருந்தன. அவற்றையும் உரை விளக்கத்தில் எடுத்துரைக்கின்றார்.

‘————– பெரிது வந்து
ஏரகத் துறைதலும் உரியன் அதாஅன்று'(திரு.188-189)

அச்செயற்குப் பெரிதும் மகிழ்ந்து திருவேரகம் என்கின்ற ஊரிலே இத்தலம் உரியன் என்றார்.

இதனை,

‘மலைநாட்டகத் தொரு திருப்பதி’

என்றார் நச்சினார்க்கினியர்.

சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் – வெண்குன்றத்தைச் சுவாமிமலை எனலாம். ஏரகம் மற்றொரு திருப்பதி என்று கருதினாராதல் வேண்டும். அருணகிரியார் – சோழநாட்டிலுள்ள சுவாமிமலை என்னும் தலமே ஏரகம் என்று பொருள் விளக்கம் தருகிறார்.

இயைபு சுட்டல்

ஒரு நூற்பாவிற்கும் அடுத்த நூற்பாவிற்கும் இயைபு சுட்டிப் போகும் நயத்தினையும் சோமசுந்தரனார் உரையில் காணலாகும்.

நூற்பா இயைபு  

‘அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வல மடங்கைக் கவிழிணர்
மாழுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
யெயா நல்லிசைச் செவ்வேற் சோய்’ (திரு.58-61)

என்ற தொடரில், சற்று வேறாம் வகையாகவே அச்சந்தோன்ற மிக்குச் சென்று, அவனை யொழிந்த அவுணருடைய நல்ல வெற்றி இல்லையாம்படி, கீழ்நோக்கின் பூங்கொத்துக்களையுடைய மாமரத்தை வெட்டின, குற்றமில்லாத வெற்றியினையும் ஒருவரானும் அளந்தறிய வொண்ணாத நல்ல புகழினையும் செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுள், என்றார்.

அஞ்சி ஓடிக் கடல் கலங்கப்புக்க, சூரன்மாலைத் தடிந்த காலை அவன் உடல் அற்று வேறாம் வகை செய்ய மேலும், அவுணர் நல்வலமடங்க மாமரத்தினையும் தடிந்த கொற்றத்தூர் சேய் என்ற சொற் கிடந்தவாறே இயைபு காண்க.

நூற்பா தொடர் இயைபு 

‘அறுநாண் கிரட்டி இளமை நல்லியாண்டு’ (திரு.179)

இருபத்து நான்கின் இரட்டியாகிய நாற்பத் தெட்டாகிய இளமை மிக்க நன்றாகிய யாண்டுகளை அறுநான் கிரட்டி  – நாற்பத் தெட்டு யாண்டு பிரமசரியங்கழித் தென்பார், ஆறினிற் கழிப்பி இயைபுப்படுத்தி  என்று கூறுகிறார்.

முடிவுரை

இலக்கிய இலக்கண உருவாக்கம் சமுதாய உருவாக்க அங்கமாக இருக்கும் நிலையில் குறிப்பிட்ட சமுதாய வளர்ச்சி அதன் இலக்கண இலக்கிய உருவாக்கத்தில் வளர்ச்சியில் மட்டுமே அடங்கிவிடுவதில்லை. இந்த இலக்கண இலக்கியங்கள் எவ்வாறு தொடர்ந்து பேணப்பட்டு வருகின்றன; எவ்வாறு ஆராயப்பட்டு வருகின்றன எவ்வாறு பயன் கொள்ளப்பட்டு வருகின்றன என்பதிலும் சமுதாய வளர்ச்சி அடங்கியுள்ளது. இந்த மரபுப் பேணலின் ஒரு முக்கிய அங்கமாக அமைவனவே உரைகள்.

பார்வை நூல்:

பத்துப்பாட்டு – பொ.வே. சோமசுந்தரனார்

*****

கட்டுரையாளர் – முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),
சேலம் – 7.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *