இலட்சுமியின் மருமகள் புதினத்தில் உத்தி முறைகள்
-முனைவர் ஆ .உமா
உலகில் தோன்றும் அனைத்து உயிரினங்களும் தனித்திறமை பெற்றே விளங்குகின்றன. இதில் தன்னிடமுள்ள தனித்திறனை வெளிப்படுத்துவதில் மனிதனே முன்னோடியாக விளங்குகிறான். சிந்தித்துச் செயல்படுவதில் சிறந்தவனான மனிதன் தன் சிந்தனைகளைப் பலவாறு வெளிப்படுத்துகிறான். ஒரு கவிஞனின் சிந்தனைத் திறனின் வெளிப்படுதான் கவிதை. ஓர் எழுத்தாளனின் கற்பனைத் திறன்தான் கதைகள். நாடகங்கள், கட்டுரைகள், புதினங்கள் ஆகும். ஒரு கதையின் உள்ளடக்கப் பொருளுக்கு அஞ்சி நோக்க வேண்டியவை கதையின் உத்தியும் மொழிநடையும் ஆம். உத்தியினால் ஒரு கதை சிறப்பு நிலையடையும். படைப்பாளர் இலட்சுமி பல உத்தி முறைகளைக் கொண்டு புதினம் படைத்துள்ளார். அதனால் அவரின் மருமகள் என்ற புதினத்தில் காணலாகும் உத்திமுறைகளை எடுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
உத்தி – விளக்கம்
படைப்பாளன் தன் படைப்பின் வழியே வெளிக்காட்டும் நுண்ணிய அணுகுமுறையை உத்தி எனலாம். ‘பொதுவாகப் படைப்பாளன் தான் கூறவந்த செய்தியான உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் முறையே உத்தி எனலாம்’.1 என்கிறார் டாக்டர் ந. பிச்சமுத்து.
பாரதியார், தாம் கவிதையில் சொல்ல முடியாத சில செய்திகளை வசன கவிதை வடிவத்திலும், சிந்து, கண்ணி, போன்றவை கூறுவது கூட ஒருவகை உத்தி தான் என்கிறார் அவர்.
‘படைப்பாளன் தான் சொல்ல வந்த கருத்துக்களைக் கற்பவர் மனத்தில் எளிதில் பதியச் செய்யவும் விளங்க வைக்கவும் கையாளும் முறைகள் உத்தியாகும்’2 என்று செ. சாரதாம்பாள் கூறியுள்ளார்.
‘ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் நுதலிய தறிதல் முறையே தொகுத்துக் கூறல் வகுத்து மெய்ந்தளித்தல் மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல்’3 எனத் தொல்காப்பியர் உத்தியின் அணுகுமுறையைக் கூறியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட விளக்கங்களின் அடிப்படையில் இலட்சுமியின் புதின இலக்கிய உத்திகள் வரையறுக்கப்படுகின்றது.
பின்னோக்கு அல்லது நினைவுப்பாதை உத்தி
புதின இலக்கியங்களில் ஏறக்குறைய அனைத்துப் படைப்பாளரும் பயன்படுத்தும் உத்தி இதுவாகும். முன்பு நிகழ்த்தும் நிகழ்வுகளை எண்ணிப் பார்ப்பதே இவ்வுத்தியாகும்.
‘சம்பவத் தகவல்களால் கதைப்பின்னல் வளராமல் எண்ணங்கள், நினைவுகள்,கருத்துகள்,உணர்ச்சிகள் இவற்றில் கதை உணர்த்துவதுதான் படைப்பாளர் நினைவுப்பாதை அல்லது பின்னோக்கு உத்தி’4 என்று சி.சு. செல்லப்பா உரைக்கிறார்.
மருமகள் என்ற புதினத்தில் வரும் சுகந்தி இக்கதையின் தலைவியாவாள். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பெற்றோர் சம்மதத்துடன் மனோகரனைக் கரம் பிடிக்கிறாள். கணவன் தன்மேல் அன்பு காட்டாததை நினைத்து மனம் வருந்துகிறாள். ஒரு கட்டத்தில் ஆணாதிக்கப் போக்கினை நினைத்து மனம் வருந்துகிறாள். மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் தவறான போக்கில் செல்லும் ஆண்களின் தவறொழுக்கத்தினை எவ்வாறு தண்டிப்பார் என்று தன் கல்லூரி பழைய நினைவுகளை நினைத்து பார்க்கிறார். இதனை,
‘ஒரு ஆண் தன் மனைவிக்கு துரோகம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்த பெண் என்ன செய்ய வேண்டும்?
பழிக்குப் பழி என்று அவளும் அவனுக்குத் செய்யணும். சீ! ரொம்ப மட்டமான புத்தி உனக்கு! ஆண்புத்தி கெட்டுச் சாக்கடையில் விழுந்தால் அவனைப் பழி வாங்க அவன் மனைவியும் அதே தவறை செய்தால் சரியாகி விடுமோ? அவள் தான் தன்னை மாசுபடுத்திக் கொள்வாள்’. என்று பாத்திரம் நினைவு கூறுவதாக இலட்சுமி அடிகளில் காட்டியுள்ளார்.
கடித முறை உத்தி
அந்தக் காலம் முதல் இந்த காலம் வரையில் கடித முறையினைப் படைப்பாசிரியர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். இவ்வுத்தியினை இலட்சுமி மிகச் சிறப்பாகவே பயன்படுத்தியுள்ளார். கதை மாந்தர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் கடிதங்கள் வாயிலாகப் புலப்படுத்தும் முறையில் மருமகள் என்ற புதினம் அமைக்கப்பட்டுள்ளது.
மருமகள் என்ற புதினத்தில் வரும் மனோகரன் அலுவல் பணியாக வெளியூருக்குச் செல்கிறான். அப்பணி முடிக்க நாட்கள் ஓடவே கமலாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்புகிறான்.
அன்புள்ள அண்ணிக்கு,
நான் உங்களைப் பற்றியே நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தேன். நான் உங்களுக்கு வாக்களித்தபடி காரியங்களைக் கவனித்துக் கொள்வேன். நீங்கள் வீணாக மனதை அலட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருக்க வேண்டும் நான் நாளை இரவு விமானத்தில் திரும்பி விடுவேன். மற்றவை நேரில்.’6
தங்கள் அன்புள்ள மனோகரன்
‘இந்த கடிதத்தைப் பற்றி என்ன நினைக்கிறே? உனக்குக்கூட எழுத முடியாதபடி உன் கணவருக்குத் தலைக்கு மேலே அங்கே வேலை. ஆனால் அண்ணிக்கு எழுத முடிகிறது. அவர்களைப் பத்தியே நினைச்சிக்கிட்டிருக்கிறாராமே கன்றாவி’ சொல்லியபடி மறுபடியும் எச்சரிக்கையுடன் கடிதத்தை உறைக்கு முன் வைத்து, நெகிழ்ந்து விட்டிருந்த பசையினால் நன்றாக ஒட்டினாள். பின்னர் அதை மற்ற கடிதங்களுடன் வைத்தாள். இக்கடிதத்தை படித்த சுகந்தி மிகவும் வருந்துகிறார்.
வருணனை உத்தி
வீட்டிற்கு புதிதாக வந்த மருமகள் சுகந்தியின் தோற்றத்தை ஆசிரியர் வர்ணிக்கின்றார். கணவனை விட உயரத்தில் சிறிது குறைவாகக் கொடி போன்ற தோற்றத்தில் தங்க நிறத்திலே… மேனியில் துவண்ட அமெரிக்கன் நைலான் புடவையில் கனவு கன்னிபோல பார்க்க வெகு அழகாக இருந்தாள் சுகந்தி என்று கூறுவதிலிருந்து சுகந்தியின் அழகையும் தோற்றப் பொலிவையும் விளக்கியுள்ளார்; பார்ப்பவர்கள் கண்டு வியப்பதாக அவளது அழகு இருக்கிறது.
‘எல்லாரைக் காட்டிலும் வீட்டுக்கு வந்திருக்கும் மருமகள் தான் ரொம்ப அழகு. பச்சைக்கிளி போல ஒரு பெண்ணை சின்னய்யா பிடிச்சுட்டாரே!’
தலைப்பினால் கதையை உணர்த்தும் உத்தி
கதையானது இவ்வாறு அமைந்திருக்கக் கூடும் என்று தலைப்பை வைத்து ஓரளவு புரிந்து கொள்வதே இவ்வகை உத்தியாகும்.
‘கற்றோரது ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் கதையைப் படிக்கும் விருப்பம் எழுவதற்கும் உதவுகின்ற முதல் கருவி தலைப்புத் தான்”7
என்பது கலை இலக்கிய ஆய்வும் அணுகுமுறையும் என்ற நூலின் மூலம் தெளிவாகிறது.
மருமகள் என்ற கதையில் சுகந்தி மூன்றாவது மருமகள் ஆவாள். கமலா, அனு இருவரும் மாறுபட்ட மருமகள் ஆவார்கள். இருப்பினும் கூட்டுக் குடும்பாக வாழ்கின்றனர். பல்வேறு குண நலன்களைக் கொண்ட மூன்று மருமகள்களைக் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களையும் அவற்றைப் புதிதாக வந்த மருமகள் சுகந்தி எவ்வாறு சமாளிக்கிறாள் என்பதையும் வெகு சுவையாக விவரிப்பதாக இக்கதை அமைகிறது.
பல்வேறுபட்ட பண்பாடுகளும் பழக்க வழக்கங்களும் நிறைந்தது நம் நாடு. அதன் ஒருமைப்பாட்டைக் காக்க ஒவ்வொருவரிடமும் சகிப்புத் தன்மையும் ஒருமைப்பாட்டு உணர்ச்சியும் அவசியம் தேவை. நாடு ஒற்றுமையுடன் இருக்க ஒவ்வொரு வீடும் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என்பதனை இக்கதையின் வழியே தெளிவாக உய்த்துணர முடிகிறது.
கதையை நடுவில் தொடரும் உத்தி
இன்று பல படைப்பாளர்களும் கதையினை நடுவில் இருந்து தொடங்கும் ஓர் உத்தியினைக் கையாண்டு வருகிறார்கள். இவ்வுத்தியினை இலட்சுமி மிக அழகாகவே கையாண்டுள்ளார்.
மருமகள் என்ற புதினத்தில் கதையானது நடுவில் இருந்து தொடர்கிறது.
’வாயிற்படியில் விரிவாகப் பாவப் பட்டிருந்த சிமெண்டுத் தரைமீது செம்மண் கரை கட்டிய பெரிய மாக்கோலம். வாயிற்படி முகப்பில் மாவிலைத் தோரணம் என்ற அலங்காரத்தில் அபிராமி இல்லம். அந்த வீட்டின் மூன்றவாது மருமகளுக்கு வரவேற்புத் தரத் தயாராகி விட்டிருந்தது’8
என்று திருமணக் கூட்டத்தினைக் கொண்டு துவங்குகிறார் ஆசிரியர்.
தொகுப்புரை
ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தும்போது அவரின் வெளிப்பாட்டுத்திறன் வெளியாகிறது. உத்தியின் மூலம் ஆசிரியரின் தனித்திறனை அறிய முடிகிறது.
அடிக்குறிப்புகள்
1.ந.பிச்சமுத்து, திறனாய்வும் தமிழ் இலக்கியக் கொள்கைகளும் ப.4.
2.செ.சாரதாம்பாள், செவ்வியல் ப.71.
3.தொல்காப்பியர், தொல்காப்பிய நூற்பா எண் – 656.
4.சி.சு. செல்லப்பா, இலக்கியச் சுவை ப.249.
5.இலட்சுமி, மருமகள் ப.32-33.
6.மேலது ப.60.
7.ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம்,கலை இலக்கியம், ஆய்வும் அணுகுமுறையும் ப.99.
- இலட்சுமி,ப.1.
*****
கட்டுரையாசிரியர் – தமிழ்த்துறை விரிவுரையாளர்,
அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),
சேலம் – 7.