ஆற்றுப்படைகளில் ஐயப்பன் தொன்மங்கள்
-த.யசோதா
ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் வறுமையுற்ற, இசைக்கலையில் வல்லமை பெற்ற புலவர்களையும், பக்தர்களையும் வள்ளலிடமும், கடவுளரிடமும் வழிப்படுத்துவதாக இடம்பெற்றுள்ளன. வா.மு.சேதுராமன் அவர்கள் பக்தர்களை ஐயப்பனிடத்தில் ஆற்றுப்படுத்துவதற்காக ‘ஐயப்பன் ஆற்றுப்படை’என்னும் நூலை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றுப்படை நூல்களில் அமைந்துள்ள ஐயப்பன் பற்றிய தொன்மச் செய்திகளை எடுத்துக் கூறுவதாக இச்சிறுபகுதி அமைகிறது.
ஆற்றுப்படை – விளக்கம்
ஆற்றுப்படை என்பதற்கு,
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்” [தொல்.பொருள். 88]
என்னும் பாடாண்திணை நூற்பா மூலம் தொல்காப்பியம் விளக்கம் தந்துள்ளது.
ஆற்றுப்படைக்கு விளக்கம் தரும் தமிழ் லெக்சிகன் அகராதி,
“பரிசில் பெற்றானொருவன் அது பெறக் கருதியவனை
ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடும்
பிரபந்தம்” [தமிழ் லெக்சிகன் தொகுதி-I ப-257] என விளக்கம் தந்துள்ளது.
தொன்மை – விளக்கம்
மிகப் பழமையான செய்திகளைத் தொன்மம் என்னும் பெயரில் அழைக்கலாம். இலக்கண நூலான தொல்காப்பியத்தில் செய்யுளின் எண்வகை வனப்புகளுள் தொன்மமும் ஒன்று என்பதனை,
“தொன்மை தானே சொல்லுங் காலை
உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே” [தொல்.பொருள்.நூற்.538] என்னும் நூற்பா தெளிவுப்படுத்துகின்றது.
தொன்மத்திற்கு விளக்கம் தரும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி,
“தொன்மை பெ. (ஆன) காலத்தால் மிகவும் முற்பட்டது,
பழமை, தொன்மையான மொழி, தொன்மைச் சிறப்பு வாய்ந்த கோட்டை.” [க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ப–594] எனப் பொருள் தந்துள்ளது.
ஐயப்பன் விளக்கம்
ஐயன் என்பதன் குறுக்கம் ஐயப்பன் ஆகும். ஐ என்ற ஓரெழுத்துக்கு அழகு, தலைமை என்ற சிறந்த பொருள்கள் உண்டு. அழகிய அப்பன் – தலைமை அப்பன் ஐயப்பன் என்று பொருள் தருகிறது. அரியாகிய திருமாலும், அரனாகிய சிவனும் சேர்ந்து புணர்ந்த காலத்தில் பிறந்தவர் ஐயப்பன் என்று வரலாறு எடுத்துரைக்கின்றது.
“ஐயன் – அரசன், அரிகரபுத்திரன், அருகன், அழகுடையவன், ஆசிரியன், உயர்ந்தோன், கடவுள், குரு, சிவன், தந்தை, தமையன், தலைவன், மூத்தோன்.” [கழகத் தமிழ் அகராதி, ப–229] என்று கழகத்தமிழ் அகராதி விளக்கம் தந்துள்ளது.
உடைகள்
பாரதபூமி ஆன்மிக பூமி என்பதனைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்த வழிபாட்டு முறைகளுள் ஐயப்பன் வழிபாடும் ஒன்று. ஐயப்பன் வழிபாடு பிறதெய்வ வழிபாடுகளினின்றும் முற்றிலும் வேறுபட்ட வழிபாடாகும்.
பிறதெய்வங்களை வழிபடத் தனிப்பட்ட விரதம் தேவையில்லை. ஆனால் ஐயப்பனை வழிபடுவதற்குச் சிறப்பான விரதம் அனுஷ்டிக்க வேண்டும் விரதங்கள் அனுஷ்டிப்பதில் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் இறைவனை விரதமிருந்து அந்நாளில் எந்தெந்த வண்ணங்களில் ஆடை உடுத்துவது சிறந்தது என்பதை,
“கருமை நீலக் காவி உடைகளில்
வருநோய் மறந்து வாய்மை நெஞ்சை”
[ஐயப்பன் ஆற்று.பா.வரி.13-14]
என்னும் வரிகளில் கறுப்பு அல்லது நீலம் அல்லது சிவப்பு நிற ஆடைகளை ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் நாள்களில் உடுத்த வேண்டும் என்றும் அவ்வாறு விரதம் இருந்தால் நோய்கள் நம்மைவிட்டு அகலும். மனசாட்சிப்படி உண்மை பேச வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
பதினெட்டுப் படிகள்
ஒவ்வோர் ஆண்டும் ஐயப்பன் தலத்திற்குச் செல்லும்போது 18 படிகளில் அவரவர் செல்லும் ஆண்டின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு படியை முதல் படியிலிருந்து கணக்கிட்டுப் படித்தேங்காய் அடிக்க வேண்டும்.
பதினெட்டுப் படிகளை பலமுறை ஏறித் தன் மனத்தைப் பக்குவப்படுத்தி ஐயப்பன் அருள் பெற வேண்டும் என்பதை,
“பதினெண் தத்துவன் விதிம கத்துவம்
மதிநன் மனத்தால் அதிகம் தெரிந்து
தத்துவப் படிகள் தவம்பதி னெட்டை
உத்தியால் பதினெண் உறுமுறை பலமுறை
ஏறிஏறி இவ்வுல(கு) ஆசை
மாறி மாறி மனத்தைப் பக்குவம்
ஆக்கி வையம் ஆக்கும் அவனருள்
தேக்கிப் பாயும் சிறகுள ஆறாய்”[ஐயப்பன் ஆற்று.பா.வரி.35-42]
என்னும் வரிகள் விளக்குகின்றன.
இருமுடியின் மகத்துவம்
ஐயப்பன் வரலாற்றில் மணிகண்டனின் வளர்ப்புத் தந்தையான அரசன் அவனுக்கு இளவரசனாக முடிசூட்டி வைக்க விரும்பினார். அரசியாருக்கும் அமைச்சர்களுக்கும் இது பிடிக்கவில்லை. எனவே மணிகண்டனை ஒழித்துக்கட்ட முடிவு செய்தனர். அந்தச் சூழ்ச்சியின்படி அரசியார் தனக்குத் தாங்கமுடியாத தலைவலி வந்துவிட்டதென்றும் அதனைப் போக்க வேண்டித் தலைக்குப் புலிப்பால் தடவவேண்டும் என்றும் கூறி, மணிகண்டனை காட்டுக்கு அனுப்பிப் புலிப்பால் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டாள்.
மணிகண்டன் மறுக்கவில்லை. தைரியமாகப் புறப்பட ஆயத்தமானான். ஆனால் மன்னனுக்கு இச்செய்கை மிகுந்த வேதனையைத் தந்தது. இருப்பினும் மணிகண்டனே மனம் விரும்பிப் புறப்பட்டு விட்டமையால் “முக்கண் உடைய பரமனே உன்னைக் காத்தருள வேண்டும்’என்று ஆசி கூறி, முக்கண்களை உடைய தேங்காயைப் பரம்பொருளாகப் பாவித்து அதில் நெய்நிரப்பி, பூஜைப் பொருள்களையும் சேர்த்து ஒரு முடியாகக் கட்டி, மற்றொரு முடியில் அவனுக்கு வேண்டிய உணவுப் பொருள்களையும் வைத்துக்கட்டி இருமுடி தயாரித்துக் கொடுத்தனுப்பினார் என்று வரலாறு எடுத்துக்கூறியுள்ளது.”
[மிழலைத் தொண்டன், ஸ்ரீ ஐயப்பன் வரலாறு, வழிபாட்டு முறைகள், ஸ்தோத்திரங்கள், பக்.8]
மணிகண்டன் இருமுடியைத் தலையில் சுமந்து, கையில் வில்லும் அம்பும் ஏந்தி காட்டுக்குச் சென்றான். இதுவே இருமுடி தோன்றிய வரலாறு. இதனை,
“பாதம் காணப் பயனார் இருமுடி
வேதச் சுமையை வியந்து பயந்து
கட்டிட வேண்டும்! காணரும் அந்த
இருபை கொண்ட இருமுடிப் பையோ
கருப்பைத் தாயின் கர்ப்பப் பைபோல்
தக்க பெருமைத் தான்கொண்டதுவாம்
மிக்கோன் சாத்தா விரும்பும் பூசைப்
பொருளை ஒருபை பொருந்த அதனுள்
தேங்காய் திறந்திடு சிறுகண் துளையில்
பாங்காய்ப் பக்குவப் பசுநெய் ஊற்றி
மாங்காய்ப் பாலுண் மலைமீ திருப்பார்
ஓங்காரப் பெயர் உவக்க அடைத்து
கற்பூர நைவேத் தியப்பொருள் அனைத்தும்
பொற்புடன் இட்டுப் பொறைநிறை கட்டி
முன்பை இப்பை தன்னை அய்யன்
ஆன்புக் காக்கி அடுத்த பின்பை
நடைவழி செல்லும் நமக்கு உரிய
இடைவழி வேண்டும் ஏற்ற பொருள்களை
வைத்துக் கட்டி வாய்மை நெஞ்சைப்
பைத்தலம் மாக்கி பண்டம் தலையின்
மீதே இருத்தி யாதும் துறந்து
மாதே வன்தன் மாண்பே உயிராய்” [ஐயப்பன் ஆற்று.பா.வரி.98-119]
என்னும் வரிகளில் இருமுடியின் மகத்துவத்தைக் கூறியுள்ளார். இருமுடியைக் கருப்பைத் தாயின் கர்ப்பப் பைபோல் பாதுகாக்க வேண்டும். மேலும் ஒருமுடி முக்கண்களையுடைய தேங்காயில் நெய் நிரப்பியும், பூஜைப் பொருட்களையும் சேர்த்து ஒருமுடியாகவும் மற்றொரு முடியில் உணவுப் பொருட்களையும் கொடுத்து அனுப்பியுள்ளனர் என்பதையும் அறியமுடிகின்றது.
மணிகண்டனின் வீரம்
தன் தாயின் சூழ்ச்சியால், அரசியார்க்குத் தலைவலி ஏற்பட்டது என்றும், அதற்குப் புலிப்பால் தடவினால் சரியாகும் என கூறியதனால், புலியின் பால் கறந்துவர மணிகண்டனாகிய ஐயப்பன் காட்டுக்குச் சென்றான் என்பதை,
“தாய்தலைக் குத்துநோய் தண்மை தீர்க்கப்
பாய்புலிப் பாலைப் பரிந்து கறந்து
கொணரும் வேளைக் கொடைஅருள் அய்யன்
அளவிலா வீரம் ஆண்மை தெளிந்து” [ஐயப்பன் ஆற்று.பா.வரி.126-128] இவ்வரிகள் புலப்படுத்துகின்றன.
ஐயப்பன் வேட்டையாடச் சென்ற வழி
ஐயப்பன் வேட்டையாடச் செல்லும் வழியினையும், வெற்றி பெற்றதையும் பற்றி,
“வரிப்புலி வேட்டை வாகை சூடிய
புரிகலைச் செல்வன் போன வழியதாம்
பலப்பல வழிகள் தலந்திகழ் அய்யன்
செலவுக் குண்டெனின் சிறப்பிவ் வழியே” [ஐயப்பன் ஆற்று.பா.வரி.157-160] இவ்வரிகள் விளக்குகின்றன.
அரசன் கோயில் கட்டிய இடம்
சிறுவயதிலிருந்து மணிகண்டனை வளர்த்தது பந்தள நாட்டு அரசன் ராஜசேகரன் என்பவர். அவர் மணிகண்டன் புலியை வீழ்த்தி புலியின் மீது அமர்ந்து வந்த காட்சியைக் கண்டதும் மணிகண்டன் சாதாரணக் குழந்தை அல்லன்; தெய்வக் குழந்தை எனத் தெரிந்தவுடன் உன்னைப் பிரிந்து இருக்க மாட்டேன் என்று கூறி அழத் தொடங்கினார். அவரைச் சமாதானம் செய்து ‘சரம்குத்தி’ என்ற இடத்தில் தனக்கு ஆலயம் கட்டுங்கள் எனக் கூறினார் என்பதை,
“பாண்டியன் சாத்தா ஆலயம் கட்ட
வேண்டிப் பெம்மான் வெல்லம் பெடுத்தே
எய்ய அதுஆல் மரம்போய்க் குத்த
சரங்குத் தியின்ஆல் தன்னில் முதல்வரு
கன்னிகள் கையுள சரங்களை விடுத்து
பொன்னம் பலத்தான் நன்னு பேரருள்” [ஐயப்பன் ஆற்று.பா.வரி.524-529]
என்னும் வரிகளில் ஐயப்பன் வில் அம்பு எடுத்து எய்ததும் அந்த அம்பு ஓரிடத்தில் சென்று குத்தி நின்றது. அந்த இடத்திற்குப் பெயர் ‘சரங்குத்தி’ என்பதாகும். அங்குக் கோயில் கட்டத் தன் வளர்ப்புத் தந்தை ராஜசேகரனிடம் கூறினார் என்பது புலனாகிறது.
மேலும் இதனை,
“பாண்டிய அரசன் பந்தள பூபதி
யாண்டும் அய்யன் தனைத் தொழுதிடவே
கோயில் அமைத்தே ஆய முறைசெய
போயின் வழியும் புதுமையிவ் வழியே!” [ஐயப்பன் ஆற்று.பா.வரி.61-64] என்று இவ்வரிகள் விளக்குகின்றன.
மகிசி வதம் செய்தல்
“மணிகண்டன் இருமுடியைத் தலையில் சுமந்து, கையில் வில்லும் அம்பும் ஏந்திக் காட்டுக்குச் சென்றான். இதனை அறிந்த தேவர்கள் “இதுவே மஹிஷியைக் கொல்லச் சரியான தருணம்” என்றறிந்து மணிகண்டனிடம் அவனுடைய அவதார நோக்கத்தை நினைவு கூர்ந்தார்கள்.” [மிழலைத் தொண்டன், ஸ்ரீ ஐயப்பன் வரலாறு, வழிபாட்டு முறைகள், ஸ்தோத்திரங்கள், ப.8]என்பதை மிழலைத் தொண்டன் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படியே மணிகண்டனும் தேவலோகம் சென்ற மஹிஷியைப் போருக்கழைத்து அவளைக் காலால் மிதித்துக் கொன்று தேவர்களைக் காத்தான் என்றும், அவ்வாறு மஹிஷியை வதம் செய்தபோது சிவபெருமான் அந்நிகழ்ச்சியைக் காணவந்தபோது, தன்னுடைய வாகனமாகிய காளையை ஓரிடத்தில் கட்டி விடுகிறார். அவ்விடத்திற்கு ‘காளை கட்டி’ என்று பெயர் வந்தது என்பதனை,
“மகிசி வதத்தின் மகிமை காண
தகவுறு சிவன்தன் காளை கட்டிய
இடமே “காளை கட்டி” என்பதாம்.” [ஐயப்பன் ஆற்று.பா.வரி.203-205] என்று இவ்வரிகள் விளக்குகின்றன.
முடிவுகள்
ஆற்றுப்படை இலக்கியம் சங்ககாலம் முதல் தற்காலம் வரை வளர்ச்சியடைந்து வந்துள்ளது என்பதற்கு ஐயப்பன் ஆற்றுப்படை எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஆற்றுப்படை இலக்கியம் தனியோர் இலக்கியமாக வளர்ச்சியடைந்ததற்குச் சிற்றிலக்கியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஆற்றுப்படைகளில் ஐயப்பன் பற்றிய தொன்மச் செய்திகளான ஐயப்பனின் விரதமுறைகள், உடைகள், ஐயப்பன் வரலாறு, மகிசியை வதம் செய்தல், மணிகண்டனின் வீரம், சரங்குத்தி என்ற இடத்தில் கோயில் அமைந்துள்ளதற்கான காரணம், மற்றும் காளைகட்டி என்னும் பெயரின் காரணம் என்பதை இச்சிறுப்பகுதி எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
துணை நின்ற நூல்கள்:
- தமிழ் லெக்சிகன் அகராதி, தொகுதி-I
- கழகத் தமிழ் அகராதி.
- தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை.
- சேதுராமன்.வா.மு., ஐயப்பன் ஆற்றுப்படை.
- மிழலைத் தொண்டன், ஸ்ரீ ஐயப்பன் வரலாறு, வழிபாட்டு முறைகள், ஸ்தோத்திரங்கள்.
*****
கட்டுரையாளர் – முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி)
சேலம் – 7.
யசோதா அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய ஆய்வுக் கட்டுரை நன்று. ஆனால் கட்டுரைத் தலைப்பு மட்டும் கொஞ்சம் நெருடலாக உள்ளது. நீங்கள் பொதுவாக ஆற்றுப்படை என்று தலைப்பு கொடுத்ததினால் சங்க ஆற்றுப்படை என அனைத்தையும் குறிப்பதாக உள்ளது. நீங்கள் சேதுராமனின் “ஐயப்பன் ஆற்றுப்படை“ இலக்கியத்தில் ஐயப்பன் குறித்த தொன்மங்கள் என்று கொடுத்திருந்தால் நலமாக இருத்திருக்கும் என்பது என்னுடைய எண்ணம்.