இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார்     

சிறந்தமைந்த சீரார் செறின்.                                                

       -திருக்குறள் -900(பெரியாரைப் பிழையாமை)

 

புதுக் கவிதையில்…

 

அளவற்ற

ஆள் துணையுடையோராயினும்

அழிந்தொழிவர்,

சிறந்த தவநெறிமிக்க

பெரியோர்

சினம் கொண்டால்…!

 

குறும்பாவில்…

 

தவநெறிமிக்க பெரியோர் கோபமுற்றால்,         

தாங்கிக்கொள்ளாது அழிந்திடுவர்

அளவற்ற ஆளுதவி கொண்டோரும்…!

 

மரபுக் கவிதையில்…

 

குறைவே யில்லா அளவினிலே

     கூடும் உதவி ஆளிருந்தும்,

முறையே யில்லாச் சிறியோரெலாம்

     முற்றிலும் சிதைந்தே அழிந்திடுவர்,

மறைகள் பலவும் கற்றாங்கே

     முறைப்படி தவநெறி கொண்டோராம்

குறையிலா வாழ்வுடைப் பெரியோரவர்

     கொள்ளும் அரிய கோபத்தாலே…!

 

லிமரைக்கூ..

 

தவநெறி பெரியோர்தம் கோபம்,    

தக்க துணையாய்ப் பலரிருப்போரையும்             

தாக்கி அழித்தொழிக்கும் சாபம்…!

 

கிராமிய பாணியில்…

 

நடந்துக்க நடந்துக்க

நல்லமொறயில நடந்துக்க,

நாலுந்தெரிஞ்ச பெரியவங்கக்கிட்ட

நல்லமொறயில நடந்துக்க..

 

ஒழுக்கம் நல்லதாக்கொண்ட

ஒயர்வான பெரியவங்க

கோவப்பட்டா,

அது

ஒதவிக்கு ஆள் நெறய

உள்ளவனயும்

ஒண்ணுமில்லாம அழிச்சிப்புடும்,

அவன்

உசிரயே எடுத்துப்புடும்..

 

அதால

நடந்துக்க நடந்துக்க

நல்லமொறயில நடந்துக்க,

நாலுந்தெரிஞ்ச பெரியவங்கக்கிட்ட

நல்லமொறயில நடந்துக்க…!

 

-செண்பக ஜெகதீசன்…

 

 

 

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க