ம. ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா
முன்னாள் தமிழ் கல்வி இயக்குநர்
 M.Phil , Dip.in Ed , Dip.in.Soc , SLEAS 

 கங்காருநாடு என அழைக்கப்படுகின்ற அவுஸ்திரேலியா 200 வருட வரலாற்றினைக் கொண்டது, இங்கு பல நாட்டினர், பல மொழிகளைப் பேசுபவர்கள், பல இன கலாசார பண்பாடுகளைக் கொண்டவர்கள் என 165 இனமக்களை அரவணைத்து அவர்களுக்கு அமைதியான ஆறுதலான வாழ்வினையும் வழங்கிக் கங்காருநாடு கண்ணியம் மிக்க நாடாக உலகில் விளங்குகிறதுஎன்பது பெருமைக்குரிய விஷயமாகும்.ஜனநாயகத்தை நூறுசதவிகிதம் நிலைநாட்டி வெற்றியுடன் திகழும்  கண்ணியமும் இங்கு இருக்கிறது என்பது குறிப்பிடப்படவேண்டிய தொன்றேயாகும்.

   இந்த நாட்டின் ஆதிக்குடிகள் ” அபோர்ஜினிஸ் ” என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் கங்காரு மண்ணுக்கு உரியவர்கள் ஆவர். ஆனால் பிரித்தானிய ஆக்கிரமிப்பால் நிலை மாறி இப்போது கங்காரு மண்ணின் சொந்தக்காரர்  வெள்ளையர் ஆகிவிட்டார்கள். என்றாலும் ஆதிக்குடிகள் வரலாறு கங்காரு மண்ணுடன் ஒட்டியே இருக்கிறது.அவர்களின் நிறம், அவர்களின் மொழியில் காணப்படும் சில சொற்கள்,அவர்களின் விழாக்கால கொண்டாட்ட அலங்காரம்இவற்றை யெல்லாம் உற்று நோக்கும் பொழுது தமிழர்களின் சாயல் அவர்கள்டத்துப் படிந்திருப்பதாகக் கருத முடிகிறது.இதனாலத்தான் தமிழர்களையும் கங்காரு நாடு கைகொடுத்து வரவேற்றதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

    பல்லின கலாசாரத்தின் தொட்டிலாகக் கங்காரு நாடு திகழ்கிறது.மதம் கடந்தமக்கள் பலர் இங்கு இருப்பதனால் மதமென்னும் குணத்தை இங்கு காண்பது அரிதென்றே சொல்லலாம்.அரசாங்கம் மதம்பற்றி எதுவுமே பேசுவதில்லை.அதே வேளை வழிபடும் சுதந்திரத்திலும் தலையிடுவதும் இல்லை.விரும்பியவர்கள் விரும்பியபடி தங்கள் சமயவழிபாடுகளை நிகழ்த்தும் உரிமையை இந்த நாடு வழங்கியிருக்கிறது.  இதனால்  வழிபாட்டில் மக்கள் தாம்விரும்பிய வாறு ஈடுபடும்முழுச் சுதந்திரம் இங்கு காணப்படுகிறது.இதனால்த்தான்  அவுஸ்திரேலிய மாநிலங்களில் பல இந்துக் கோவில்கள் எழுச்சிபெற்று இருக்கின்றன.    படிக்கும் பாடசாலைகளிலும் மதம்பற்றிப் பேசப்படுவதில்லை.ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமியப் பாடசாலைகளில் அவரவர் மதக்கல்வி ஊட்டப்படுவதற்கும் எந்தவிதத் தடையும் போடப்படுவதும் இல்லை.அவுஸ்திரேலியர்களாக இருக்கின்றவர்கள் தங்களின் பெயர்களை கிறிஸ்தவப் பெயராக வைத்திருந்தும் அவர்கள் தாங்கள்எந்தமதம் என்று சொல்கிக்கொள்வதும் இல்லை.அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. இதனால் மதம் என்னும் பெயரால் இங்கு எந்தவித சிக்கல்களோ மோதல்களோ ஏற்படுவதே இல்லை.

     பல்லின கலாசார நாடாக விளங்குகின்ற காரணத்தல் கறுப்பு வெள்ளை என்றுபார்க்கும் குறுகிய நோக்கும் இங்கு இல்லை என்றே கூறலாம். இதனால் ஆசியநாட்டவரோ ஆபிரிக்க நாட்டவரோ அமைதியாக ஆறுதலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனலாம்.மனிமனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு இந்த நாட்டின் முக்கிய பண்பாடாக விளங்குகிறது. அரசியல் பிரமுகர்கள் கூட எதுவித ஆடம்பரமும் இன்றி சாதாரண மக்கள் போன்றே சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவார்கள்.மந்திரியாக இருந்தாலும் கடைகளில் பொருட்களை வாங்கினால் அதற்குரிய பணத்தைக் கொடுத்தே வாங்குவார்.மந்திரிக்கென்று தனியான சலுகைகள் கிடையாது.அவரும் சாதாரண பிரசையாகவே நடந்துகொள்ளும் முறையானது ஜனநாயகத்தின் உயிர்துடிப்பினையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.

      முன்னேற விரும்பும் யாவருக்கும் இந்த நாடு நூறு சதவிகித ஒத்துழைப்பைவழங்கிக் கொண்டிருக்கிறது.விரும்பியதைப் படிக்கலாம்.விரும்பிய தொழிலைச் செய்யலாம்.படிப்பதற்கு வயது இங்கு ஒரு தடையில்லை.எந்த வயதினரும் விரும்பியதைப் படிக்கும் வசதி இங்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

    வேலைசெய்யமுடியாதவர்எனக்கணிக்கப்பட்டவர்கள்,வயதுவந்தவர்கள், வேலையினை இழந்தவர்கள்.  யாவருக்கும் அவர்கள் அன்றாடம் வாழும் வகைக்கு

ஏற்ற பண உதவிகளை இந்தநாடு சிறப்பாக வழங்கியும் வருகிறது. மூத்தோருக்குப்பல சலுகைகளையும் கொடுத்து வருகிறது.பெண்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு இந்தநாட்டில் கிடைக்கிறது.  இந்த நாட்டுக்கும்வந்த தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல  வேண்டும்.இந்த நாடு பல்லின கலாசாரத்தைப் பேணுவதால் தமிழர்தம் பண்பாடு கலசாரங்களுக்கு மதிப்பளித்து அவர்களின் சமூக அந்தஸ்த்தைக் காப்பாற்றிக் கொள்ள சர்வ சுதந்திரமும் வழங்கி நிற்கிறது என்பது மிகவும் கவனிக்கப் படவேண்டிய விஷயமாகும்.

   தமிழை அரசாங்க அறிவித்தல்களில் கூட இந்தநாடு இடம் பெறச் செய்திருக்கிறது.தமிழை மட்டுமே தெரிந்தவர்கள் கூட தமது கருமங்களை ஆற்றுவதற்கு மொழிமாற்றுச் சேவையினையும் இலவசமாகக் கொடுத்து உதவி நிற்கிறது. தமிழ் அமைப்புகளுக்கு பண உதவிகளை வழங்குகிறது.தமிழ்ச் சங்கங்களின் விழாக்ககளுக்கு குறிப்பிட்டளவு பண உதவிகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதே.

     கங்காரு நாட்டில் தேர்தலில் இந்தநாட்டின் பிரசையாகிவிட்ட எவருமே வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.இதனால் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழர்கள் கலந்து வெற்றியீட்டி அரசியலில் கலந்து சேவையாற்றும் வாய்ப்பும் இங்கு வழங்கப்பட்டிருக்கிறது.

      இந்தநாட்டில் இருந்து படித்து தொழில் பார்க்க ஆங்கிலம் அவசியம் என்பதனால்ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது.ஆனால் அதே வேளை சொந்த மொழியை பண்பாட்டை விட்டுவிடத்தான் வேண்டும் என்னும் கட்டாயம் இந்த நாட்டிலில்லை.இது இங்கு வந்த யாவருக்கும் பெரும் வரப்பிரசாதம் என்றுதானே எண்ணவேண்டும்.

   இதனால் தமிழ் மொழி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.அவுஸ்திரேலிய அரசின் மொழிக்கொள்கையானது அவுஸ்திரேலியாவில் ஆங்கிலமும் பிற மொழிகளும் வளர பெருந்துணையாய் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 1980ஆம் ஆண்டுகளில்அவுஸ்திரேலியாவுக்கென்று ஒரு மொழிக்கொள்கை தேவை என்ற நோக்குடன் அரசின் மொழிக்கொள்கையை நடுவண் அரசு நான்கு முக்கிய கோட்பாடுகளுடன்உருவாக்கி , தேசிய அளவில் அதை ஒழுங்கு படுத்தியது.அதில் ஆங்கில மற்ற மொழிகளைக் காத்தல்,  மற்ற மொழிகளிலும் அரசியல் சேவைகள் கிடைக்கப் பண்ணுதல், இரண்டாவது மொழி கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல். இதன்படி  1987 ஆம் அவுஸ்திரேலியாவின் தேசிய மொழிக் கொள்கை நடு வண் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இக்கொள்ளை அங்கீகரிக்கப் பட்டதன் மூலம் ஆங்கிலம் பேசும் நாடுகளில் இப்படி ஒரு பன் மொழிக் கொள்கையை வகுத்த முதலாவது நாடாக அவுஸ்திரேலியா விளங்குகிறது என்பது இந்தநாட்டின் கண்ணியமானஒரு செயற்பாடாக அமைகிறதல்லவா ?

    சில நாடுகளில் தங்கள் தாய் மொழியில் பேசவே பயப்படுகின்றனர். உதாரணமாக இலங்கையின் தலைநகரில் வாழும் தமிழர்மக்கள் வெளியிடங்களில் கூடியளவு தமிழில் பேசுவதை தவிக்கின்றார்கள்.காரணம் அங்குள்ள பெரும்பான்மை இனத்தவர் தங்களை இனங்கண்டு விடுவார்கள் என்னும் பயத்தினாலே. அப்படி  இனங்காணப்பட்டால் தமக்குப் பாதுகாப்பு இல்லாமை வந்து விடலாம் என்று இன்றளவும் அஞ்சும் நிலை காணப்படுகிறது.

  ஆனால் கங்காரு மண்ணில் மட்டும் இந்தப் பயத்துக்கு இடமே இல்லை.வீட்டிலோ அல்லது தெரிவிலோ வேலைசெய்யும் இடத்திலோ போக்குவரவு செய்யும் பஸ்சிலோ புகைவண்டியிலோ அல்லது சந்தைகளிலோ விமான நிலையத்திலோ எங்கு வேண்டுமானாலும் இன்பத் தமிழில் இனிமையாகப் பேசுக் கூடிய சுகம் இந்த நாட்டில் இருக்கிறது.அந்த அளவு வேற்று மொழிக்கும் அவர்களது பண்பாடுகளுக்கும் கெளரவம் வழங்கும் கண்ணியம் மிகவும் தாராளமாக இங்கு இருக்கிறது என்பதை யாவரும் ஏற்றுக் கொள்ளுவார்கள்.

   இதனால்த்தான் தமிழ்விழாக்களையும், தமிழ் நூல்கள் வெளயீடுகளையும், இசை, நடன அரங்கேற்றங்களையும் , தமிழ்ப் பத்திரிகைகளையும் ,தமிழ்ச் சங்கங்களையும் அமைத்து தமிழர்கள் தங்கள் சுயத்தினத் தொலைக்காமல் கங்காரு நாட்டில் வாழ முடிகிறது என்றால் அதனை கங்காரு நாட்டின் கண்ணியம் என்று போற்றுவது பொருத்தமாக இருக்கிறதல்லவா !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *