-முனைவர்  க. மங்கையர்க்கரசி     

‘முலை’ என்றாலே அது காமத்திற்கும் தாய்மைக்கும் உரியது என்றாலும், முலை என்ற உடனே காமம் தொடர்பான எண்ணமே எல்லோர்க்கும் தோன்றுகிறது. தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்யின் புறப்புலப்பாடுகள் எட்டும் முலையில் வருகின்றன என்பதை இலக்கியப் பாடல்களின் வழி காண்போம்.

பருவத்தில் மாற்றம்

ஒரு சிறுமியின் உடம்பு 12 வயதிலிருந்து 14 வயதுக்குள் துரிதமான வளர்ச்சி அடைகிறது. அப்போதுதான் அவளுடைய மார்பகம் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கிறது. 14-18க்கு இடையிலான கால கட்டத்தில் அவை முழுமையான வளர்ச்சி அடையும். பருவம் அடையும் போது சூலகத்தில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜெனால் பெண்களுக்குரிய தனங்கள் பெருகும்.  சில நேரங்களில் சத்தான உணவு இல்லாதபோதிலும் ‘இயக்கு நீர்’ (Hormone) கோளாறினாலும், பிறப்பிலேயே விளைந்த குறைபாட்டாலும் மார்பக வளர்ச்சி தடைப்படலாம்.

ஈஸ்ட்ரோஜென்

ஈஸ்ட்ரோஜென் என்பது ஸ்டெராய்டு ஹார்மோன்களில் ஒன்று. இது சூல்பைகளில் சுரக்கிறது.  பெண்களின் தனங்கள் பெருக்கத்திற்கும் எலும்பு வளர்ச்சிக்கும் முக்கியமானது. உடலில் கொழுப்புப் படிவதற்கும் இதுவே காரணமாகும்.

மார்பக அமைப்பு

பருவமடைந்த பெண்ணின் மார்புகள் உருண்டு திரட்சியுற்றுக் காணப்படும். உயர்வான மத்தியில் இருப்பது முலைக்காம்பு (Nipple) காம்பைச் சுற்றிய கருநிறப்பகுதி ஊதா வட்டம் (areola) எனப்படும். முதல் மாதவிலக்கு ஏற்படும் வரையில் மார்பின் வளர்ச்சி நிதானமாக, திடமாக இருக்கும். பிறகு இயக்கு நீரின் மாற்றத்தின் காரணமாக அவை வேகமாக வளர்ச்சி அடையும். முதலில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பியும். அடுத்து ப்ரொஜஸ்ட்ரோனும் அவற்றின்மீது ஆதிக்கம் பெறும். பெண் சந்ததி விருத்தி (Procreate) செய்கிறபோது மார்பகம் முழு வளர்ச்சியுற்ற நிலையில் இருக்கும். பிரசவித்தப் பிறகே பால் சுரக்கும்.

குழந்தை பிறந்த பிறகு பிட்யூட்டரி சுரப்பி ‘ப்ரோலாக்டின்’ (Prolactin) என்ற இயக்கு நீரைச் சுருக்கும். இதுவே பால் உற்பத்தியைத் தொடங்கி வைக்கும்.

பாலை உறிஞ்சுதல்

குழந்தையை ஒரு தாய் மார்பகத்திடம் கொண்டுசென்ற உடன், அது முலைக் காம்பில் வாய் வைக்க அழுத்தம் செலுத்தப்படுகிறது. இது தொடர்பான சமிக்ஞை மூளைக்கு அனுப்பப்படும். அந்த சமிக்ஞை தாயின் மூளையில் உள்ள ‘ஹைப்போதாலமஸ்’ என்ற பகுதிக்குச் சென்றடையும். இதுவே உணர்வுகளின் இருப்பிடம் ஆகும். பாலை உறிஞ்ச முற்படுகின்றபோது, கிடைக்கின்ற அழுத்தம் மட்டுமின்றி, தாயின் அன்பும் (தாய்மை உணர்வும்) ஹைபோதாலமஸ் மீது செயல்படுகிறது. அதனால் பிட்யூட்டரியின் பின்புறப்பகுதி ‘ஆக்ஸிடாசின்’ (Oxytocin) என்ற இயக்குநீரைச் சுருக்கும். இந்த இயக்குநீர் ஊதா வட்டத்தில் இயங்கிப் பாலை வெளிப்படுத்தும். தாயின் விரல்களும் இவ்விதம் அழுத்தம் கொடுக்கும்.

சிறந்த அன்னை யார்

நால்வர் நான்மணிமாலை என்ற நூல் சிறந்த அன்னை யார் என்பதைக் குறிப்பிடும் பாடல்

      “இலை படர்ந்த பொய்கையிடத் தழுதல் கண்டு
      முலைசுரந்த அன்னையோ முன்னின் நிலைவிளம்பக்
      கொங்கை சுரந்த அருட்கோ மகளோ சம்பந்தா
      இங்குயர்ந்தாள் ஆர்சொல் எனக்கு” என்ற பாடலின் மூலம் குழந்தை பசியால் அழும்முன்பே பால் நினைந்தூட்டும் தாய் தலையன்புடையவள். குழந்தை அழுவதைக் காதால் கேட்டவுடன் முலைசுரந்து ஊட்டுபவள் இடையன்புடையவள். குழந்தைப் பசியால் அழுவதைக் கண்ணால் கண்ட பிறகு பாலூட்டுபவள் கடையன்புடையவள் என்பது பெறப்படுகிறது.

முலை என்ற உறுப்பே தாய் தன் குழந்தைக்குப் பால் ஊட்டுவதற்கென்றே இயற்கை வழங்கியுள்ளது என்பது பெறப்படுகிறது.

திருக்குறளில் முலை

பெண்ணின் மார்பகங்களை காம இன்பம் நுகர்ச்சிக்குரியவை என்றே கூறலாம். பெண்மையின் சிறப்புப் பற்றிக் கூறும் போது மார்பகங்களே முக்கியமாகக் கூறப்பட்டுள்ளன.

      “கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
      படாஅ முலைமேல் துகில்”                         (குறள் 1087)

அரச யானை என்பதால் அந்த யானைக்குச் சிறப்பு அளிக்கவே அதற்கு முகபடாம் அளிக்கப்படுகிறது என்றும், யானையின் முகத்தை மறைக்க அல்ல. இது போல காமஇன்ப நுகர்ச்சிக்குரிய அரச உறுப்பு மார்பகம் என்பதால் அதுவே அனைவரையும் கவருகிறது என்பதையும் அறியவும், அழகுபடவும் மார்பகத்தின் மீது பட்டும் படாமலும் துகில் உள்ளதே தவிர அதை மறைக்க அல்ல என்றே குறள் கூறுகிறது.

      “கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
      இல்லாதாள் பெண்காமுற் றற்று”                       (குறள் 402)

என்று ‘கல்லாமை’ என்ற அதிகாரத்தில் குறள் கூறுகிறது. கல்லாத ஒருவன் கற்றோர் நிறைந்த அவையில் பேச ஆசைப்படுவதென்பது முலைகள் இரண்டும் இல்லாத பெண்ணொருத்தி பெண்மையை விரும்புவது போலாகும் என்று மார்பகங்களின் சிறப்பை உணர்த்துகிறது.

சிலப்பதிகாரத்தில் முலை 

சிலப்பதிகாரத்தில் முலை பற்றி “சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும்” என்ற வரிகளில் அழகு முலைகள் தான் காதல் நோயைத் தீர்க்கும் போலும் என்றும், “மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ” என்ற வரிகளில் வலிமை பொருந்திய கச்சுக்கு அடங்காத அழகிய மார்போ என்றும் கூறுகிறார்.

விவேகசிந்தாமணியில்முலை

“சந்திர னில்லா வானந்தாமரை யில்லாப் பொய்கை
      மந்திரி யில்லா வேந்தன் மதகரி யில்லாச் சேனை
      சுந்தரப் புலவா ரில்லாத் தொல்சபை கதரில்லா வாழ்வு
      தந்திக ளில்லா வீணை ஸ்தனமிலா மங்கை போலாம்” (விவேகசிந்தாமணி – 34)

சந்திரன் இல்லாத ஆகாயம், தாமரை இல்லாத தடாகம், மந்திரி இல்லாத அரசன், மதயானை இல்லாத சேனை, அழகிய வித்வான்கள் இல்லாத சபை, கொஞ்சி மகிழக் குழந்தைகள் இல்லாத வாழ்க்கை, நரம்புகள் இல்லாத வீணை, இவை எல்லாம் அழகிய, பருத்து, உருண்டு திரண்ட இரண்டு மார்பகங்கள் இல்லாத பெண்ணைப் போல் பயனற்றதாகும்.

முலை அணி

பெண்கள் தமது அழகிய மார்பகங்களில் ‘பூண்’ என்னும் அணிகலனை அணிந்திருந்தனர் என்பதை,

      “ஒண்கேழ் வனமுலை பொழிந்த
      நுண்பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே”  (அகநானூறு 6 : 17-18) குறிப்பிடுகிறது.

தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்யின் புறப்புலப்பாடுகள்:

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
      அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
      அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப”       (மெய்ப்பாட்டியல் – நூ 3)

சிரிப்பு, அவலம், இழிவு, வியப்பு, பயம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி என மெய்யின் புறப்புலப்பாடுகள்  எட்டு வகைப்படும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

நகை

  “எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்று
      உள்ளப் பட்டநகை நான்கு என்ப”         (மெய்ப்பாட்டியல் – நூ 4)

இகழ்தல், இளமை, அறியாமை, அறிந்தும் அறியாதது போல இருத்தல் இந்த நான்காலும் சிரிப்பு வரும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

உடம்பின் மேல்பாகத்தில் சந்தனம், குங்குமம், முதலியவற்றைக் குழம்பாகவோ, சாயமாகவோ செய்து அதனைப் பூசிக் கொண்டு, பின்னர் அதன் மேல் இலை, பூ முதலிய சித்திரங்களை வரைவர். இத்தகைய வரைவுகளின் வெளிப்பாடே “தொய்யில் வரைதலாகும்”. வேங்கைத் தாது பரப்பித் தோற்றம் செய்து எழுந்த தலைவியின் அழகிய முலை நிறம்பெறத் தலைவன் தொய்யில் வரைவான் என்பதை,

      “உருத்தெழு வனமுலை யொளிபெற
      வெழுதிய தொய்யில்”                      (குறுந்தொகை 276 : 3-4) என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது.

இப்பாடல் மூலம் ‘நகை’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

அழுகை

   “இளிவே, இழவே, அசைவே, வறுமை என
      விளிவில் கொள்கை அழுகை நான்கே”  (மெய்ப்பாட்டியல் நூ 5)

இழிவு, இழப்பு, தளர்ச்சி, வறுமை, அழிவில்லாத கொள்கை நான்கால் அழுகை ஏற்படும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

வறுமையின் காரணமாக நல்ல உணவை உண்ண முடியாததால் முலையில் பால் சுரக்கவில்லை.

      “ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பில்
      ஆம்பி பூப்பத்தேம்பு பசி உழவாய்
      பாஅல் இன்மையின் தோலொடு இறங்கி
      இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
      சுவைத்தொறு அழுஉம்தன் மகத்துமுக நோக்கி
      நீரோடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்”   (புறநானூறு 164)

வறுமையின் காரணமாகத் தாய்ப்பால் கிடைக்காமல் வருந்தும் மகவைக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ‘அழுகை’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

இளிவரல்

      “மூப்பே, பிணியே, வருத்தம், மென்மையோடு
      யாப்புற வந்த இளிவரல் நான்கே”      (மெய்ப்பாட்டியல் நூ 6)

முதுமை, நோய், துன்பம், எளிமை இவற்றால் இளிவரலாகிய இழிவு ஏற்படும் என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

திருமாவுண்ணி

   “ஏதிலாளன் கவலை கவற்ற
      ஒரு முலை அறுத்த திருமா உண்ணிக்
      கேட்டோர் அன்னையர் ஆயினும்
      வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே”      (நற்றிணை 216 : 8-11)

அயலனாகிய ஒருவன் உண்டாக்கிய கவலையானது உள்ளத்தை நோயாக வருத்துதலினாலே தன் ஒரு முலையை அறுத்துக்கொண்ட வலிமையான திருமாவுண்ணி என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ‘இளிவரல்’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

மருட்கை

      “புதுமை, பெருமை, சிறுமை ஆக்கமொடு
      மதிமை சாலா மருட்கை நான்கே”        (மெய்ப்பாட்டியல் நூ 7)

இது வரை காணாததைக் கண்ட புதுமை, அளவின் மிக்க பெருமை, அளவின் மிகக் குறைந்த சிறுமை, ஒன்று பிறிதொன்றாகும் ஆக்கம் இவை நான்காலும் அறிவான் அமையாத வியப்பு ஏற்படும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

பால் குடிக்கும் குழந்தை குறிப்பிட்ட நேரத்தில் பால் குடிக்காவிட்டாலோ, பால்சுரந்து குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைக்குப் பாலூட்டாவிட்டாலோ பால் கட்டிக் கொள்ளும் என்பதும், அப்போது உண்டாகும் வலியைப் போக்க, மார்பை அழுத்திப் பாலை வெளியே எடுக்க வேண்டும் என்பதை கலித்தொகை

      “சுரந்துயான் அரக்கவும் கைநில்லா வீங்கி
      சுரந்த என் மென்முலைப் பால் பழுதாக” (கலித்தொகை – முல்லைக் கலி 19)

     “உறு வளிதாக்கும் உயர்சினை மாவின்
      நறுவடி ஆரிற்றவை போல அழிய”      (கலித்தொகை – முல்லைக் கலி 19)

மா மரத்தின் உயர்ந்த கொம்புகளிலுள்ள வடுக்கள் காற்றடித்தால் காம்பு முறிந்து பால்குதிப்பது போல, நான் உள்ளங்கையால் அமுக்கித் தேய்க்கவும், அடங்காது விம்மிச் சுரந்த என்னுடைய மெல்லிய முலையின் பால், பிள்ளை உண்ணாமல் பாழாகும் படி நேரம் தாழ்த்தி அழைத்து வருகிறாயே என்று தோழியிடம் கூறும் பாடல்

      “என் முலை பாலொடு வீங்கத்தவ
      நெடிதாயினை”   (கலித்தொகை – முல்லைக் கலி 19)

தாய் தன் குழந்தையைச் சிறிதுநேரம் விளையாட்டுக் காட்ட வெளியே அழைத்துச் செல்லச் செல்கிறாள். சென்ற குழந்தை திரும்பிவர நேரமாகிறது. பாலூட்டும் நேரம் தவறுகிறது. எனவே பால் கட்டுகிறது, அதைத் தாய் அமுக்கி எடுத்து வெளியேற்றுகிறாள். இப்பாடல் மூலம் ‘மருட்கை’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

அச்சம்

     “அணங்கே விலங்கே கள்வர் தம்இறை எனப்
      பிணங்கல் சாலா அச்சம் நான்கே”          (மெய்ப்பாட்டியல் நூ 8)

கட்புலனாகா தம் ஆற்றலால் வருத்தும் சூர் முதலான தெய்வங்கள் கொடிய விலங்குகள், கள்வர், அரசன் மாறுபட்டு எதிர்த்தல் அமையாத அச்சம் என்ற நான்காலும் ஏற்படும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

தாயானவள் பின்னும்படி வளர்ந்து நெளிந்த கூந்தலையும், பொன்போல மார்பிலே தோன்றிய தேமலையும், கச்சு இற்று விடும்படியாகக் கண்ணுடன் உருக்கொண்டு, விம்மி எழுந்த முலையினையும், நோக்கி நீ பெரிதும் அழகுடன் தோன்றினாய் எனப் பலபடப் பாராட்டி, அவளுடைய தோளை முழுவதும் தழுவி, நெடிது நினைத்துப் பார்த்துத் தலைவியைக் கடந்து செல்வதற்கு அரிய காவலில் வைத்தனை என்று தோழி தலைவனிடம் தெரிவிக்கிறாள். அன்னை தலைவியின் களவொழுக்கத்தை அறிந்து கொண்டாள் என்ற அச்சம் ஏற்பட்டது. எனவே தலைவியை விரைவில் வரைந்து கொள் என்றாள்.

      “பின்னுவாட நெறித்த கூந்தலும் பொன்அணை
      ஆகத் திரும்பிய சுணங்கும் வம்புவிடக்
      கண்ணுருத் தெழுதரு முலையும் நோக்கி
      எல்லிணை பெரிதெனப் பன்மாண் கூறிப்
      பெருந்தோள் அடைய முயற்சி நீடுநினைந்து
      அருங்கடிப் படுத்தனள்”           (அகநானூறு 150 : 1-6)

இப்பாடல் மூலம் ‘அச்சம்’ என்ற மெய்யின் புறப்பலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

பெருமிதம்

  “கல்வி, தறுக்கண், புகழ்மை கொடை எனச்
      சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே”          (மெய்ப்பாட்டியல் நூ 9)

கல்வியால், அஞ்சாமையால், நன்னடையால் வரும் புகழால், வரையாது வழங்கும் வள்ளன்மையால் பெருமிதம் தோன்றும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

மாட்டின் கொம்புகளால் குத்தப்பட்டு மார்புஎங்கும் புண்பட்டு வருந்தும் காதலனைத் தன் முலை வெம்மையால் ஏந்தி எடுத்து, புண்ணாற்றுவதற்காக ஒரு தலைவி சொன்ன செய்தி

      “மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே
      அரும்பிய சுணங்கிண் அம்பகட்டு இளமுலை
      பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்”               (குறுந்தொகை 71)

கொழுநன் பிணி நீங்க மருந்தாகவும், வறுமை நீங்கச் செல்வமாகவும், சுணங்குமுலை, தோள், நுசுப்பு ஆகியவை இன்பப் பொருளாகச் சிறப்பிக்கப்பட்டது. கொழுநன் பிணிக்கு மருந்தாகத் தன் உடம்பை அறுத்துத் தர முயல்வாள் குலமகள் என்று கூறப்பட்டுள்ளது. மருந்து, வைப்பு, இன்பம் ஆகிய மூன்றாகவும் முலை, தோள், நுசுப்பு ஆகிய மூன்றும் விளங்குவனவாகும். இப்பாடல் மூலம் ‘பெருமிதம்’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

வெகுளி

      “உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற
      வெறுப்ப வந்த வெகுளி நான்கே”           (மெய்ப்பாட்டியல் நூ 10)

உறுப்புகளை அறுத்தலாலும், தன்கீழ் வாழும் குடிகளைத் துன்புறுத்தலாலும், வைதலும் அடித்தலாலும், அறிவாற்றல், புகழ் முதலானவற்றைக் கொன்றுரைப்பதாலும் வெறுக்கத்தக்க சினம் தோன்றும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன், கணவனுக்கு நேர்ந்த கொடுந்துயரைப் பொறுக்க மாட்டாதவள் மணமிகு கூந்தல் முதுகுப் புறத்தை மறைத்துக் கிடப்பக் கண்ணீரால் நனைந்த அழகிய கொங்கையை உறுதியுடன் திருகி எறிந்தாள். இதன் மூலம் அழலை மூட்டிப் பாண்டியனின் மூதூரான மதுரையை எரியுண்ணச் செய்தாள் என்பதை,

      “மணம்மலி கூந்தல் சிறுபுறம் சிதைப்ப
      கண்ணீர் ஆடிய கதிர்இள வனமுலை
      திண்ணிதின் திருகி தீஅழல் பொத்தி
      காவலன் பேர் ஊர்கனை எறி ஊட்டிய”      (சிலம்பு – ஊரலருத்தகாதை 52-55)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது. இதன் மூலம் ‘வெகுளி’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

உவகை

   “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று
      அல்லல் நீத்த உவகை நான்கே”            (மெய்ப்பாட்டியல் நூ 11)

செல்வத்தால் ஏற்படும் நுகர்ச்சியாலும், புலமையால் ஏற்படும் அறிவு முதிர்ச்சியாலும், உள்ள இணைப்பாலும், உள்ளம் ஒத்தாரோடு கூடி ஆடும் விளையாட்டாலும் துன்பம் நீங்கிய மகிழ்ச்சி தோன்றும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

பால் சுரந்த பாசம்

முதுமையான மறக்குடித் தாயொருத்தி தனது, மகன் உயிரைக் கொடுத்துத் தும்பைப் போர் புரிந்து, போர்க்களத்திலேயே விழும்புண்பட்டு வீழ்ந்து கிடப்பதைக் காணச் செல்கிறாள். வாளால் வெட்டுண்டு சிதைந்துக் கிடக்கும் மகனின் உடலைக் கண்டு உள்ளம் கரைகிறாள். அன்பின் முதிர்ச்சியால் அவளது வற்றிய வாடிய மார்பின்றும் பால் சுரந்தது என்பதை

      “இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
      சிறப்புடை யாளன் மாண்பு கண்டருளி
      வாடுமுலை யூரிச் சுரந்தன
      ஓடாப்பூட்கை விடலைத் தாய்க்கே”   (புறநானூறு 295) என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

தளர்ந்த மார்பினின்றும் உவகையால் பால் சுரந்தது என்பதன் மூலம் ‘உவகை’ என்ற மெய்யின் புறப்புலப்பாடு புலப்படுத்தப்படுகிறது.

முடிவுரை

‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்று மாணிக்கவாசகர் இறைவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். பால் நினைந்தூட்டல் தாய்மையின் பண்பாகும். முலையைத் தாய்மைக்கு உரியதாகவே இயற்கை படைத்திருக்கின்ற போதிலும் அது காம உணர்வு உறுப்பாகவே பார்க்கப்படுகிறது என்பதும் பெறப்படுகிறது. தொல்காப்பியம் வழி இலக்கியங்களில் முலை பற்றியும், மெய்யின் புறப்புலப்பாடுகள் பற்றிய செய்திகளையும் அறிய முடிகிறது.

*****

கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
A M ஜெயின் கல்லூரி
மீனம்பாக்கம்
சென்னை – 600 114

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இலக்கியங்களில் முலை

  1. காமம் முஅற்கண்ணாக ஒரு மன எழுச்சி. அதை உந்த அதுவே போதும். முலையை பற்றி காமம் சார்ந்த மனோ விகாரத்தை விலக்கி ஒரு அழகிய, விஞ்ஞான பூர்வமான கட்டுரையை படைத்தற்கு, முனைவர்  க. மங்கையர்க்கரசி  அவர்களை பாராட்டுகிறேன். இத்தகைய தமிழ் வாழ்க.
    இன்னம்பூரான்
    24 08 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.