சிவ வழிபாட்டில் தாந்த்ரீகமரபும் வைதீகமரபும்

ர.சுரேஷ்

உதவிப்பேராசிரியர்

கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்

கோயம்பத்தூர்

 

                இந்திய சமய வரலாற்றை ஆராயும் போது அது இருவேறு பட்ட மரபுகளிலிருந்து இருவேறு சமூகப் பண்பாட்டுத் தளங்களிலிருந்து துவங்குவதாகக் கொள்ளமுடியும். ஒன்று ஆரியரல்லாத பூர்வகுடி மக்களின் வழிபாட்டு மரபு சார்ந்தது. மற்றொன்று ஆரிய வைதீக மரபிலிருந்து வந்தது. முன்னைய மரபு மண் நோக்கிய சிந்தனையோட்டத்தோடு தொடா்புடையது. பின்னையது விண்னோக்கிய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு ஆரியா்களது அறிதல் முறை வான்நோக்கியதாக அமைந்ததற்கும் ஆரியரல்லாத மக்களின் அறிதல்கள் யாவும் மண் சார்ந்து இருந்தமைக்கும் அவரவா்களின் வாழ்முறைகளே காரணங்களாகும்.

                ஆரிய இனம் நாடோடி இனம். எனவே அவா்களது வாழ்வியக்கம் வானியலை அடிப்படையாகக் கொண்டதாகும். மண்சார்ந்த வேளாண்  வளமைச் சடங்குமுறைகள் ஆரியரல்லாத இனமரபுக்குரியது. இவ்வகையில் தாந்திரிக பின்புலத்தோடு கூடியது. மண்ணோடு பொருந்திய தெய்வ வணக்கத்தை உடையது. தாய்தெய்வ வழிபாடு இதன் முக்கிய சமயப்பண்பாகும். ஆரியா்களுடையது வானத்து தேவா்களை வேண்டுவது, தந்தைவழிச் சமூக அமைப்பை உடையது. வேதம், வேள்வி இவற்றின் முக்கிய சமயப் பண்பாகும். இந்திய மதங்களின் வளா்ச்சி குறித்த ஆய்வுக்கு இவ்விரு பண்புக்கூறுகளும் அடிப்படையானதாகும்.

                ஆரம்பகால சமூக அமைப்பில் வேளாண்மையே முக்கிய இடம் பெற்றிருந்தது. வேளாண்மையைக் கண்டுபிடித்தவா்கள் பெண்கள். ஆதலால் பெண் தலைமை என்பது தவிர்க்க முடியாததாக இருந்தது. இத்தகைய சமூக அமைப்பு மேய்ச்சல் பொருளாதாரத்தையுடைய ஆரியா் வருகையினால் மாற்றமடைந்தது. மேய்ச்சல் பொருளாதாரத்தில் இயல்பாகவே ஆண்கள் தலைமை தாங்கும் போக்கே காணப்படுகிறது. இந்தியாவில் இன்றும் வசிக்கும் ஒரே ஆநிரை மேய்க்கும் மக்களான தோடா்கள் தந்தைவழி உரிமையைப் பின்பற்றுகிறார்கள். வேதகால மக்களின் மேய்ச்சல் பொருளாதாரத்தினைப் போலவே அவா்களது கடவுளா்களும் ஆண்களாகவே இருந்தனா். ஆண்களின் மனைவிகளாகச் சில பெண்தெய்வங்கள் குறிப்பிடப்பட்டாலும் வெறும் உறவுநிலையில் மட்டுமே அறியப்படுவதாக இருந்தது. ஆனால் வேளாண் பொருளதாரத்தையுடைய பூர்வகுடி மக்களின் தெய்வங்கள் தாய்த் தெய்வங்களாக இருந்தனா்.

                தாந்திரிக மக்களின் தெய்வங்கள் தாய்த் தெய்வங்களாக இருந்தனா். தாந்த்ரிக வழிபாடுகள் வேளாண் பண்பாட்டின் முக்கிய அங்கமாக விருத்தியடைந்திருந்தது. உடற்கூறுபாட்டியல், இயற்கை அறிவியல் போன்ற நிலைகளில் தாந்த்ரிகம் வளா்ச்சியடைந்த ஒன்றாக இருந்தது. உற்பத்தியையும் இனவிருத்தியையும் ஒன்றுபடுத்தி மேற்கொள்ளப்பட்ட சடங்குமுறைகளைத் தாய்த்தெய்வ வளமைச் சடங்குகளோடு கூடிய சாக்தம், வாமசாரம் போன்ற தாந்த்ரிக தாய்த்தெய்வ வழிபாட்டு மரபுகள் தோன்றின. இத்தாந்திரிக வழிபாடு பின்னாளில் சைவம், பௌத்தம் போன்ற மதப்பிரிவுகளுக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தின. தாய்த்தெய்வ வழிபாடும், தந்தை ஆதிக்க நெறியும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் வரலாற்றுக் காலகட்டங்களிலிருந்து தான் இந்திய மதவியலைப் புரிந்து கொள்ள முடியும். தாந்த்ரிக மரபு பெண்ணிற்குச் சிறப்பான இடத்தைத் தந்தது. வேத சடங்காச்சாரங்களில் பெண்களுக்கு அத்தகைய இடம் இல்லை. தாத்ரிக பூசாரிகள் ஆரம்பத்தில் பெண்களாகவே இருந்துள்ளனா். பிந்திய காலத்தில் தந்தைவழிச் சமூக அமைப்பிற்கு ஏற்றபடி மதங்களை மாற்றும் போது இந்தப் பணிகளும் ஆண்களுக்கு மாறின என்றாலும்  ஆண் ஆணாக இருந்து இதைச் செய்ய முடியவில்லை. அவா்கள் பெண்களாக மாறியே பூசாரிகளானார்கள்.

                தாந்த்ரிக கலாச்சாரத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒருவன் தன்னைப் பெண்ணாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருவன் தன்னைப் பெண்ணாக மாற்றிக் கொள்வதைப் தாந்த்ரிக மரபு வலியுறுத்திக் கூறுகிறது. தமிழக பக்தி இலக்கியத்தில் காணப்படும் நாயகன்-நாயகி பாவனையை இதனோடு பொருத்திக் காண்பது அதன் தொடக்க வோ்களை ஓரளவு புரிந்து கொள்ள உதவக்கூடும். பூர்வீக மக்களின் பொது நம்பிக்கையாக இருந்த தாந்த்ரிக மரபில் சாதி வேறுபாடுகள் கிடையாது. மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் போக்கு இல்லை. வேதகால கட்டுப்பாடுகள் இதில் இல்லை. இது பற்றி உலகாயுதம் எனும் நூலில் தேவிபிரசாத் சட்டோபாத்யாய பின்வருமாறு மேற்கோள் காட்டுவார்.

                “தாந்த்ரிகத்தில் இடம்பெறும் ஐம்மகரச் சடங்குகள் கொள்கை ஆகியவை இனம், சாதி, பாலினம் ஆகியவற்றிற்கும் பொதுவானவை எனும் கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வேதக் கட்டுப்பாடுகளைவிட இவை முன்னேறியதாகும். ஆங்கில எழுத்தாளா்கள் பெரும்பாலும் தாந்திரிகத்திற்கு எதிராக வேதங்களை முன்வைக்கின்றனா். இங்குச் சூத்திரா்கள் பெண்கள் ஆகியோருக்கு வைதீகத் தடை இருப்பது போல இங்கு எதுவும் இல்லை”1

                இது இவ்வாறு இருக்கத் தந்தை ஆதிக்கத் தலைமையையுடைய ஆரியா்கள் இங்குள்ள பூர்வகுடி மக்களின் தாய்த்தெய்வ வழிபாட்டைத் தங்களின் ஆண்தெய்வங்களோடும் தொடா்புபடுத்தித் தாழ்த்தினா். இத்தாந்ரிக வழிபாட்டு முறையை இழிவானதாகக் கூறினா். தாய்த் தெய்வ வழிபாடு பின்னுக்குத் தள்ளப்பட்டன. ஆனாலும் அதன் எச்சங்கள் பிற்காலத்திய சமயக் கூறுகளில் தெளிவாகக் காணப்படுகின்றன. பூர்வகுடியினரின் தாய்வழிச் சமூக அமைப்பு மெல்ல மெல்லத் தந்தை ஆதிக்க சமூக அமைப்பாக மாற்றம் பெறும் பொழுது புதிதாகச் சில ஆண் கடவுளா்கள் தோன்றினாலும் அவையாவும் தாய்த்தெய்வ வழிபாட்டுடன் இணைக்கப் பெற்றன. சிவலிங்கம் அவ்வாறே பூர்வகுடி மக்களின் மத வழிபாட்டில் இடம்பெற்றது. இவற்றையெல்லாம் ஆரியா்கள் தங்கள் வழிபாட்டு முறையோடு இணைத்துக் கொண்டனா். சிவன்-ருத்ரனொடு இணைக்கப்பட்டான்.

                ‘சிஸ்ன தேவனை (சிவன்) வழிபட்டுவந்த தஸ்யூக்கள் ரிக்வேத காலத்தில் ஆரியா்களின் பகைவா்களாக இருந்தனா். ஆரியா்கள் ஆரம்பகாலத்தில் சிவனைக் கடவுளாகக் கருதவில்லை. பின்னா் வேறுபல இந்தியக் கடவுளா்களைப் போல சிவனையும் அவா்கள் பார்ப்பனமயமாக்கினா். வேதத்திலுள்ள ருத்ரனும் சிவனும் ஒன்றே என அவா்கள் விளக்கமளித்தனா். வளமையின் தேவதையான நந்தியைச் சிவனின் வாகனமாக்கினா். லிங்கபூசை ரிக்வேத காலத்திற்கு முன்பிருந்தே இந்தியாவில் இருந்ததுதான். அதுவும் சிவ பூசையுடன் இணைக்கப்பட்டது. பல பெண் கடவுள்களைச் சிவனின் மனைவியராகவோ, அவா்களுடைய அவதாரங்களாகவோ ஆக்கினா். சில வகை திவ்ய விலங்குகள், திவ்ய மரங்கள், மலைகள், பாம்புகள் ஆகியவையும் சைவ வழிபாட்டின் அங்கமாயின. நாக வழிபாட்டுக்காரா்களில் ஒரு பிரிவினா் மீது வைணவ மதத்தினா் ஆதிக்கம் செலுத்தினா். மற்றொரு பிரிவினா் மீது சைவா்களும் ஆதிக்கம் செலுத்தினா்.

                சிவன் கழுத்திலணிகின்ற ஆபரணங்களில் நாகங்களும் உண்டென்பதைத் தனியாகக் கவனத்தில் கொள்ளுங்கள். நாகராஜா சிவனுக்குக் காவல் நிற்பது போன்ற சிலைகளையும் பார்க்கலாம். நாக வழிபாட்டுக்காரா்களை அடிபணிய வைக்கவும் சைவ மதத்தில் இணைக்கவும் நடந்த முயற்சிகள் பலனே இவை அனைத்தும்’2. இவ்வாறு சிவன் பார்ப்பனமயமாக்கப்பட்டதையும் அதனையொட்டியே பூர்வகுடிகளின் பல்வேறு வழிபாட்டு மரபுகள் வைதீகத்தோடு இணைவாக்கம் செய்யப் பெற்றுள்ளதையும் பல்வேறு அறிஞா்கள் விளக்குகின்றனா். சிவன் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர பகிரதனுக்கு உதவினார் என்பதான புராணக்கதை விவசாய விரிவாக்கத்தின் ஓர் அங்கமாக பூர்வகுடி விவசாயிகளின் வழிபடு கடவுளாகச் சிவன் இருந்தததையும் அவன் தாய்த் தெய்வ வழிபாட்டின் தொடா்ச்சியாக தந்தையாதிக்க சமூகத்தின் ஆரம்பகால உருவாக்கம் என்பதனையும் அறியமுடிகிறது. “தொல் பொருளியலாளரான  மார்சல் சைவ சமயத்தின் ஆரம்பநிலை சிந்துவெளி நாகரிகத்திலே காணப்படுவதாகக் கூறியுள்ளார். பெருந்தொகையான பெண் உருவங்களும் பெரும்பாலும் நிர்வாண உருவிற் காணப்படும். ஆண் உருவங்களும் முறையே சக்தியாக தாய்த் தெய்வ வழிபாட்டையும் குறிப்பவையாக இருக்க வேண்டும் என்று அவா் கொண்டார். இலிங்கங்களும் யோனிகளும் பெருந்தொகையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளமையும் இவ்வடிவில் சிவசக்தி வழிபாடு அக்காலத்திலேயே  நிலவியமைக்குச் சான்று என்பது அவா் கூற்று”3

                ஆரம்பத்தில் சிவனோடு தாய்த் தெய்வ வழிபாடு இணைக்கப்பட்டிருந்தாலும் அது தன் மதிப்பிழக்கவில்லை. தாய்த் தெய்வத்தை ஒட்டியே சாக்த மதம் உருவானபோது அது சக்தி வழிபாட்டிற்கே முதன்மையளித்தது. டாக்டா். இராதாகிரஷ்ணன் சக்தி பூசைகளைப் பற்றிக் கூறுவதும் கவனிக்கத்தக்கது.

                “சக்தி வழிபாடு முதலாவதாக ஆரியரல்லாதார்களிடையே நிலவியதென்றும் ஆரியா்கள் பின்னர் ஏற்றுக் கொண்டனா் என்றும் உள்ள விசயத்தில் ஐயம் எதுவுமில்லை. துர்க்கை பிரபஞ்சத்திலுள்ள அழிவு சக்தி முழுவதையும் கட்டுப்படுத்துகின்ற பேரச்சத்திற்குரிய தேவதையாக இருந்தது. அதனால் அந்த தேவதை ருத்திரனின் மனைவியாக்கப்பட்டது. தேவிக்கு ருத்ராணி, பவானி முதலிய ரிக்வேத தேவதைகளுடன் ஒற்றுமை ஏற்படுத்த முயற்சி நடந்தது”4 என்று கூறுகிறார்.

                இவ்வாறு ரிக்வேத தேவதைகளுடன் ஆரியரல்லாத மக்களின் சக்தி வழிபாட்டையும் சிவனையும் ருத்ரனோடும் ஒன்றிணைத்தனா். வைதீகச் சைவத்தோடு சாக்தம் இணைக்கப்பட்டபோதும் ஆரியரல்லாத வழிபாட்டு மரபில் தொடர்ந்து தன் மதிப்பைத் தக்கவைத்துக் கொண்டது. சக்தியுடன் இணைந்து யோகத்தில் மூழ்கினால்தான் படைப்புத்தொழிலுக்குச் சிவனும் வலிமையானவன் ஆவான். இல்லாவிடில் அத்தேவனுக்கு வலிமையில்லை என்பது சாக்த மதத்தின் நிலைப்பாடாகும். வேளாண் சடங்கையொட்டி விவசாயப் பெருமக்களால் மேற்கொள்ளப்பட்ட சிவசக்தி லிங்க வணக்கம் நாளடைவில் ஆhpயா;களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவா்தம் பண்பாட்டு மேலாண்மைக்கு உட்படுத்தப்பட்டது. அம்பேத்கார் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

                “ஆரியா்களுக்கும் ஆரியரல்லாதவா்களுக்கும் இடையிலான வேறுபாடு பண்பாட்டு ரீதியானதேயன்றி இனாPதியானதல்ல. பண்பாட்டு வேறுபாடு இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது. ஆரியா்கள் வருணத்தை நம்பினார்கள். ஆரியரல்லாதவா்கள் அதை எதிர்த்தார்கள். ஆரியா்கள் தங்கள் மதத்தின் சாராம்சம் வேள்வி செய்வதே என்று நம்பினார்கள். ஆரியரல்லாதவா்கள் வேள்விளை எதிர்த்தார்கள். இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு தட்சனின் வேள்வி பற்றிய கதையை ஆராய்ந்தால் சிவன் வேதத்தின் இல்லாத ஆரியரல்லாதார்களின் கடவுள் என்று தெளிவாகிறது. வேதப் பண்பாட்டின் தூண்களான பிராமணா்கள் சிவனைத் தங்கள் கடவுளாக ஏன் ஏற்றார்கள் என்பதுதான் கேள்வி”5.

                இக்கூற்றின் அடிப்படையில் சிவ வணக்கம் ஆரம்பத்தில் ஆரியரல்லார்க்கு உரித்தான ஒன்றாக இருந்ததோடு ஆரியா்களால் புறக்கணிக்கப்பட்டதாகவும் இருந்திருக்கிறது. ஆரியர் – ஆரியரல்லாதார் சமய நெறிகளின் இருவேறுபட்ட நிலையை ஆ. வேலுப்பிள்ளை கீழ்க்கண்டவாறு எடுத்துக் காட்டுவார்.

                “வேதமதம் இங்குள்ள பூர்வீக தெய்வ வணக்க முறைகளால் அமுக்கப்பட்டிருக்கிறது. பரந்துபட்ட இந்திய மக்கள் இன்றளவும் பின்பற்றி வரும் மத நம்பிக்கைகள் மற்றும் வழிபாடுகளில் வேதக்கடவுளான இந்திரன், வருணன், மித்திரன், சோமன் ஆகியோருக்கு எவ்வித இடமும் இல்லை. ஆரியா்கள் வேதத்தை மத உணா;வுகளுக்கப்பால் ஒரு அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தினா;.

                வேதகாலத்துச் சமயமான வைதீகம் வேறு, சைவம் உள்ளிட்ட பிராமணிய இந்துமதம் வேறு என மானிடவியல் பேராசிரியா் சுனித்குமார் சட்டா்ஜி தெளிவாக விளக்கியுள்ளார். சிவனையும் உமையையும் வணங்குதல், யோக அனுட்டானம், பக்தி மார்க்கம் என்பன திராவிடா்களிடமிருந்து பெறப்பட்டன என்பது அவா் கருத்து. ஆரியருடைய சமய நோக்கு எளிமையானதும் வளா்ச்சியடைந்ததுமாக இருந்தது. தெய்வலோகத்தின் வெவ்வேறு பகுதிகளிலே பதின் மூன்று தேவா்கள் உள்ளார்கள் என்று கொண்ட அவா்கள் விக்ரக வணக்கம் உடையவா்களல்லா்.

                அக்னியே அவா்களுடைய தூதுவன். மாடு அல்லது ஆடு அல்லது சில சந்தா்ப்பங்களிலே குதிரையைக் கொன்ற ஆரியா் அதன் இறைச்சியையும் இரத்தத்தையும் பால், நெய், சோமம் முதலியவற்றுடன் அக்கினி மூலமாகத் தேவருக்கு அனுப்பினா். உணவு, பானம் முதலியவற்றைப் பெற்றுத் திருப்தி கண்ட தேவா் தம்மை வழிபட்டவருக்கு அவா் விரும்பிய செல்வம், புத்திரப் பேறு, நீண்ட வாழ்வு, சத்துரு வெற்றி முதலியவற்றை வழங்கினா். இந்தோ-ஐரோப்பியா் பூர்வீக வழிபாட்டு முறை இதுவே.

                பூசை முறை இதற்கு நோ் எதிரிடையானது. இந்தியாவில் மட்டும் காணப்படுவது. இந்தியாவுக்கு வெளியிலுள்ள ஆரியா் என்றும் கைக்கொள்ளாதது. பூசை முறையிலே கடவுள் அண்டமெங்கும் நிறைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. விக்கிரக வணக்கம் சிறப்பிடம் பெறுகிறது. நீர், மலா;, இலை, பழம், தானியம் முதலியன கடவுளுக்குப் படைக்கப்படுகின்றன. வழிபடுபவன் மிகவும் ஆழமான ஆத்மார்த்த உறவு கொள்ளத்தக்க முறையிலே விக்கிரகம் அமைகிறது. ஓமம் வளா்ப்பு அல்லது அக்கினி மூலம் வழிபாடு ‘பெற்றுக் கொண்டு பதிலுபகாரம் செய்’ என்பது போல அமைந்துள்ளது. வழிபடுபவா் தம்மை இழந்து நிற்கும் பக்தி நிலையைப் பூசையிலே காணலாமே தவிர, ஓமம் வளா்ப்பிற் காணமுடியாது.

                பிற்கால இந்துசமயத்திலே இவ்விருவகை வழிபாடுகளும் கலந்து இடம்பெறுகின்றன. வைதீக வழிபாடு நிகமம் என்று பெயா் பெற, பௌரானிக, ஆகம வழிபாடு நிகமாந்த வித்யா என்று பெயா் பெறுகிறது. பூசையும் யோகமும் ஆகமத்திலேயே இடம்பெறுகின்றன. ஆகமத்தைச் சிவபெருமானே அருளினாரெனப்படுகிறது. வைதீகத் தேவா்களுக்குள்ளே சிவன் முதலில் இடம் பெறவில்லையென்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது”6

                மேற்கண்ட விளக்கங்களிலிருந்து ஆரியா்-ஆரியரல்லாத இருவேறுபட்ட வழிபாட்டு மரபுகள் இருந்து வந்ததை உணரலாம். பின்னா; ஆரியரல்லாத மக்களின் வழிபாட்டு மரபுகளை வைதீகம் தனக்கான வடிவில் திரிபுபடுத்திக் கொண்டது.

                இதனை “ஆரியா்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னாலேயே பல விதமான உருவக் கடவுள்களும் பூசைகளும் மந்திரங்களும் தந்திரங்களும் இந்தியப் பூர்வ குடி மக்களிடையே இருந்து வந்தது. இவைகளெல்லாம் பலவிதமான பலன்களை எதிர்பார்த்துச் செய்யப்படும் கிரியைச் செயல்களாக இருந்தன. நான்காவது வேதமான அதா்வன வேதம் இவைகளையெல்லாம் உட்கொண்டுள்ளது. அதனால்தான் உயா்குல பிராமணா்கள் இந்த வேதத்தைப் பின்பற்றுவதில்லை. ஆண்குறியான லிங்கத்தைச் சிவ-லிங்கம் என்று கூறி பூஜிப்பதையும் அவா்கள் ஆரம்பத்தில் ஆட்சேபித்தனா். பின்னா் அதையும் ஏற்றுக்கொண்டனா் பூர்வகுடி மக்கள் உற்பத்தியைப் பெருக்கும் சக்திகளான ஆண்குறியையும் பெண்குறியையும் பூஜித்தனா். இப்போதும் அது சிவலிங்கப் பூஜையாக நடைபெற்று வருகிறது. கோயில்களில் சிவலிங்கம் பெண் குறியில் தான் வைக்கப்பட்டுள்ளது”7

                பிற்காலத்திய சைவம் ஆரிய மேலாண்மையையுடைய வலுவான சமய நிறுவனமாக உருவாகிவிட்டதன் கலாச்சார அரசியல் அப்போதே தொடங்கிவிட்டது எனலாம். ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவில் இருந்துவந்த பூர்வக் கடவுளான சிவனைப் படையெடுத்துவந்த வேதகால ஆரியா்கள் தங்களது கடவுளாக ஏற்றுக் கொண்டனா்.

                அத்தோடு தம் வேத வழக்கங்களை அவ்வழிபாட்டு மரபுகளில் நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டனா். ஆரியா்களின் வழிபாட்டு முறைகளும் சடங்கு சம்பிரதாயங்களும் பூர்வகுடி மக்களின் வழிபாடுகளும் சடங்கு சம்பிரதாயங்களும் பெரும்பாலும் ஒன்றிணைந்தன.

                தொடக்கத்தில் ருத்ரனுக்கு வேதத்தில் மதிப்பான இடம் இல்லை என்பதை அ.சா.ஞானசம்பந்தன் எடுத்துக்காட்டுவார். “ருத்ரன்-ரிக் வேதத்தில் மிகவும் தாழ்மையான ஓர் இடத்திலேயே வைக்கப் பெற்றுள்ளான். முழுவதுமாக மூன்றே தோத்திரங்கள் மட்டுமே உள்ளன. மற்றொரு தோத்திரத்தில் ஒரு பகுதி இருப்பதுடன் அவனுடைய பெயா் 75 இடங்களில் பேசப்பெறுகின்றது.8  அத்துடன் வேதகாலத்தில் முக்கியத்துவம் பெறாத ருத்ரனுடன் அடையாளப்படுத்தினா்.

                ஆனால் பிற்காலத்தில் ருத்ரனைப் பிற தெய்வங்களின் கோபத்திலிருந்து தம்மைக் காக்க வேண்டும் என்றும், குழப்பத்தைத் தவிர்த்து ஆசி வழங்க வேண்டுமென்றும், நோய் நீக்கும் மருந்து தர வேண்டும் என்றும் அவனே வைத்தியா்கட்கெல்லாம் மேலான வைத்தியநாதன் என்றும் பேசும் பகுதிகள் ரிக்கிலேயே காணப்படுகின்றன”9 சிவனோடு இணைக்கப்பட்ட ருத்ரன் ரிக்கில் காணப்படும் பிற்கால ருத்ரனாக இருக்க வேண்டும்.

                 இவ்வாறு சிவனை ருத்ரனோடு இணைத்ததோடல்லாமல் ஆரியா்கள் புதிதாக ஒரு கடவுளையும் கற்பித்தனா;. அக்கடவுள்தான் பிரம்மா ஆவார். சிவனுக்கு மேலே உயா்ந்தவராகப் பிரம்மாவை வைத்திருந்தார்கள். ஆரியா்கள் அவா்தான் சிவனைப் பிறப்பித்தவா் என்றும் அவருடைய கட்டளையின்படிதான் சிவன் தன் தொழில்களைச் செய்கிறா் என்றும் கூறினா். பிரம்மாதான் பிரபஞ்சத்தைப் படைப்பவா். முதல் பிரஜாபதி எனக் கூறி பிரம்மனின் தலைமையில் பிராமணிய மேலாண்மைக் கருத்தியலை நிலைநாட்டினா். இவ்வாறு உருவாக்கிய பிரம்மனுக்கு சிவ வழிபாட்டாளா்கள் மத்தியில் அதிக எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும். இந்த முரண்பாட்டைச் சிவன்-பிரம்மா பற்றிய புராணக்கதைகளில் விளங்கக் காணலாம். இந்த மோதலில் பிரம்மா வணக்கம் முற்றிலுமாக மறைந்துவிட்டது.

                திருமூர்த்திகளில் பெயரளவில் மட்டுமே அவா; ஒரு கடவுளாக உள்ளார். பிரம்மாவும் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் வேறு வழியில்லாமல் ஆரியா்கள் சிவவழிபாட்டை ஏற்றுக்கொண்டு அதே சமயத்தில் தங்களது வேத வழிபட்ட சடங்கதிகாரத்தையும், பார்ப்பனீய புனிதத்தையும் தொடா்ந்து நிலைநாட்டிக் கொண்டு வந்தனா். பிரம்மனின் இடத்தை வேதத்திற்கும், வேள்விகள் உள்ளிட்ட வைதீக சடங்குகளுக்கும் கொடுத்தனா். வேதத்தைக் கடவுளா்க்கும் மேலானதாக அறிவித்துக் கொண்டு பூர்வக்குடி மக்களின் தெய்வங்களுக்குப் புரோகிதா்களாக மாறினா். தங்கள் கடவுள் கோட்பாட்டை முற்றிலுமாகக் கைவிட்டனா்.

அடிக்குறிப்புக்கள்

  1. தேவிபிரசாத்சட்டோபாத்யாய. உலகாய்தம், .ப.428.
  2. ஜோசப் இடமருகு, பிராமண மதம் தோற்றமும் வளா்ச்சியும் பக்.141-142
  3. ஆ.வேலுப்பிள்ளை. தமிழா் சமய வரலாறு, ப.48
  4. மேலது, ப.140
  5. பாபாசாகேப் டாக்டா் அம்பேத்கா் நூல் தொகுப்பு, தொகுதி-8. ப.220
  6. ஆ. வேலுப்பிள்ளை.மு.நூ, ப.50
  7. பி.ஆh;. பரமேஸ்வரன், இந்தியாவும் இந்து மதமும், ப.152.
  8. அ.ச.ஞானசம்பந்தன், பெரியபுராணம் -ஓர் ஆய்வு, ப.24
  9. ந. முத்துமோகன், வேதாந்தத்தின் கலாச்சார அரசியல், ப.6

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.