திருச்சி  புலவர் இராஇராமமூர்த்தி

 சுந்தரரைத்  தடுத்தாட்  கொள்ள இறைவன் செய்த திருவிளையாடல் நிகழ்ச்சி, பொது மன்றில்  ஆவணம் எதையும் சரியான வகையில் பணிந்திடுதல்  வேண்டும் என்ற வழக்கு மன்ற நடைமுறையை  உறுதி படுத்துகிறது. வழக்கில் ஈடுபட்ட வாதியாக சிவபெருமான், வழக்கின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பிரதிவாதியாக  சுந்தரர், வழக்கை நடத்தும் ஊர்ச்சபையோராக வெண்ணைநல்லூர் அந்தணர்  என்ற மூவகையினருக்குள் இந்த வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில், சேக்கிழார் வழங்கும்  இப்பெரிய புராணத்தைப் படிப்போர் அனைவரும்  மறைமுகமாகப் பங்கேற்றுள்ளனர்!

இந்த வழக்கைக் கொண்டுவந்த சிவபெருமான் தம்மை மறைத்துக் கொண்டு  ஒரு முதிய அந்தணனாக உள்ளே  நுழைகிறார்! அவர் செய்வது வியப்புக்கு உரிய மாயச்  செயல் என்பதை,  வாசகராகிய நாம் மௌனசாட்சியாக அமைந்து  உணர்ந்து கொள்ளத்  தலைப்படுகிறோம். சுந்தரரைத்  தடுத்து ஆட்கொள்ளவே  இறைவன் இதனைச் செய்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் நாம், இந்த வழக்கு  நிகழ்ச்சியைத்  தொடர்ந்து ஆழமாக கவனிக்கிறோம்!

சுந்தரர் திருமணம்  புரிந்து கொள்ளவிருந்த நல்லூர் அரங்கில் நுழைந்த முதியஅந்தணர் ‘’முதலில்  இந்த மொழியைக்  கேளுங்கள்’’ என்று கூறுகிறார்! அவர் அந்தணனாகவும்  முதியவராகவும்   இருந்தமையால்,  அனைவரும்வணங்கி வரவேற்கின்றனர்.   அப்போது  சுந்தரரைநோக்கி , ‘’நுமக்கும்  நமக்கும்  இடையில் உள்ள   இசைவினால் அமைந்த வழக்குஓன்றுஉண்டு! அதனை முடித்தபின் திருமண வேள்வியைத்    தொடங்குக! ‘’ என்றார். சுந்தரரும் அந்தவழக்கை  முடிக்காமல் வதுவை  செய்யேன்’’ என்று உறுதியளிக்கிறார்! உடனே , ‘’இந்நந்நாவலூரன் எனக்குஅடிமை!’’ என்கிறார். ‘’உலகியலில் அந்தணர் மற்றவர்க்கு அடிமையாதல் இல்லை !   ஆதலால்  உங்கள்   செயல்  நகைப்புக்கு உரியது! ‘’ என்றார். அந்த நேரத்தில், ‘’அக்காலத்தில் உன்  தந்தையின்  தந்தைக்கும் எனக்கும் இடையில் அமைந்த அடிமை ஓலை ,  என்கையில்  இருக்கிறது! எதற்குச்   சிரிக்கிறாய்? ‘’ என்கிறார் அந்தணர் !  ‘’அந்தணர்  மற்றோர் அந்தணருக்கு அடிமை !  என்று பேசும்நீ பித்தனோ? ‘’ என்றனர்.  அதனைக் கேட்ட அந்தணர், ‘’பித்தன் என்றாலும்  பேயன் என்றாலும்,  யான்  கலங்கேன் ! அறிவாற்றலுடன்   பேசாமல்  அடிமைத் தொழில்      புரிக!’’ என்றார்.   சுந்தரர் ஓலையைக் காட்டுக    என்று கூறி,  அந்த அந்தணரிடம்  பிடிவாதமாக  நெருக்கி அவர்கையில்இருந்த ஓலையைப் பிடுங்கிக்   கிழித்து எறிகிறார்!  இவ்வாறு சாதி  ஆணவத்தால்  சாட்சியத்தைக்  கலைத்த குற்றத்தைப் புரிந்த சுந்தரரின்  செயலை  மன்றத்தினரிடம் கூறி,  அந்தணர்  முறையிடுகிறார்!  அதுகேட்ட  அவையினர், ‘’வியப்புக்குரிய  இந்த  வழக்கினை இங்கு   வைத்த  நீங்கள் எந்த  ஊரினர்? ‘’என்றுகேட்கின்றனர் அப்போதுஅந்தணர், ‘’எம்மூர்  திருவெண்ணெய் நல்லூர்!’’ என்று  கூறி, ‘’இங்கே முறைமாறி நடந்து   கொண்டு  , ஓலையைக் கிழித்த  இந்தச் சுந்தரர் என்அடிமையே! ‘’ என்கிறார். அவையினர் ‘’ அப்படியானால்  வழக்கினைக்  கேட்பதற்கு உரிய  நிலப்பகுதி ( JURISDICTION)  அதுவே  எனக்கூறி  அனைவரும் அவ்வூருக்குச்  செல்கின்றனர்!

‘’அந்த  ஊரிலும்  நீயே என்அடிமை  என்பதை  நிறுவுவேன்’’ என்றஅந்தணர் ,  அனைவரையும் அழைத்துச்  சென்று முறையிட்டார்!  அவையினர்  ‘ உலகில் இல்லாத புதுவழக்கினைக் கொண்டுவந்த நீரே இதனை ஆட்சி  ஆவணம்,  அயலார் காட்சி  என்ற வகைகளில் நிறுவவேண்டும்!’’ என்றனர்.   அந்தணர், , ‘’ அவர்கிழித்தது படிஓலை! என்னிடம்   ‘மூலஓலை’  உள்ளது!’’ என்றார்.  இக்காலத்தின்  duplicate , original ஆகியவற்றை அதுகுறிக்கும்.  எதற்கும் ஒர்  ஒளிப்படம் (xerox)  எடுத்து வைத்துக்  கொள்வது நல்லது என்பதை இறைவனே அன்று  காட்டிய   நிகழ்ச்சி  அது !  ‘’அப்போதும்  இந்த சுந்தரர்,  வல்லடி வழக்காக  அந்த மூலஓலையையும்  சிதைக்காமல்  பார்த்துக்கொள்ள வேண்டும்!  ‘’ என்கிறார்.  தம் மிடற்றில் வைத்த இருள்நிற நஞ்சை மறைத்துக் கொண்டு , வேடமிட்டு வந்த சிவபிரான் திருக்கரத்தில் இருந்த  ஓலையை அறமன்றத்தின்  ‘கரணத்தான்’ பணிவுடன்  வாங்கிப் படித்தான்!  ஓலையில் அக்கால ஆவணம் எழுதும்   முறைப்படி  வாசகம் அமைந்திருந்தது!

‘’விச்ச  தின்றியே  விளைவுசெய்குவாய் ,
        விண்ணும்  மண்ணகம்  முழுதும்  யாவையும்
வச்சு  வாங்குவாய் !’’

 என்பார்  மணிவாசகர்.   இதனையே  கம்பர்,

. ‘’உலகம் யாவையும்  தாம்  உளவாக்கலும்
      நிலை பெறுத்தலும்  நீக்கலும்   நீங்கலா
அலகிலா   விளையாட்டு  உடையார் ‘’

என்கிறார்! தம்  சங்கற்பத்தால் புதிதாக  எதையுமே  தோற்றுவிக்கும்  ஆற்றல் பெற்றவர் இறைவன்! ஆகவே சிவபெருமான்  சுந்தரரைத்  தடுத்தாட் கொள்ளும் போது , அடிமைச் சாசனம்  ஒன்றை அவராக உருவாக்குகிறார்! அந்தச் சாசனம்  முறையாக எழுதப்பட்ட சாசனம் போல் தோன்ற , மிகப் பழையதாய் காட்சி யளிக்கச் செய்கிறார்! அதனை ஆராய்ந்த அவையின் கரணத்தான் (கணக்குப்பிள்ளை) அதன்பழமையுடன், பழங்கால எழுத்தின் ஒப்புமையையும் ஆராய்ந்து அந்தஓலை  மூலஓலையே  என்பதை  உறுதி செய்கிறான்!  அந்த ஓலையின் மேலெழுத்துஇட்ட பெரியோர்களின் எழுத்துடன் ,   அரண்தரு காப்பிலிருந்து எடுத்த பழைய ஓலை எழுத்தினை ஒப்பு  நோக்கி , ‘’இரண்டும்ஒத்திருந்தது, என்னே இனிச்செயல்! ‘’ என்று  கூறினான்.

இனி அந்த  மூலஓலை வாசகத்தைப் படிப்போம் . ‘’அரிய  மறைகளைக் கற்ற, நாவலந்தீவின்  ஆதிசைவக்குலத்தைச்  சார்ந்த ஆரூரனாகிய  யான் எழுதிக் கொடுத்த  அடிமையோ ஓலை இது! பெருமுனிவனாகிய   பித்தனுக்கு,  யானும்  என்பால்  தொடர்ந்து வரும் முறையான  மரபினோரும்  வழித்தொண்டு  செய்வோம். என்று உறுதியளித்து,  இந்த ஓலையை  இருமையாலும் (மனத்தாலும்  வாசகத்தாலும்)  இதற்கு  இசைந்து சுய நினைவோடும்எழுதிக் கொடுத்தேன்.   இவை என் எழுத்து! ‘’  என்பதாகும்.  இந்த ஓலையில் ‘இருமையால்  எழுதி நேர்ந்தேன்  இதற்கு  இவை என் எழுத்து ‘ என்பவை,  இன்றும் பத்திரம் எழுதுவோர்  கடைப்பிடிக்கும்  மரபாகும்.

சோழ நாட்டின்  முதலமைச்சராக  விளங்கிய சேக்கிழார் பெருமான்  அக்கால நடைமுறைகளை  நீதி மன்றத்துக்கே  உரிய   வாசகங்களுடன்  அமைத்து இந்தப் பகுதியை எழுதியருளி  உள்ளார்.    இனி  இப்பாடலைப் படிப்போம்.

அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை
பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால்
வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து.

இப்பாடலில், ஆன்மவியலின்படி பித்தனாகிய இறைவனுக்கு சுந்தரரும் அவர்வழி வந்த  நாமும்  அன்றும்  இன்றும்  என்றும் வழி வழியாகத் தொண்டு  செய்வோம்  என்று எழுதிச் சான்றளிக்க வேண்டுமா  என்ன?  என்றும்  உள்ள உண்மையையே கற்பனைச்   சிறப்புடன்   ஆவணப் படுத்திய   சேக்கிழார் பெருந்தகையின்  புலமைத் திறம் போற்றுதற்கு உரியதல்லவா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *