-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 18 –வெஃகாமை

குறள் 171:

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

மத்தவங்களோட பொருள ஒருத்தன் அநியாயமா அபகரிச்சாம்னா அவனோட குடும்பம் அழிஞ்சி போவும், பழியும் வந்து அண்டும்.

குறள் 172:

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்

நியாயத்துக்கு பயந்தவன் மத்தவங்க பொருள அனுபவிக்கணுங்குத நெனப்புல பழி பாவம் செய்ய மாட்டான்.

குறள் 173:

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

அறத்தால வருத நெலையான பயன விரும்புதவங்க ஒடனடியா பயன் கெடைக்கும் ங்குத நெனைப்புல மத்தவங்க பொருள எடுக்க நியாயம் இல்லாத செயல செய்யமாட்டாங்க.

குறள் 174:

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்

ஒண்ணுமில்லாம போய் ஏழ்ம நெல வந்தாலும் அஞ்சு பொறிய அடக்கின படிச்ச பெரியவங்க மத்தவங்க பொருளுக்கு ஆசப் பட மாட்டாங்க.

குறள் 175:

அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

பொறத்தியார் பொருள் மேல ஆச வச்சி நியாயமில்லாத வழில அத எடுக்க நெனைச்சவனுக்கு எல்லாத்தையும் படிச்சு அறிஞ்சிகிட்ட நல்ல புத்தி இருந்தாலும் அதால என்ன பிரயோசனம்.

குறள் 176:

அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

அருளைப் பெறுததுக்கு ஆசப்பட்டு குடும்ப வாழ்க்கைல நல்லதனமா இருக்குத ஒருத்தன் தெரியாத்தனமா மத்தவம் பொருளுக்கு ஆசப்பட்டு கெட்டது செய்தாம்னா அழிஞ்சு போவான்.

குறள் 177:

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்

மத்தவம் பொருள புடுங்கிக்கிட்டு வாழ்க்கைல வளமா இருக்கணும்னு நெனச்சாம்னா அந்த வளத்த அனுபவிக்க நேரத்துல அது நல்லதில்ல னு உணத்திடும்.

குறள் 178:

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்

சொத்து கொறையாம இருக்கதுக்கு ஒரே வழி மத்தவம் பொருள் மேல ஆச வைக்காம இருக்கதுதான்.

குறள் 179:

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு

மத்தவம் பொருள் மேல ஆச வைக்காம இருக்கதுதான் அறம் னு நெனைக்க பெருமக்கள் கிட்ட (திருமகள்) லச்சுமி தானே போய் குடியிருப்பா.

குறள் 180:

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு

பின் விளைவ எண்ணாம மத்தவம் பொருள் மேல வைக்குத ஆச நமக்கு அழிவ கொடுக்கும். ஆசப்படாம இருக்குதது வாழ்க்கைல வெற்றிய கொடுக்கும்.

______________________________________

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *