அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

பிரவீண் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.03.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி – 203

 1. கடவுளின் வெளிநடப்பு
  __________________________
  எங்கு வந்தாய் மகனே
  எதனைத் தொலைத்தாய்
  வாழ்க்கைத் தத்துவத்தை உணராது
  விழுந்துவிழுந்து தொழுகின்றாய்
  விடியலில் குளித்து
  விரும்பி உண்ணா நோன்பிருந்து
  நூலைக் கையில் கட்டிக்கொண்டு
  நூறுரூபாய் காணிக்கையிட்டு
  எளிதாய் பணக்காரனாகும் வழியை
  என்னிடமே கேட்கின்றாயே
  அடுத்தவனை ஏமாற்றாது
  அகன்ற இவ்வுலகில் முன்னேற
  ஒருமுறை உழைத்துப்பார்
  ஓராயிரம் கதவுகள் திறக்கும்
  கனவுகலைந்து எழுந்த மனிதன்
  காய்கறிக்கடை திறக்கத் தீர்மானித்தான்
  காலையில் குளித்துக் கிளம்பி
  இதோ கடவுளைக் காண
  இங்கே மீண்டும் வந்துள்ளான்
  அப்படியே செய்கிறேன் நீ சொன்னபடி
  அதிகவருமானம் கிடைக்கச்செய்தால்
  அதில் பத்துசதவிகிதம் உனக்கு
  கண் திறந்தது பார்த்த போது
  கடவுள் நின்றிருந்த இடத்தில்
  அவருக்குப் பதில் வாசகம்
  திருந்தாத மாந்தர் நீர்
  தீர்வுசொன்ன எனக்கே கையூட்டா
  வேதனை மிகுதியால் நான்
  வெளிநடப்பு செய்கின்றேன்.

 2. நம்பிக்கை

  கணனி சுமந்து வந்தேன்
  உன் சன்னதிக்கு
  கடவுள் உன்னை
  நெஞ்சில் சுமந்து வந்தேன்
  நித்தம் என்னை
  காத்து நிற்பாய் என்ற
  நம்பிக்கையுடன்

  வேலைக்கு செல்லும் முன்னே
  இந்நாள் நன்னாளாய் அமைய
  கண் மூடி வேண்டி நின்றேன்
  பிறருக்கு தீங்கு நினைக்காது
  உன் சுமையை நீயே சுமந்து
  முயற்சி செய்து முன்னேறு
  எந்நாளும் நன்னாளாய் மாறிடுமே
  என்று நீ சொல்ல உணர்ந்தேன்

  கையேந்தி நின்றேன்
  உன் வாசல் முன்னே
  விழிகள் மூடி
  வழிகாட்டிட வேண்டி நின்றேன்
  நெற்றிப்பொட்டில் போட்டு வைத்து
  வேண்டி நின்ற அத்தனையும்
  உனக்கு கிடைக்கட்டும் என்று
  வாழ்த்தி நின்ற உருவம் கண்டேன்

  வயதில் மூத்த மனிதராய்
  எனக்காக மந்திரம் சொல்லி
  நான் நினைத்ததெல்லாம்
  கிடைக்க வேண்டி
  வாழ்த்தி நின்ற அவர்
  கண்களில் கண்டேன்
  அன்பே சிவம் என்று

  கல்லாய் நீ இருந்தாலும்
  கடவுள் என்று நம்பி
  கண் மூடி நின்றேன்
  என் மனக்கண்ணை திறந்தாயே
  காணும் சக மனிதன் உருவில்
  கடவுளை காணும்
  அருள் எனக்கு தந்தாயே

 3. நம்பிக்கை…

  கல்லைக் கடவுள் சிலையாக்கி
  கோவில் கட்டினோம் நிலையாக்க,
  எல்லை யில்லா அருள்பெறவே
  எடுத்துக் கருவறை வைத்ததையே
  எல்லா நாளும் பூசைசெய்ய
  ஏற்க வைத்தோம் அர்ச்சகரை,
  கல்லில் கடவுள் நம்பிக்கைதான்
  கோவில் அர்ச்சகர் ஆசியுமே…!

  செண்பக ஜெகதீசன்…

 4. திலமிட்ட நெற்றியில்
  திரளான சிந்தனைகள்..!
  ==========================

  உலகாளும் இறைவி டத்தில்
  ……………ஒர்வரமா வேண்டு கின்றீர்.?
  பலவரத்தை வேண்டி னாலும்
  ……………பகவானும் கொடுத்த ருள்வான்.!
  திலகமிட்ட நெற்றிக் குள்ளே
  ……………திரண்டுவரும் சிந்தை கொண்டு..
  சிலகாலம் பொறுத்தி ருந்தால்
  ……………சிலவரலாம் நல்ல தாக.!

  அலவுகின்ற மனக்கு ழப்பம்
  ……………அமைதியாகும் ஆல யத்தில்.!
  கலங்குகின்ற மனதை என்றும்
  ……………கடவுளுமே தெளிய வைப்பான்.!
  இலக்கினைநீ எட்டு தற்கு
  ……………இறைவனிடம் தஞ்ச மாகு.!
  உலகத்தில் நல்ல வற்றை
  ……………ஒருபோதும் ஒதுக்க வேண்டாம்.!

  களையெடுக்கும் தீய வற்றை
  ……………கடமையென்று கொண்டு விட்டால்.!
  முளைகொண்டு எழுநல் எண்ணம்
  ……………முன்னேறும் தடைப டாது.!
  விளைநிலமாம் வளரும் சிந்தை.!
  ……………விதைக்கவேண்டும் நல்ல தையே.!
  இளைஞராக இருக்கும் போதே
  ……………இவையெல்லாம் தேவை அன்றோ.!

  =================
  அறுசீர் விருத்தம்
  காய் = மா = தேமா
  ================

 5. வெற்றித் திலகம் நெற்றியில் இட்டு
  வென்று வா மகனே சென்று என்று
  வெஞ்சமர்களம் காண வழி அனுப்பும்
  நெஞ்சுரம் கெண்டவீரத்தாய்யவள் வாழி வாழி

  ஈன்ற தாய் அவள் இட்ட கட்டளைக்கு
  இம்மியளவும் மறுப்பு இல்லை
  இனி பொறுப்பதற்கு நேரமில்லை
  இப்பேதே எடு வாளை என்று புறப்பட்ட வீரன் வாழி வாழி

  சமர்களம் என்ன சாப்பாட்டுப் பந்தியா
  சம்மணம் இட்டு அமர்ந்து உண்டு களிக்க
  சாவு ஈவு இரக்கமின்றி விளையாடும்
  சதிராட்டத் திடல் சற்றே அயர்ந்தால் பறந்திடுமூயிர்

  ஈட்டி முனை முன் மார்பு காட்டும் பேர்முனை அல்ல இது
  இலத்திரனியல் பெறிகளுடன் ஒரு மரண விளையாட்டு
  எறிகணைகள் சீறி சிரித்திடும்
  ஏவுகணைகள் மாறி மாறி மாறித்திடும்

  விரி வானில் திரிகின்ற வான்கலங்கள்
  வெறி கொண்டு திரி கொளுத்தி வீசி எறிந்தா
  வெடிகுண்டால் விண் அதிரும் மண் நடுங்கும்
  வெடித்து சிதறியது குண்டுகள் மட்டும் அல்ல அமைதியும் தான்

  வென்றால் வெற்றிப் புகழ்மாலை
  வீழ்ந்தால் புகழொடு பூமாலை
  வென்றாலும் சென்ன்றாலும் வீரனுக்கு
  ஈன்ற தாய்நாடு காப்பதே முதல் வேலை
  யாழ். நிலா. பாஸ்கரன்
  ஓலப்பாளையம்
  கரூர்- 639136
  9789739679
  basgee@gmail.com
  noyyal.blogspot.i

 6. தாய் மனம்
  ——
  பெற்றவள் விட்டுச்சென்ற
  முதல் வருட திதி!

  பிண்டங்கள் கரைத்து
  பிறவியும் வெறுத்து
  சாத்திரங்கள் முடித்து
  கண்ணீரும் துடைத்து
  கோயிலினுள் சென்றேன்

  கண்கள் மூடி
  மௌன மொழியினில்
  கதறி அழுகையில்

  தெய்வத்தின் திசையிலிருந்து
  திலகம் அணிவித்தாள்
  எவளோ ஒருவள்…!

  அக்கணமே
  உணர்ந்தேன் நான்….
  கருவறை கொண்டவை
  எல்லாம் கோயில்கள்தான்.

  – காந்திமதி கண்ணண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *