Featuredஅறிந்துகொள்வோம்கட்டுரைகள்பத்திகள்

மண்ணாப்பேடி புலைப்பேடி ஒழிப்பு அரசாணை பற்றிய கல்வெட்டு

-சேஷாத்ரி ஸ்ரீதரன்

மேல் சாதிப் பெண் மீது கீழ்சாதி ஆடவன் (புலையன், வண்ணான்) இரவில் கல்லோ குச்சியோ எறிந்தால் அவளை சாதி விலக்கி அந்த ஆடவனுடன் குடும்பம் நடத்த அனுப்பி வைக்கும் ஒரு சமூக வழக்கும் தான் இந்த மண்ணாப்பேடி புலைப்பேடி என்ற வழக்கம். மண்ணாப்பேடி என்றால் வண்ணாரிடம் அச்சம், புலைப்பேடி என்றால் புலையரிடம் அச்சம். இந்த மண்ணாப்பேடி புலைப்பேடி ஒழிப்பு அரசாணை பற்றிய 106 வரி கல்வெட்டு குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் திருவிதாங்கோட்டில் உள்ள பத்மனாபபுரம் அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த ஆணையை வேணாட்டு வேந்தர் வீரகேரளவர்மன் சிறைவாய் மூத்தவர் பிறப்பித்தார்.

கல்வெட்டுப் பாடம்:

கன்னி வியாழம் / நின்ற கொல்ல / ம் 800 70 1 (871) / தை மாதம் 20 7 (27) / சனியாட்செ / யும் சதயவும் / பூர்வ பக்கிஷத்து / பிறதி பதவும் சிங் / ஙங் கரணவும் பரி / கம நாமயோக / வும் இந்நாளா / ல் வீரகேரள வ / ற்ம சிறவாய் மூத்த / தம்பிரானார் கல்க் / குளத்து எழுந்த / ருளி  இருந்தருளி / கல்ப்பித்த படி / க்கு ரண்டு வக / மகாசனவும் கூ / டி கல்ப்பித்த மொ / ளியாவது தோ / வாளைக்கு மேக் / கு கண்ணாற்று / க்கு கிழக்கு கட / லினும் மலைக்கு / ம் அகத்து அகப் / பட்ட நாட்டில் பில / பேடியும் மண்ணா / ப் பேடியும் இல்லா / எந்த நம் தம்புரா / ன் திருவுள்ளம் / பற்றிக் கல் / ப்பிச்ச ப / டிக்கு ரண் / டு வக மாச / னங் கூடி / கல்ப்பிச்சு / கல்லு வெ / ட்டி நாட்டி / ய கல்ப்பினை / மறுத்து பி / லப்ப பேடியு / மண்ணாப் / பேடியும் உ / ண்டாம் கா / லத்து / மண்ணாப் / பேடியும் வகி / ற்றுப் பிள்ள / ஆதியா தோ / ண்டி வெ / ட்டுமாறு / ம் இந்த க / ல்ப்பினை மறு / த்து பிலப் / பேடியும் ம / ண்ணாப் / பேடி எந் / த வகை பொண்ணு/ ம் பிள்ளை / க்கு உண்டா / யால் / ப் பெண்ணு / ம் பிள்ள / குளிச்சு / கர ஏறிக் / கொண் / டால் தோ / ழமல்ல / எந்நும் க / ல்ப்பிச்ச / து. இ வண் / ணம் புல் / லும் பூமி / யும் கல்லு / ம் காவே / ரியும் ஒள் / ள காலத் / து நடக்கு / மாறும் க / ல்ப்பிச் / சது. திருவயத்து ம / ற்ற கண்டு வ / த்திக் கரிக்கு / ம்  திருவுள்ளம் ப / ற்றிக் கல்ப்பிச்சது./ திருவிதாங் / கோட்டு தெண்ட / ப்படை வீட்டில் / வடக்கு வாசலில் / கல்லு வெட்டி நாட் / டினது. இந்தக் / கல்லுக்கு யாதாமொ / ருத்தர் ஒரு கால / ம் யாதாம் ஒரு / வர் விக்கிநஞ் / செய்தார் அ / வர்கள் கெங்க / கரையில் காரா / ம் பசுவை கொ / ண்ட தோசத் / தில் போவா / ராகவும்.  

சொற் பொருள்: கொல்லம் – கி.பி. 824-825 ல் தொடங்கிய ஒரு சேர ஆண்டுக் கணக்கு; வியாழம் – குருபார்வை ; சனியாழ்ச்சை – சனிக்கிழமை; பூர்வ பக்ஷம் – வளர்பிறை; எழுந்தருளி – வந்திருந்து; இருந்தருளி – தங்கியிருந்து; மகாசனம் – பொதுமக்கள்; கல்பித்த – வழிகாட்டிய, பிடிபாடு தந்த; மொழியாவது – உரையாவது, பேச்சு; கண்ணாறு – வாய்க்காலை ஒட்டி அமைந்த பாதை; எந்த – என்ற; தம்புரான் – வேந்தன், உயர்குடிமகன், noble man; கல்பினை – பிடிபாடு, வழிகாட்டுநெறி, guidelines; மறுத்து – மறுதலித்து, புறந்தள்ளி, reject; வகிற்று – வயிற்று; உண்டாம் – கருவுண்டாகும் சமயத்து; ஆதியா –   ; எந்நும் – என்றும்; ஒள்ள – உள்ள; திருவயம் – வயம் என்றால் நீர், குதிரை என்ப்பொருள். திரு என்ற சிறப்படையை ஒட்டி திருக்குளம் என்ற கொள்ளலாம்.; வத்திக் கரி – ; தெண்டப்படை வீடு – படைக்கொட்டில்; யாதாம் ஒருவம் – எவரேணும் ஒருவர்; கொண்ட – கொன்ற;

விளக்கம்: கன்னி இராசியும் குருநோக்கும் நின்ற கொல்லம் ஆண்டு 871 (கி.பி.1695-1696) தை 27 ஆம் நாள் சனிக்கிழமை சதய நட்சித்திரம் கூடிய வளர்பிறையான இந்நாளில் வேணாட்டு வேந்தன் வீரகேரளன்வர்மன் சிறைவாய் மூத்தவர் கல்குளத்தில் வந்திருந்து தங்கியிருந்த காலப் பொழுதில் ஆணையிட்டபடி புலையர் வண்ணார் ஆகிய இரு சாதி பொதுமக்கள் கூடி இருக்க வழிகாட்டிநெறியால் சொன்னதாவது, தோவாளைக்கு மேற்கு வாய்க்காலுக்கு இப்பாலும் கிழக்கு கடலின் மலைக்கும் இடைப்பட்ட நாட்டில் புலைப்பேடி மண்ணாப்பேடி வழக்கம் இல்லாது ஒழிக என்று வேந்தன் முடிவு கொண்டு அதற்கு வழிகாட்டுநெறி வழங்கியபடி இரு வகை சாதிமாரும் கூடி பிடிபாட்டு வழிகாட்டுநெறியை ஏற்று அதைக் கல்லில் வெட்டி நாட்டிய உடன்பாடு. இந்த உடன்பாட்டு ஆணையைப் புறந்தள்ளிப் புலைப்பேடியும் மண்ணாப்பேடியும் ஏற்படும் காலத்தே மண்ணாப்பேடி வயிற்றுப் பிள்ளையை குழிதோண்டி வெட்டிக் கொல்ல வேண்டும். இந்த பிடிபாட்டை வழிகாட்டுநெறியைப் புறந்தள்ளிப் புலைப்பேடி, மண்ணாப்பேடி ஆகிய எந்த வகையால் பெண் கருவுற்றாலும் பெண்ணும் பிள்ளையும் தீட்டுகழியக் குளித்து கரை ஏறினால் எந்த தோஷமும் இல்லை குற்றமும் இல்லை என்றும் வழிகாட்டுநெறி தரப்படுகின்றது. இவ்வண்ணம் புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் நிலைக்கும் காலம் வரை இந்த பிடிபாடு செல்வதாகச் சொல்லப்பட்டது. இது திருவிதாங்கோட்டில் உள்ள படைக் கொட்டிலின் (armoury) வடக்கு வாசலில் கல்வெட்டி நாட்டப்பட்டது. இந்தக்  கல்லுக்கு எவரேனும் ஒருவர் கேடு செய்தால் அவர் கங்கைக்கரையில் காராம் பசுவைக் கொன்ற குற்றத்தை பாவத்தை அடைவராக என்று முடிக்கப்பட்டுள்ளது.  மேல் சாதி கீழ் சாதி கலப்பை சமூகத்தில் அறவே ஒழிக்கும் முயற்சி இது என்பது புலனாகின்றது. இது சரியான நடவடிக்கை என்றால் இதை ஏன் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தடைசெய்ய வேண்டும்? ஏன் முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே தடை செய்யவில்லை? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது. அப்படியானால் புலையர், வண்ணார் போன்ற சாதிகள் 16 – 17 ஆம் நூற்றாண்டுகளிற் போல் இழிவாக, தாழ்வாக அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் எண்ணப் படவில்லை, நடத்தப்படவில்லை என்பதே காரணமாகலாம். காலத்தைச் சுற்றி வளைத்து சுருக்கியதில் தீண்டாமை 16 ஆம் நூற்றாண்டில் உருவாகி 17 ஆம் நூற்றாண்டில் வலுப்பெற்றது என்ற கருத்து தான் மேலெழுகின்றது. ஆனால் வெள்ளையர்கள் ஏதோ ஒரு மூலையில் கரையானுக்கு இரையாகிக் கொண்டிருந்த மனுதர்மத்தை அச்சில் எடுத்துப்போட்டு அது தான் இழிவுபடுத்தியது, தாழ்வுபடுத்தியது, ஒடுக்கியது என்று சொல்வதைக் கல்வெட்டுச் சான்றுகள் பொய்ப்பிக்கின்றன. ஒரு இடத்தில் நிகழ்ந்த சமூகக் கொடுமையை எல்லா இடங்களிலும் நிகழ்ந்ததாகக் காட்டுவது எத்தகு குற்றமோ அத்தகு குற்றம்தானே பிற்பட்ட நூற்றாண்டு சமூகக் கொடுமையை இன்னும் முற்றபட்ட நூற்றாண்டில் நடந்தேறியதாகக் காட்டித் திணிப்பதுவும், இதாவது 400 ஆண்டு கால நிகழ்ச்சியை 2,000 ஆண்டுகளாக இழித்து தாழ்த்தி ஒடுக்கப்பட்டதாகச் சொல்வதும்.

கல்வெட்டில் சேரநாட்டு பேச்சு வழக்குத் தமிழ் ஆங்காங்கே தலைப்படுகின்றது.

புலைப்பேடி மண்ணாப்பேடி பற்றி அறிய https://www.jeyamohan.in/20559#.XHtDP8Azbcc

பார்வை நூல் கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள், 2008 வெளியீடு, பக். 141-144. தமிழ்தாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை – 8.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க