-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 21 – தீவினையச்சம்

 

குறள் 201:

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு

கெட்டவங்க கெடுதல் செய்யுததுக்கு அஞ்ச மாட்டாங்க. நல்லவங்க கெடுதல் செய்யுததுக்கு பயந்து நடுங்குவாங்க.

குறள் 202:

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

கெட்ட செயல செய்யுததுனால கெடுதலே வெளையும் ங்கதால கெட்ட செயல நெருப்ப விட கொடும னு நெனைச்சி பயந்துக்கிடணும்.

குறள் 203:

அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்

கெடுதல் செஞ்சவங்களுக்கு அத பதிலுக்கு செஞ்சு பழிவாங்காம  இருக்குதது தான் அறிவுல எல்லாம் ஒசந்த அறிவுனு சொல்லுவாங்க.

குறள் 204:

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு

மறதி ல கூட பொறத்தியாருக்கு கெடுதல் செய்யாம இருக்கணும். அப்டி செய்தாம்னா அவனுக்கு கேடு உண்டாக்க அறக்கடவுள்  நெனைக்கும்.

குறள் 205:

இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றுப் பெயர்த்து

தன்னோட ஏழ்ம காரணமா ஒருத்தன் கெட்ட செயல செய்தாம்னா அவன் திரும்ப வறுமல கெடந்து சீரளியுவான்.

குறள் 206:

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

துன்பம் தன்னைய சுத்தி சுத்தி வந்து வருத்துதத விரும்பாதவன் மத்தவங்களுக்கு கெடுதல் செய்யாம இருந்துக்கிடணும். .

குறள் 207:

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்

எத்தாம் பெரிய பகை இருந்தாலும் தப்பிச்சிக்கிடலாம். மத்தவங்களுக்கு கெடுதல் செய்யுததனால வர பகை பொறத்தாலயே இருந்து தொந்தரவு செஞ்சுகிட்டே இருக்கும்.

குறள் 208:

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று

பொறத்தியாருக்கு கெடுதல் செஞ்சவன கேடு எப்டி அண்டும்னா, அவனோட நெழல் விடாம அவன் காலுக்கு கீழ தங்குதது போல.

குறள் 209:

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்

தன்னத் தானே விரும்புதவன் எத்தன சிறிசான கெட்ட செயலயும் செய்யாம விட்டுபோட்டு போயிடணும். .

குறள் 210:

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்

ஒருத்தன் தப்பான வழில மத்தவங்களுக்கு கெடுதல் செய்யாம வாழ்ந்தாம்னா அவன கேடு இல்லாதவன் னு அறிஞ்சிக்கிடலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *