அல்லாள இளைய நாயக்கர்
-M.B. திருநாவுக்கரசு
மன்னர்களில் பல வகையினர் உண்டு. மக்களை வதைத்து கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர்கள் சிலர் இருந்திருந்தாலும், மக்களின் நன்மைக்காக, அவர்களது நலன் காககும் திட்டங்களைச் செயல்படுத்தியவர்களும் உண்டு. மக்களுக்காகவே வாழ்ந்து, அவர்களுக்காகவே உயிர்நீத்த மன்னர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். கல்லணை கட்டிய கரிகாலச் சோழனை 2 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நாம் நினைவில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டம் பரமத்தியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த சிற்றரசரான அல்லாள இளைய நாயக்கர், அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் நலன் பேணும் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
விவசாயப் பயன்பாட்டுக்காக காவிரி ஆற்றின் அருகே அல்லாள இளைய நாயக்கரால் வெட்டப்பட்ட ராஜவாய்க்கால், இன்றும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதுடன், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது.
இந்த நிலையில், மன்னரின் சிறப்பைப் போற்றும் வகையில் அவருக்கு ஜேடர்பாளையத்தில் சிலை அமைக்க வேண்டுமென ராஜவாய்க்கால் பாசன விவசாயிகளும், பொதுமக்களும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
ராஜவாய்க்கால் வெட்டிய அல்லாள இளைய நாயக்கருக்கு, குவிமாடத்துடன் கூடிய உருவச் சிலை அமைப்படும் என கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பரமத்திவேலுார் அருகேயுள்ள இருக்கூரைச் சேர்ந்தவரும், அல்லாள இளைய நாயக்கர் வம்சாவளியைச் சேர்ந்தவருமான பி.சோமசுந்தரம் கூறும்போது, “கடந்த 1622 முதல் 1655-ம் ஆண்டு வரை அரைய நாடுகளில் ஒன்றான பரமத்தியை தலைமையிடமாகக் கொண்டு அல்லாள இளைய நாயக்கர் ஆட்சிபுரிந்தார் என கல்வெட்டுச் சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரமத்தியில் இருந்து திருச்சி கொடுமுடி வரை அல்லாள இளைய நாயக்கர் ஆட்சி செய்துள்ளார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டில், அதாவது 1623-ல் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் அருகே, விவசாயப் பயன்பாட்டுக்காக ராஜவாய்க்கால் வெட்டினார். இந்த வாய்க்கால் 24 அடி அகலமும், 33 கிலோமீட்டர் தொலைவும் கொண்டது.
இதன்மூலம் நேரடியாக 5,116 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றதாக சான்றுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட இந்த வாய்க்கால்தான், தற்போதும் சுற்றுவட்டார விளை நிலங்களுக்கு பாசன ஆதாரமாக உள்ளது.
இதேபோல, ஏராளமான கோயில் திருப்பணிகளையும் அல்லாள இளையநாயக்கர் மேற்கொண்டுள்ளார். இதற்கான செப்புப் பட்டயம், கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. ராஜவாய்க்கால் வெட்டிய அல்லாள இளைய நாயக்கரைப் பெருமைப்படுத்தும் வகையில், ரூ.30 லட்சம் மதிப்பில் ஜேடர்பாளையத்தில் குவிமாடத்துடன் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த ராஜவாய்க்காலைத் தொடர்ந்து, கொமாரபாளையம் வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால் மற்றும் மோகனுார் வாய்க்கால்கள் மக்களுக்கு பாசன வசதி அளிக்கின்றன” என்றார்.
ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயி ஓ.பி.குப்புதுரை கூறும்போது, “எவ்வித வசதிகளும் இல்லாத 1623-ம் ஆண்டில், மனித உழைப்பை மட்டுமே பயன்படுத்தி ராஜ வாய்க்கால் வெட்டியுள்ளார் அல்லாள இளைய நாயக்கர். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பெரிதும் பயனடைந்துள்ளனர். இவ்வாறு, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சிபுரிந்த அல்லாள இளைய நாயக்கருக்கு, தமிழக அரசு மணி மண்டபம் கட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது வரவேற்கத் தக்கது” என்றார்.
M.B.Thirunavukkarasu M.Sc(Geo).,
Research Scholar,
Centre for Water Resources,
Anna University Chennai,
Chennai -25
Mobile +91 9941527517