சூரியனை உட்கொள்ளும் பொழுது
-கவிஞர் பூராம்
அமுதஒளி தீண்டலில் பனியாய் நனைந்து
உயிாின் உள்ளறையில் குளிா்ந்து
ஆன்மகானம் கேட்டுக்கொண்டே இருக்கிறது
வெம்மையின் தழும்பளில் சருகாய் எரிந்து
பாறைப்பெண்ணின் பனிக்குட உடைப்பில்
ஊற்றாய் பெருகும் நூற்றாண்டுத்தவம்
உடலூற்றில் பொங்கி எழும்
அன்பெனும் ஆன்ம வெள்ளத்தில்
கடைகோடி விளிம்பில் அவளின் புன்னகை
வியர்வையின் வற்றாத நதியில் உழைப்பின்
உன்னதங்கள் நீர்க்குமிழியாய் சிலகணங்கள்
கடந்துசெல்ல எத்தனையோ இருந்தாலும்
இருந்து நினைக்க அவளின் முதல்பாா்வை!
உதிர்ந்து விழும் ஒவ்வொரு இலையும்
தெரியவில்லை வருந்துவதாக!
வெறித்தப் பாா்வையோடு வெட்டவெளியில்
சருகாக மறுக்கும் தருணங்கள்
இலையவளின் ஆரவார மகிழ்ச்சியில்
பறவைகளின் இளைப்பாறலில்
இந்தக் கோடையும் கடந்துசெல்லும் வெறுமையில்.