புலவர் இரா.முரளி கிருட்டினன்

புள்ளி என்று சொன்னவுடன்
உங்கள் நினைவில் வருவது
காற்புள்ளி,அரைப்புள்ளி,
முக்காற்புள்ளி,முற்றுப்புள்ளி,
– தமிழ் மாணவன்.

புள்ளி வைத்துக் கோலம் போடுவேன்
– குடும்பத்தலைவி.

புள்ளிகளை இணைத்து ஓவியம் வரையலாம்
– ஓவிய ஆசிரியர்.

வானத்து நட்சத்திரங்கள்
புள்ளிகளாகத் தெரிகின்றன.
– குழந்தை.

புள்ளி என்று சொன்னவுடன்
எத்தனை விளக்கம்.
புள்ளி என்பது என்ன?
புள்ளி என்பது வாழ்க்கை.

எந்தவொரு எழுத்தும்,
எந்த ஒரு எண்ணின் உருவமும்
முதல் புள்ளியின் தொடக்கத்திலேயே!

எண் கணிதத்தில்
பூஜ்ஜியம் என்பது கூட
புள்ளியிலிருந்து வரையப்பட்ட
வளைகோடுகள் தான்.

முடிந்து விட்டது என்று வைக்கும்
முற்றுப்புள்ளி கூட
அடுத்த வாக்கியத்தின் தொடக்கம் தான்.
எழுதுவதிலிருந்து,
சிலை செதுக்குவது வரை
எல்லாவற்றின் தொடக்கமும்
சிறு புள்ளியே.

எரிவாயு அடுப்பைப்
பற்றவைப்பது கூட
சிறுபுள்ளி நெருப்பு.

கண்பார்வை குறைந்தால்
எழுத்துக்கள் சிறுபுள்ளியாய்த் தான் தெரியும்.
உடலில் புள்ளிகள்
கோடைகால வியர்க்குருகள்.

என் மகள் எழுதிய முதல் எழுத்தே
சுவரில் வைத்த புள்ளியே.
புள்ளிதான் மனித வாழ்வின் அடிப்படை.

மனிதன்
பிறப்பிலிருந்து இறப்புவரை
எல்லாமே புள்ளிதான்.

புள்ளி வாழ்க்கைத் தத்துவம்.
பெண் நெற்றியில் – பொட்டு
தமிழில் புள்ளி – மெய்யெழுத்து
வாசலில் புள்ளி – மாவுக்கோலம்.
பால்காரன் கணக்கிலிருந்து
பரோட்டோ கணக்கு வரை
எல்லாமே புள்ளியிலிருந்து
வரையப்பட்ட கோடுதான்.

6 – 6 புள்ளிகளை இணையுங்கள்
அழகியகோலம் பிறக்கும்.
மாறுபட்ட மனங்களை இணையுங்கள்
வாழ்க்கை வசந்த காலமாக மாறும்.

புள்ளி,
புள்ளி தான் மனித வாழ்வின் தத்துவம்.
முற்றுப்புள்ளியோடு…

புலவர் இரா.முரளி கிருட்டினன்
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி
திருச்சிராப்பள்ளி-2
smrmurali@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *