நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-35

35. துறவு

குறள் 341:

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்

ஒருத்தன் எது எதுலேந்தெல்லாம் ஆசப் படாம வெலகுதானோ அந்தந்த பொருள் னால ஏற்படுத துன்பம் அவன அண்டாது.

குறள் 342:

வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல

துன்பம் அண்டாம வாழணும்னா எல்லாம் நம்ம கிட்ட இருக்குதப்பவே அது மேல இருக்க ஆசய உட்டுறணும். உட்டபொறவு நமக்கு இந்த ஒலகத்துல நெறய மகிழ்ச்சி கெடைக்கும்.

குறள் 343:

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு

நம்மளோட அஞ்சு புலனை (பாக்குதது, கேக்குதது, சுவைக்குதது, வாசம் பிடிக்குதது, தொடுத உணச்சி) அடக்கி அதுக ஆசப்படுத எல்லாத்தையும் சேந்தாப்ல விட்டுப்போடணும்,

குறள் 344:

இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து

துறவிங்களுக்கு எதுலயும் ஆச இருக்கக் கூடாது. ஏதாச்சும் மேல இருந்திச்சின்னா அது திரும்ப புத்திய கெடுத்துப் போடும்.

குறள் 345:

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை

இனிமே பொறக்கவே கூடாது னு நெனைக்க துறவிங்களுக்கு அவுக ஒடம்பே ஒரு சுமை தான். அதுக்கு மேலயும் வேற ஒட்டுஒறவு எதுக்கு?

குறள் 346:

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்

ஒடம்ப ‘நான்’ னும் சம்பந்தமில்லாத ‘பொருள’ எனது னும் நெனக்க அகராதிய ஒழிச்சவன் தேவர்கள விட ஒசந்த நெலய அடையுவான்.

குறள் 347:

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு

நான்,  என்னோடது ங்குத ஆசையில ஒட்டுதல் வச்சிக்கிட்டு விடாதவங்கள  துன்பமும் விடாம வந்து ஒட்டிக்கிடும்.

குறள் 348:

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்

அரைகொறயா இல்லாம ஆசய முழுக்க உட்டவங்க தான் ஒசந்த நெலய அடையுவாங்க. அப்டி செய்யாதவங்க அறியாம ங்குத வலைக்குள்ளார சிக்கிக்கிடுவாங்க.

குறள் 349:

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்

சந்தோசத்துலயும் துக்கத்துலயும் மனசு ஒட்டாம ஒண்ணுபோல வச்சிருந்தாத்தான் பிறவித்துன்பம் ஒழியும்.  இல்லன்னா இந்த ரெண்டும் மாறி மாறி வந்து ஒரு நெலையில இல்லாம சீரளிக்கும்.

குறள் 350:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

எதிலயும் ஒட்டு ஒறவு இல்லாம இருக்க கடவுள் மேல ஆச வைக்கணும். அவர் மேல ஆச வைக்குதது நம்மளோட எல்லா ஆசையயும் விட்டு ஒழிக்கத்தான்.

(அடுத்தாப்லயும் வரும்…..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.