நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-41

41. கல்லாமை

குறள் 401:

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்

நெறய புத்தியக் கொடுக்க நூல்களப் படிக்காதவன்  படிச்சவங்க சபையில பேசுதது கட்டம் வரையாம தாயக்கட்டம் ஆடுததுக்கு சமானம்.

குறள் 402:

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று

படிக்காதவன் ஒண்ணச் சொல்ல விரும்புதது முலை ரெண்டும் இல்லாதவ பெண் தன்மய விரும்புதது கணக்கா ஆவும் .

குறள் 403:

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்

படிச்சவங்க முன்ன ஒண்ணும் பேசாம அமைதியா இருந்தாம்னா  படிக்காதவங்களும் ரொம்ப நல்லவங்களாத்தான் நெனைக்கப்படுவாக.

குறள் 404:

கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்

படிக்காதவனுக்கு பொறப்பிலயே புத்தி இருந்தாலும் படிச்சவுக அவன ஒசந்தவன் னு  ஒப்புக்கிடமாட்டாங்க.

குறள் 405:

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்

படிக்காதவன் தன்னைய அறிவாளி னு காட்டிக்கிட படிச்சவங்க முன்ன நடிச்சாம்னா அவன் பேசும்போது அவனோட பொய்வேசம் கலஞ்சிபோயிரும்.

குறள் 406:

உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்

படிக்காதவங்க உசிரோடஇருக்காங்க னு சொல்லிக்கிடலாம் அம்புட்டுதான். அவங்க வெளச்சலுக்கு ஒதவாத களர்நிலம் கணக்காதான்.

குறள் 407:

நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
மண்மாண் புனைபாவை யற்று

பாக்குததுக்கு அழகா மட்டுமே இருந்து படிச்சு தெளிவான புத்தியப்  பெறாதவங்க கண்ணக் கவருத மண் பொம்ம கணக்காதான் மதிக்கப்படுவாங்க.

குறள் 408:

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு

படிக்காத முட்டாள் கிட்ட இருக்க சொத்து நல்லவங்க கிட்ட இருக்க வறுமய விட கூடுதலா கொடும செய்யும்.

குறள் 409:

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு

படிக்காதவர் மேல் சாதில பொறந்திருந்தாலும் கீழ் சாதில பொறந்திருந்தாலும் படிச்சவர் அளவுக்கு பெரும இல்லாதவரு தான்.

குறள் 410:

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்

மனுசங்களுக்கும் மிருகங்களுக்கும் என்ன வேத்துமையோ அதே தான் ஒசந்த நூல்கள படிச்சவங்களுக்கும் படிக்காதவங்களுக்கும் இருக்கு.

(அடுத்தாப்லயும் வரும்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *