இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (294)

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்.

தேர்தல் !

ஜனநாயகக் கோட்பாடுகளின் அடித்தளம் தேர்தல் என்றால் அது மிகையில்லை. ஆனால் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்ப்பது அத்தேர்தலின் நடைமுறைப்படுத்தலே. நான் ஈழத்தை விட்டுப் புலம் பெயர்ந்த போது எனக்கு வயது 18 இன்றோ 62 எனும் முதுமையின் வாசலில் நுழைந்து விட்டேன். நான் ஈழத்தில் அன்று பார்த்த தேர்தல்களுக்கும், இன்று இங்கிலாந்திலே பார்க்கும் தேர்தல்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. அன்றைய எனக்கு தேர்தல் என்பது ஒரு திருவிழா போன்ற உணர்வையே அளித்தது. அத்தேர்தல்களினால் ஏற்படப்போகும் மாற்றங்கள் எவ்வாறு எம்முடைய அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகிறது என்பதன் அர்த்தத்தைச் சரியாக உள்வாங்கியிருக்கவில்லை. ஈழத்தைப் பொறுத்தவரையில் தமிழர்கள் தேர்தல் என்பது அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு ஊடகமாகவே கருதினார்கள். தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முன்வைக்கும் தமிழ்க் கட்சிகள் தமிழர் பிரதேசங்களில் பெரும்பான்மை பலத்தை பெறுவது நடைமுறை வழக்கமாகவிருந்தது.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுமையான அர்த்தத்தை உள்வாங்கும் அளவிற்கு பரந்த அளவிலான நோக்கத்தை அப்போது நான் கொண்டிருக்கவில்லை என்பதோடு அரசியல்வாதிகளின் பொதுவான கோஷம் தமிழர்களின் மறுக்கப்படும் உரிமைகளைப் பற்றியதாகவே இருந்தது என்பதுவே உண்மை. நான் புலம் பெயரும் போது வாக்களிக்கும் வயதினை அடையாததினால் ஈழத்தில் எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை. தேர்தல்களின் உண்மையான தாக்கத்தைப் புரிந்து கொண்டது நான் புலம்பெயர்ந்து வாழ்ந்த இங்கிலாந்து தேசத்திலே தான். 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் நாள் நான் இங்கிலாந்தில் கால் பதித்தேன். அந்த ஆண்டே இங்கிலாந்தில் ஒரு தேர்தல் வந்தது. அத்தோடு ஒரு சர்வஜன வாக்கெடுப்பும் வந்தது. இங்கிலாந்தில் அப்போதுதான் புதிதாக வந்ததாலும், இங்கிலாந்தின் குளிர்காலச் சூழலுடன் சதிராடுவதோடு கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்தியதாலும் அன்று அந்தத் தேர்தலிலும், சர்வஜன வாக்கெடுப்பிலும் நான் அதிக கவனம் செலுத்தவில்லை. என்னுடைய நாட்டுத் தேர்தலையும் இங்கிலாந்தின் தேர்தலையும் ஒப்பிடக்கூடிய மனநிலையையும், அரசியல் அறிவையும் பெற்றிருக்கவில்லை. அன்றைய சூழலில் மேற்படிப்பை முடித்துக் கொண்டு ஈழம் திரும்புவதே என் நோக்கமாக இருந்ததால் இங்கிலாந்தை இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? எனும் ஒரு மனப்பான்மை என்னை வியாபித்திருந்ததோ என்று இன்று என்னை எண்ணத் தூண்டுகிறது..

இன்று இங்கிலாந்தில் 44 வருட வாழ்க்கையை முடித்து 45வது வருடத்தில் கால் பாதித்திருக்கும் எனக்கு எத்தனையோ தேர்தல்களை இங்கிலாந்தில் சந்தித்த அனுபவம் உண்டு. பல பிரதமர்களையும், பல கட்சிகள் அரசியல்பீடம் ஏறியதைப் பார்த்த அனுபவங்களும் உண்டு. பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியத்தை ஆண்ட தலைவர்களையும், ராஜ்ஜியத்திலிருந்து பூஜ்ஜியமான தலைவர்களையும் பார்த்த அனுபவம் உண்டு. இந்த நிலையிலே இங்கிலாந்தின் தேர்தலோடு எமது பின்புலங்களில் நடைபெறும் தேர்தலை குறிப்பாக இந்திய மண்ணில் தற்போது நிகழும் பொதுத்தேர்தலையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்கத் தலைப்படுகிறேன். எனது மனைவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும் தமிழ் மீதும் அதன் தாயகமான தமிழகத்தின் மீதும் அன்பும், மதிப்பும் கொண்டுள்ளதாலும் இந்திய நாட்டிற்கு ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்வதை வழமையாகக் கொண்டிருப்பதால் அங்கு அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால் ஒரு மூன்றாவது கண்கொண்டு இதைப் பார்க்க விழைகிறேன்.

இங்கிலாந்தினைப் பொறுத்தவரையில் தேர்தலில் பல வருடங்களாக இரண்டு கட்சிகளே முன்னனியில் இருக்கின்றன. கன்சர்வேடிவ் கட்சி எனும் வலதுசாரக் கொள்கை கொண்ட கட்சியும், லேபர் கட்சி என்று சொல்லப்படும் ஸோசலிசக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இடதுசாரக் கட்சியுமே அவையாகும். அதைத் தவிர இரண்டுக்கும் இடைப்பட்ட கொள்கையுடைய லிபரல் டெமகிரட்ஸ், தேசியவாதக் கொள்கை கொண்ட தீவிர வலதுசாரக் கட்சியான யூகிப், மற்றும் மிகவும் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிரெக்ஸிட் எனும் கட்சி என்பனவும் சில உதிரிக் கட்சிகளும் இயங்குகின்றன. இங்கிலாந்து அரசின் ஆயுட்காலம் ஜந்து வருடங்களாகும். ஆனால் 2010ம் ஆண்டு வரையும் பெரும்பான்மையான சமயங்களில் அரசை நான்கரை ஆண்டுகளிலிருந்து ஜந்து ஆண்டுகளுக்குள் கலைப்பது வழமையாக இருந்தது. ஆனால் 2010ம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியின் பெரும்பான்மை மிகவும் குறைவாக இருந்தமையால் முதன்முறையாக லிபரல் டெமகிரட்ஸ் கட்சியுடன் கூட்டரசாங்கம் அமைத்துக் கொண்டார்கள். அக்கூட்டரசாங்கத்தில் இயற்றப்பட்ட முதல் சட்டங்களில் ஒன்றாக பாராளுமன்றம் பாராளுமன்ற அங்கத்தினர்களின் பெரும்பான்மை இல்லாமல் ஜந்து ஆண்டுகளுக்கு முன்பாக கலைக்கப்பட முடியாது எனும் சட்டத்தை நிறைவேற்றினார்கள்.

இந்திய நாட்டை எடுத்துக் கொண்டால் அங்கும் பாராளுமன்றத் தேர்தல்கள் ஜந்து வருடங்களுக்கொருமுறையே நடைபெறுகிறது. இந்தியாவைப் பற்றிய உலகளாவிய கண்ணோட்டம் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் இந்தியா என்பதுவே. ஆனால் இந்திய நாட்டில் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம். முக்கியமான கட்சிகள் சிலவாகவே இருந்தாலும் இந்திய தேர்தல்களைப் பொறுத்தவரையில் அதிக அளவில் கூட்டரசாங்கம் அமைப்பதுவே இடம்பெறுகிறது. ஆச்சரியத்துக்கும், கேள்விக்குரியதுமான விடயம் என்னவெனில் கொள்கையளவில் முற்றுமுழுதாக வேறுபட்டிருக்கும் கட்சிகள் தேர்தல் சமயங்களில் கூட்டணி அமைத்துக் கொள்வதுதான். ஏறத்தாழ அடிப்படைக் கொள்கையில் ஒன்றுபட்ட கட்சிகள் இணைவது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே. ஆனால் ஒன்றுக்கொன்று முரணான கட்சிகள் இணைவதில் பல கேள்விகள் மனதில் எழுவது இயற்கையே !

இங்கிலாந்து, இந்தியத் தேர்தல்களை சிறிது ஒப்பு நோக்குவோம். இரண்டு நாடுகளிலேயும் ஜனநாயக ஆட்சி எனும் பொறிமுறையே கையாளப்படுகிறது. தேர்தல்களில் யார் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் பொதுவாக “first past the post” என்பார்கள். பலநாடுகளில் விகிதாசார வாக்கெடுப்புத் தேர்தல்களே நடைபெறுக்கிறது ஒவ்வொரு கட்சியும் தமது கட்சிக்கான வேட்பாளர்களைத் தொகுதி வாரியாக அறிவித்தாலும் வாக்கு அந்நபர்களுக்கு அல்லாமல் கட்சிக்கே போடப்படுகிறது. அதன் பின்னால் ஒவ்வொரு கட்சிக்கும் விழுந்த வாக்குகளின் எண்ணிக்கையில் அக்கட்சிக்கு இத்தனை உறுப்பினர்கள் என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் எமது இருநாடுகளிலும் வாக்குகள் தேர்தலில் போட்டியிடும் கட்சியோடு போட்டியிடும் வேட்பாளர்களையும் கருத்திற்கொண்டு வாக்களிக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் கட்சிகளின் கொள்கைப் பிரகடனங்கள் தேர்தலின் முன்னால் அக்கட்சிகளின் மாநாடுகளில் தீர்மானிக்கப்பட்டு மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அத்தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலும் அக்கட்சியின் கடந்தகால செயற்பாடுகளின் அடிப்படையிலும் மக்கள் தாம் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்கிறார்கள். இங்கிலாந்தின் தேர்தல் முடிவுகளின் தீர்மானத்தில் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் முன்னிலை படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சாதாரண வாக்காளரும் மிகவும் உன்னிப்பாக அப்போது பதவியிலிருக்கும் அரசால் தமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி அதன் அடிப்படையில் தம் வாக்களிப்பைத் தீர்மானிக்கிறார்கள்.

அதேநேரம் இந்தியத் தேர்தலும் பெயரளவில் ஜனநாயகக் கோட்பாடுகளில் நடைபெற்றாலும் அத்தேர்தல் சமயங்களில் நாம் கேள்வியுறும் செய்திகளின் அடிப்படியில் தேர்தல் முடிவுகளின் தீர்மானம் எந்தக் கட்சிக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறதோ அதன் வழி என்பது போலத் தோன்றுகிறது. தேர்தல் சமயங்களில் ஒவ்வொரு கட்சியினது தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும் எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா இல்லையா எனும் கேள்வி வாக்களர்களிடையே அலசப்படுக்கிறதா என்பதும் குழப்பமாகவே இருக்கிறது..

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் தேர்தல் பிரசாரங்கள் ஓரளவு அரசியல் நாகரீகத்துடனேயே நடைபெறுகிறது. பெரும்பான்மையாக தனிமனித தாக்குதல்கள் தவிர்க்கப்படுகிறது. இரண்டு கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான விவாதம் நாகரீகமான முறையிலேயே பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் நடைபெறுகிறது. ஆங்காங்கே சில சமயங்களில் விதிவிலக்குகள் இடம்பெறுவதுண்டு. ஆனால் அவை உடனடியாக பிரபல்யப்படுத்தப்பட்ட அதில் சம்பந்தப்பட்டவர்களின் மீதான விமர்சனம் சரியான முறையில் ஊடகங்களில் ஆராயப்படுகிறது. ஊடகங்களின் பொதுவான அடிப்படை ஆதரவு வெவ்வேறு கட்சிகளை நோக்கி இருந்தாலும் கூட அவைகளின் செய்திகள் நடுநிலைமை வாய்ந்ததாகவே இருக்கும். குறிப்பாக செய்திகள் வெளியிடப்படும் போது அது ஒருபக்கச் சார்பாக அமைவது குறைவு.

இந்தியத் தேர்தல் பிரசாரங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த அரசியல் நாகரீகம் பேணப்படுவது அரிது. இது எமது கலாச்சாரத்தின் விளைவா? அன்றி அரசியல்வாதிகளின் உணர்வினைக் கட்டுப்படுத்தத் தவறும் இயல்பா? என்பது கேள்விக்குறியே! அத்தோடு ஊடகங்கள் அப்பட்டமாக ஒருபக்கச் சார்பாக செய்திகளை வெளியிடுவதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ஊடகங்களில் நடுநிலைமை வகிப்பன மிகவும் சொற்பமாகத்தான் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தமக்குச் சார்பான ஊடகங்கள் மூலம் மக்கள் மீது திணிக்கும் பிரச்சாரச் செய்திகள் மக்களைத் திக்குமுக்காடச் செய்க்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. சில தொலைக்காட்சி விவாதங்களை கண்ணுற்ற வேளை அவ்வூடக நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் சரியான கொள்கைரீதியிலான கேள்விகளை முன்வைத்தாலும் அவற்றிற்கு பதிலளிக்கும் அரசியல்வாதிகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தம்மையறியாமலே சிலசமயங்களில் தனிமனித தாக்குதல்களில் இறங்கி விடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இங்கிலாந்து தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்சியும் தமது தேர்தல் பிரசாரங்களுக்காக செலவளிக்கும் பணத்துக்கு இவ்வரம்பினை மீறும் கட்சிகளின் மீதும், அதனுடன் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. ஒரு வரம்பு நிர்ணயித்திருக்கிறது. இதன் உதாரணமாக கடந்த 2017 பொதுத்தேர்தலின் போது ஒரு தொகுதியில் இவ்வரம்பு மீறப்பட்டதாக குற்றம் சாட்டி அதற்கான வழக்குத் தொடரப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது. அத்தோடு 2016ம் ஆண்டு நடைபெற்ற ஜரோப்பிய ஒன்றியத்தில் நிலைபெறுவதா? இல்லையா? எனும் சர்வஜன வாக்கெடுப்பில் வெளியேற வேண்டும் எனும் அணி தமது பிரசாரங்களுக்காக அனுமதிக்கப்பட தொகையை மீறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்து அதையோட்டி சர்ச்சைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

நடந்து முடிந்த இந்திய பொதுத் தேர்தலின் போது பணம் சம்பந்தமான பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. ஒரு சில தொகுதிகளில் தேர்தல் கூட இரத்துச் செய்யப்பட்டுள்ளதைக் கேள்வியுறுகிறோம். சரி இங்கிலாந்திலும் இப்படியான சம்பவம் நடந்துள்ளதாக மேலே குறிப்பிட்டுள்ளாயே என்ன வித்தியாசம் ? எனும் கேள்வி எழலாம். இங்கிலாந்தில் இத்தகைய சம்பவங்களின் செய்தி மக்களுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணுமளவுக்கு மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. ஆனால் இந்தியாவில்? கேள்விக்குறியாகவே உள்ளது.

ஒரு ஜனநாயக ஆட்சியில் தேர்தலின் முக்கியத்துவம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே! மக்களின் பிரதிநிதிகளாக மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களுக்காக நாட்டினைச் சரியான பாதையில் செலுத்தும் முக்கிய நோக்கத்திற்காகவே இந்தத் தேர்தல். மக்களின் சேவகர்கள் என மக்களால் நியமிக்கப்பட்டவர்கள் சில சமயங்களில் அம்மக்களால் புரிந்து கொள்ள முடியாத சில விடயங்களில் அம்மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணான வகையில் நடந்து கொள்ளும் தேவையேற்படுக்கிறது. அதுகூட ஜனநாயகத்தின் ஒரு அங்கமே! அப்படி நடந்து கொள்ளும் போது அதற்கு சரியான விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டியது அவர்களது கடமை.

கட்சித் தாவல் என்பது இரண்டு நாடுகளிலேயும் நிகழத்தான் செய்கிறதி. ஆனால் இங்கிலாந்தில் அதன் எண்ணிக்கை குறைவு. அப்படிக் கட்சி தாவும் போது அவர்கள் மக்கள் தம்மைத் தெரிவு செய்தது தமது மீதான மதிப்பினாலா? அல்லது தாம் அங்கம் வகித்த கட்சிக்காவா? என்பதை நிரூபிக்க வேண்டியது அவசியம். என்னைப் பொறுத்தவரை அரசியல் தர்மம் என்பது அவர்கள் அப்பதவியை இராஜினாமாச் செய்து மீண்டும் தேர்தலில் நிற்பது என்பதே. அப்படி மீண்டும் தேர்தலில் நிற்கும் போது அவர்கள் தமது செய்கைக்கான விளக்கத்தை மக்களுக்கு கொடுக்கக்கூடிய சந்தர்ப்பத்தைப் பெறுகிறார்கள்.

இம்மடலின் நோக்கம் இரண்டு நாடுகளைக் குறிப்பிட்டு ஒன்றினை விட மற்றொன்று குறைந்தது என்று சுட்டிக்காட்டுவதல்ல. ஈழத்திலிருந்து 45 வருடங்களுக்கு முன்னே புலம்பெயர்ந்த என் முன்னே விரிந்த அரசியல் உலகம் இங்கிலாந்திலேயே நிகழ்ந்தது. இங்கிலாந்தை அடுத்து நான் அதிகமாக பயணிப்பது இந்தியா அதுவும் குறிப்பாக தமிழகமே ! அதனால் இந்திய குறிப்பாக தமிழகத் தேர்தல்களை உன்னிப்பாகக் கவனிப்பது அதைப்பற்றிய செய்திகளை அறிந்து கொள்வது என்னுடைய ஆர்வம். அதன் அடிப்படையில் இரண்டு தேர்தல்களையும் சிறிது ஒப்பீடு செய்து பார்க்க எண்ணினேன். இது ஒரு ஆராய்ச்சியாளனின் கட்டுரையல்ல ஒரு சாமானிய புலம்பெயர் தமிழனின் பார்வையில் ஒரு கோணத்தில் எழுந்த கருத்துக்களே.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க