-திருச்சி புலவர் இராமமூர்த்தி

தில்லையம்பலத்தில் மெய்யுணர்வுக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், அந்நகரில் அம்பலவனை வழிபட்டார். பின்னர், அங்கிருந்து கொள்ளிட ஆற்றினைக் கடந்து ‘’திருவாரூரில் எம்மைக் காண வருக’’ என்ற இறைவன் அருள்வாக்கினைச் சிந்தித்தவாறே திருவாரூர் எல்லைக்குச்சென்றார். திருவாரூர், திருக்கழுமலம் முதலான பன்னிரு பெயர்களை உடைய திருத்தலம் ஆகும். வந்தடைவோரின் மும்மலங்களையும் கழுவிக் களையும் தலம் ஆதலால் அப்பெயர்வந்தது. அங்கே திருஞான சம்பந்தப் பிள்ளையார் அவதாரம் செய்தருளினார். அவர் உமையம்மையின் திருமுலைப்பாலை அழுது பெற்றமையால் ‘பிள்ளையார்’ என்றுசிறப்பிக்கப்பெற்றார். இறைவனை அடையும் மார்க்கங்களாகிய சன்மார்க்கம் , தாசமார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம் என்ற நான்கனுள் ‘சற்புத்திர மார்க்கத்தை’ உடையவராய் மகன்மை நெறியில் இறையருளை இயல்பாகப் பெற்றவர் திருஞான சம்பந்தர் ஆவார் . அதனாலும் அவர் பிள்ளையார் என்று அழைக்கப்பெற்றார்

சைவநெறியில் ஞானகுருவாக வழிகாட்டிய திருஞான சம்பந்தர் அவதரித்த திருத்தலம் ஆதலால் , இத்தலத்தின் புறத்தே நின்ற சுந்தரர், அத்திருவாரூரின் பெயர்களை சிந்தித்து , ‘’பிள்ளையார் திரு அவதாரம் செய்த ‘பெரும்புகலி’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற திருவாரூரின் உள்ளே காலை வைத்து மிதிக்க மாட்டேன்’’ என்று தம் சிறுமையையும், பிள்ளையாரின் பெருமையையும் எண்ணி , ஊருக்குள் புகாமல் எல்லையில் நின்று வலம் வந்தார்.

முன்பு சூரபன்மன் ஆளுகையால், அஞ்சி இந்திரன் செய்த நந்தவனத்தைப் புகலிடமாகக் கொண்டு இந்திராணி முதலானோர் வாழ்ந்த ஊர், திருப்புகலி என்னும் திருவாரூராகும். அதுமட்டும் அல்ல, உலகின்மற்ற இடங்களை விடவும் பெரிய புகலிடம் ஆதலால் பெரும்புகலி எனப்பெற்றது. ஆதலால்,

‘’பிள்ளையார் திருஅவதா ரம்செய்த பெரும்புகலி
உள்ளும் நான் மிதியேன்’’ என்று ஊர் எல்லைப் புறம் வணங்கி’’

என்றுசேக்கிழார் பாடினார். பொதுவாக சிறந்த சான்றோர் தொடர்புடைய திருத்தலங்களின் எல்லையில் நின்று , உட்புகாமல் வணங்கிய பெருமக்கள் உள்ளனர். திருஞான சம்பந்தர் பாடிய திருவையாற்றுள் அப்பரடிகள் மிதியாமையும், காரைக்காலம்மையார் இறைவன்ஆட , தாம் அதனைக் கண்டு மகிழ்ந்த ‘’ திருவாலங்காட்டுள், திருஞானசம்பந்தரும் , சுந்தரரும் மிதியாமல் ஊரின் எல்லையில் , புறத்தே நின்று வழிபட்டதும் இங்கே நினைக்கப் படுவதாகும் . ஆதலால் சுந்தரரும் ‘’ஊர் எல்லைப் புறம் வணங்கி’’ச் சென்றார், என்று சேக்கிழார் பாடுகிறார் . அவ்வாறு அந்த திருத்தலத்தை வலமாக வந்து வழிபட்டார். அப்போது தம் இடப்பாகத்தில் உறையும் மங்கையாகிய பார்வதி யுடன், அழகிய இடப வாகனத்தில் அமர்ந்தருளும் சிவபிரான், மங்கைபாகராகக் காட்சிகொடுத்தார் .

மங்கை இடங்கொள்ளு மால்விடையான் – என்றது நம்பிகளுக்குக் காட்டிய எதிர்காட்சியின் திருக்கோலத்தை யாகும் இவரே திருத்தோணியிலே பெரிய நாயகியாருடன் வீற்றிருக்கும் அம்மையப்பராம். திருஞானசம்பந்த சுவாமியினிடத்து வைத்த அன்பினாலே தலத்துட்புகாது நம்பிகள் வெளி நின்றாராதலின் அவரை ஆட்கொண்ட திருக்கோலமாகிய ‘’தோடுடைய செவியனாய் விடையேறி’’ நம்பிகளுக்கு எதிரே வந்து காட்சியருளினார் என்பது குறிப்பு. இதனால் சுந்தரர் முன்பு கைலையிலே கண்ட அம்மையப்பர் திருக்கோலத்தை பதிகமாகப்பாடினார். இனிஇப்பாடல் முழுவதையும் கற்றுணர்வோம்

‘’பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி
உள்ளு நான் மிதியேன் என்றூர் எல்லைப் புறம் வணங்கி
வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கை இடங்
கொள்ளுமால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள.’’

என்பது பாடல். இத்திருவாரூர் தன்னை அடைந்த மானிடரின் மும்மலங்களையும் நீக்கிக் கழுவும் தகுதி படைத்தது. ஆனால், பிள்ளையார் அவதரித்த இத்தலத்தின் உள்ளே சென்று தம் மலங்களைக் கழுவிக்கொள்ள மாட்டேன், என்று சுந்தரர் ஊர் எல்லையில் நின்ற எளிமை புலப்படுகிறது.

எல்லைக்குள்ளேயும் அடி வைக்கமாட்டேன்.என்றார் சுந்தரர். தன்னுட் புகலுற்றாரைக் காக்குந் தன்மையுடையது இப்புகலியேயாயினும், அப்பேறு பெறாவிடினும் விடுக – பிள்ளையார் அவதரித்த தலத்தைமிதியேன் என்று துணிந்து நின்றமை நம்பிகள் பிள்ளையாரிடத்தே வைத்த பேரன்பின் உறைப்பினை விளக்குகின்றது.

சுந்தரர் ஊருக்குள் வந்து தம்மை தரிசனம் செய்து மகிழும் முன்னர், சிவபிரான் தாமே எதிர்காட்சி நல்கிய திருவருட் சிறப்பையும் இப்பாடல் காட்டுகிறது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க