நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-55
நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-55
55. செங்கோன்மை
குறள் 541:
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
தப்புதண்டா இன்னதுன்னு தெரிஞ்சிக்கிட்டு எந்தப்பக்கமும் சாயாம நடுவுநிலைமை தவறாம வழங்கப்படுதது தான் நீதி.
குறள் 542:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி
ஒலகத்துலஇருக்க உசிருங்கல்லாம் மழைய நம்பி வாழுதுங்க. அதுகணக்கா மக்களெல்லாம் ராசாவோட நல்லாட்சிய எதிர்பாத்தே வாழுதாங்க.
குறள் 543:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
நேர்மையான ஆட்சி தான் அறிவ வளத்துக்க ஒதவுத ஞான நூல்களுக்கும், அறத்துக்கும் அடிப்படையா இருக்கு.
குறள் 544:
குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
நாட்டு மக்கள அரவணைச்சு ஆட்சி நடத்துத நல்ல ராசாவோட அடிகளைச் சுத்தியே மக்கள் வாழுவாங்க.
குறள் 545:
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு
நீதி வழுவாம ஆட்சி செய்யுத ராசாவோட நாட்டுல பருவத்துக்கு பெய்யுத மழையும் நல்ல வெளச்சலும் எப்பமும் சேந்தே இருக்கும்.
குறள் 546:
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்
ஒரு ராசா செயிக்கதுக்கு தேவ பகையாளிய அழிக்கஒதவுத வேல் இல்ல. அவனோட நேர்மையான ஆட்சி அதுவும் தப்பான மொறைல நடத்துத ஆட்சியா இல்லாம இருக்கணும்.
குறள் 547:
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்
ஒலகத்தையெல்லாம் ராசா காப்பாத்துவார். அந்த ராசாவ அவர் செய்யுத நேர்மையான ஆட்சி காப்பாத்தும்.
குறள் 548:
எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்
நியாயம் கேட்டு வருதவங்க எளிமையா வந்து பாக்குத மாதிரி இல்லாமயும், நல்ல மொறைல சோதிச்சுப் பாத்து நியாயமா தீர்ப்பு சொல்லாதவனாவும் இருக்க ராசா தாழ்ந்து போயி தானே கெட்டழிஞ்சு போவான்.
குறள் 549:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்
மத்தவங்க தொந்தரவுலேந்து மக்களக் காப்பாத்தி, தன்னையும் காத்துக்கிட்டு அவங்களோட குத்தங்கொறைகள தீத்து வச்சு ஆட்சி நடத்துதது ராசாக்கு குறை ஆவாது. அது அவரோட தொழில்.
குறள் 550:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
கொடியவங்களுக்கு மரணதண்டன கொடுக்குதது, வெவசாயி பயிர் நல்லா வெளையணும்னு அதக் காப்பாத்த கள புடுங்குதது கணக்கா தான்
(அடுத்தாப்லயும் வரும்…).