-மேகலா இராமமூர்த்தி

பார்வையாளரை ஆர்வத்தோடு உற்றுநோக்கும் இந்த அழகிய ஓணானைத் தன் படப்பெட்டிக்குள் பத்திரப்படுத்தி வந்தவர் ராமலக்ஷ்மி. இந்தப் படத்தை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 216க்கு அளித்தவர் சாந்தி மாரியப்பன். மங்கையர் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த கைகூப்பு!

இன்று நாம் ஓணான் என்று குறிப்பிடுவதை அன்று ’ஓந்தி’ என்று குறித்திருக்கின்றனர் நம் மக்கள். பின்வரும் குறுந்தொகைப் பாடலில் அது இடைக்குறையாக ’ஓதி’ என்று வந்திருப்பதைக் காணலாம்.

”வேதின வெரிநின் ஓதி முதுபோத்து
  ஆறுசெல் மாக்கள் புள்கொள பொருந்தும்… “ (குறுந் 140:1-2)

கருக்கரிவாளைப் போன்ற முதுகைக் கொண்ட ஆண் ஓந்தியை (ஓணான்) காண்பதை ஒரு சகுனமாக (நிமித்தம்) நினைத்திருந்தார்கள் அன்றைய வழிப்போக்கர்கள் என்பதை இப்பாடல்வழி அறிகிறோம். ஓந்தி வலப்புறம் தென்பட்டால் வழிப்பயணம் நன்றாகும் என்ற மக்கள் நம்பிக்கையை ’அறப்பளீசுர சதகம்’ என்ற நூல் அறியத்தருகின்றது.

இனி, ஓணான்மீது பண்பாட நம் பாவலர்களை அன்போடு அழைக்கிறேன்.

*****

”வேலிக்கு ஓணான் சாட்சியா?” என்று மானுடம் தன்மீது மகத்தான பழி சுமத்தியதுகண்டு வருந்திய ஓணான் ஒன்று, அந்தச் சொலவடையின் உண்மைப்பொருளை உலகறிய உரைப்பதனைச் சுவையான பாடலாக்கியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

ஓணானின் மனக்குறை..

வேலிக்கு ஓணான் சாட்சியாவென்று..
வேலையற்ற வீணர் சொல்லக்கேட்டு..
ஓட்டமாய் ஓடி வந்தேன்..
ஓருண்மை உரைக்க வந்தேன்..!!

நில அளவை இல்லாத ஓர் காலம்..
நிலவுலகில் வாய்மையே வாழ்ந்த காலம்..
அருகருகே அமைந்த நிலங்கள்..
அதனதன் உரிமையாளர் தம்முள்..
இருந்தது தீராத வழக்கொன்று..
இடம்பெயர்த்து நட்டான் கல்லையென்று..

இவ்வழக்கு வந்தது வழக்காடு மன்றத்திற்கு..
இசைந்தான் தலைவன் இறுதியாயொரு தீர்ப்புரைக்க..
சாட்சியெனப் பொய்யுரைக்க வந்தான் ஒருவன்..
சற்றே சொல்லிடு கல்நட்டது நீயாவென்று..
உரக்கக்கேட்டான் தலைவன்.. உளறினான் பொய்யன்..
உண்மையில் நானில்லை.. உண்மையில் நானில்லை..

வேலிக்கு ஊன்றான் சாட்சி செல்லாது..
வெளியேறு உடனே அவன் நிலத்தைவிட்டு..
உத்தமன் இவனே.. தீர்ப்பளித்தான் தலைவன்..
ஊன்றானை ஓணானாக்கியது உள்ளபடியே சரிதானா..?
உணர்ந்திடுவீர் உண்மைப்பொருள்.. தவிர்த்திடுவீர் உளறல்களை..

குறிப்பு:- ஊன்றான் – ஊன்றாதவன்(எல்லைக் கல்லை)
பேச்சு வழக்கில் மருவி ஊனான் ஆகிப் பின்னர் ஓணான் ஆனது.

*****

”வேலிகளெல்லாம் மதிலாகிப் போய்விட்டபடியால் இனி ஓணான்கள் தேவையில்லை பொய்சாட்சி சொல்வதற்கு! மனிதர்களே போதும் அத்திருப்பணிக்கு!” என்று வெகுண்டுரைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

மனிதனே…

வேலி யெல்லாம் மதிலாகி
வேற்றுமை மனிதரில் நிலைத்ததாலே
காலி பண்ணின ஓணான்கள்
காட்டுப் பக்கம் நோக்கியேதான்,
வேலி யதற்குச் சாட்சிசொல்ல
வேண்டாம் இனிமேல் ஓணானே,
நாலும் தெரிந்ததாய் மனிதர்களே
நன்றாய்ச் சொல்கிறார் பொய்ச்சாட்சியே…!

ஓணானை வைத்துச் சில உண்மைகளை விண்டுரைத்திருக்கும் நற்கவிகளுக்கு நவில்கிறேன் பாராட்டு!

அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

பதின் பருவப் பள்ளியாய்ப் போன
முள் மரங்களின் குத்தகைதாரர் நீ
ஆடுகளின் ஓய்விடங்கள்
கவட்டையோடு உன்னை அடிக்க
அலைந்து திரிந்த நிலங்கள் பலவிதம்!

தலை தூக்கிச் சூரியனோடு நீ பேசும்
உரையாடல் கேட்கக் காத்திருந்த மணித்துளிகள் பல!
எதற்குத் தலையாட்டுகிறாய் என்று
என்னைத் தவிர யாருமில்லா நண்பகலில்
சிந்தித்துக் கொண்ட காலங்கள் அநேகம்!

என் கவட்டைக் கல்லுக்கு இரையான உனது
உறவினர்கள் கனவுகளில் புரியாத மொழியில்
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்!

நீ வாழ்ந்த இடமெல்லாம் வீடுகளாய்
உன்னைப் பார்த்து ஆண்டுகள் பல…
எங்களைப் போல வாழ்வாதாரம் தேடி
எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பாய் என்ற
நம்பிக்கையில் உனது நினைவுகளோடு பூமியில்
உனக்குப் பின் பிறந்த ஒரு விலங்கு!

ஓணான்களுடனான தன் கடந்தகால உறவை, கவட்டைக் கல்லால் அவற்றை அடித்துக் கொன்றதால் வரும் தீக்கனவுகளை, விலங்குகளினும் கீழ்ப்பட்ட விலங்காய் மனிதன் மாறிவிட்ட அவலத்தை நேர்த்தியாய்த் தன் கவிதையில் வார்த்திருக்கும் முனைவர் ம. இராமச்சந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகிறேன்.

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.