நாயும் நானும்!
குருநாதன் ரமணி
(முச்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து)
என்கரச் சங்கிலி பற்றிநான் – தினம்
. என்நாய் முன்செலத் திரிவேன்
தன்புலன் கூர்மையாய்ப் பெற்றநாய் – அது
. தாள்விரை யக்கரம் நெரிவேன். … 1
என்னைத் தரதர வென்றிழுக்கும் – பல
. வெண்ணம் மேலெழ மூச்சிரைக்கும்
என்மன நாயிது பாய்ந்தோடும் – அதில்
. என்நிலை தேராய்ச் சாய்ந்தாடும்! … 2
இங்கது நின்றுமண் நுகரும் – பின்
. எதுவோ புதர்மேல் நீரிழிக்கும்
அங்கது நின்றுமண் முகரும் – கால்
. அகற்றியே கர்மக் கூர்கழிக்கும்! … 3
இங்கொரு வீட்டுநாய் கண்டால் – பல்
. இளித்துத் தன்வால் குழைக்கும்
மங்கிய தெருநாய் நின்றால் – தன்
. வாயால் குரைத்ததைத் துரத்தும்! … 4
தலைமேல் பட்டாம் பூச்சியை – அது
. தாவிப் பிடிக்கப் பார்ப்பதேன்
நிலைகொள் ளாமனப் பேச்சினில் – அதை
. நெருக்கியே நசுக்கப் பார்ப்பதோ? … 5
சுற்றிச் சுற்றியே ஓடுமே – வாய்
. தொட்டுத் தொட்டுத் தேடுமே
பற்றிப் பற்றிக் காணுமே – ஒரு
. பல்லால் இழுத்துக் கோணுமே! … 6
நாயை ஓர்மனப் படுத்தவே – தொலை
. நானோர் பந்தை எறிவனே
பேயைப் போல்கால் விடுப்பிலே – வாய்
. பெற்றே என்னிடம் சொரியுமே! … 7
அரணாய் வரனாய் வருநாய் – ஓர்
. அகநாய்த் திறனாய் உருநாய்
முரணாய்ச் செலுநாய் மொழிநாய் – நான்
. உளநாள் பலனாய்க் கடனாய்! … 8
நாயில் லாமல் நானில்லை – அது
. ஞானம் தேடும் நாளென்றோ? – இந்
நோயில் லாமல் நானில்லை – உயிர்
. நோவலென் றாலுமென் சேயன்றோ? … 9
*****