செண்பக ஜெகதீசன்

 

குறளின் கதிர்களாய்…(280)

குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.

– திருக்குறள் – 898 (பெரியாரைப் பிழையாமை)

புதுக் கவிதையில்…

மலைபோல்
மனவுறுதி மிக்க
பெரியவர்,
ஒருவரைக் கெடவேண்டுமென்று
மனதார நினைத்தால்,
உலகில் அழியாமல்
நிலைபெற்றாற்போல் உள்ளவரும்
தம் குடியுடன் அழிவார்…!

குறும்பாவில்…

மலைபோல் மதிப்புடைப் பெரியோர்,
ஒருவரைக் கெடவேண்டுமென நினைத்தால் அவர்
நிலைபெற்றவர் போலிருந்தாலும் குடியுடனழிவார்…!

மரபுக் கவிதையில்…

மலையைப் போல்மன உறுதியொடு
மதிப்பு மிக்கப் பெரியோரும்,
நிலையில் தவறும் ஒருவர்கெட
நினைத்து விட்டால் போதுமதே,
நிலைத்தே யிருப்போம் அழிவில்லா
நிலையி லிருப்போம் என்பவரும்
தொலைந்தே போவர் தானழிந்தே
தொடர்ந்து வந்திடும் குடியுடனே…!

லிமரைக்கூ..

மலைபோல் மனதினில் உறுதி
கொண்டுயர் பெரியோர் ஒருவன்கெட நினைத்தால்,
நிலைபெற்றவனுக்கும் குடியுடன்வரும் இறுதி…!

கிராமிய பாணியில்…

பகச்சிக்காத பகச்சிக்காத
பெரியவங்களப் பகச்சிக்காத,
பொறுப்பில்லாம நடந்து
பெரியவங்களப் பகச்சிக்காத..

மலபோல ஒயர்ந்த
மனசுவுள்ள பெரியவுங்க
மனசால ஒருத்தன் கெடணுமுண்ணு
நெனச்சாலே போதும்,
அழிவே வராதுண்ணு நெனச்சவனும்
அழிஞ்சிபோவான் குடியோடே..
அதால
பகச்சிக்காத பகச்சிக்காத
பெரியவங்களப் பகச்சிக்காத,
பொறுப்பில்லாம நடந்து
பெரியவங்களப் பகச்சிக்காத…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *