Sky-Romance-Clouds-Romantic-Love-Greeting-Card-1381402

அண்ணாகண்ணன்

தூக்கம் வந்தால் தூங்கிவிடு
தும்மல் வந்தால் தும்மிவிடு
அழுகை எழுந்தால் அழுதுவிடு
சிரிப்பு வந்தால் சிரித்துவிடு
ஆசைப் பட்டால் அடைந்துவிடு
அதற்காய் நீயும் உழைத்துவிடு
உணர்வை அடக்கிக் குறுகாதே
ஒளித்து வைத்து மருகாதே

தெரிந்தால் தெரியும் என்றுசொல்
தெரியாது என்றால் அதையும்சொல்
புரிந்தால் புரிந்தது என்றுசொல்
புரியாவிட்டால் அதையும்சொல்
பிடித்தால் பிடித்தது என்றுசொல்
பிடிக்காவிட்டால் அதையும்சொல்
வேண்டாம் என்றால் விட்டுவிடு
வேண்டும் என்றால் மொட்டுவிடு

அப்படி நடந்தால் அதுவும்சரி
இப்படி நடந்தால் இதுவும்சரி
எப்படி நடந்தாலும் சரியேதான்
எல்லாம் நமது நன்மைக்கே
அதிகம் யோசித்துக் குழம்பாதே
உள்ளம் சொல்வதைக் கேட்டுநட
திரும்பிப் பார்க்க நேரமில்லை
ஓடிக் கொண்டே விளையாடு

காதலில் கற்பனை அதிகமுண்டு
கனவைக் கலைத்து எழுந்துவா
நிஜத்தைப் பேசு நேருக்குநேர்
நிலைப்பது நிலைக்கும் நீயேபார்
வெற்றிகளாலே நீபேசு
வேண்டியதெல்லாம் பின்தொடரும்
ஆக வேண்டிய வேலையைப் பார் – இந்தா
பறக்கும் முத்தம் பற்றிக்கொள்

=======================================

Photo courtesy: Maxpixel.net

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "பறக்கும் முத்தம்"

  1. கவிதைக்குள் ஏதோ ஒன்று சுழன்று சுழன்று பாய்ச்சலாய் வாசகத் திறனாய் உள் நுழைகிறது.
    நல்ல நடை. பிரண்டு வார்த்தைகள் நடனமாடுகின்றன.அருமை அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.