நெல்லைத் தமிழில் திருக்குறள்-112
நாங்குநேரி வாசஸ்ரீ
112. நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
அனிச்சம் பூவே நீ மென்மையா மெத்துனு இருக்கதால. உன்னைய வாழ்த்துதேன். ஆனா உன்னையக்காட்டிலும் நான் ஆசப்படுத என்காதலி மென்மையானவ.
குறள் 1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று
நெஞ்சே! இவ கண்ணு பலபேரு பாக்க விரும்புத பூ கணக்கா இருக்குனு நெனைச்சு அந்தப் பூக்களப் பாத்தா நீ மயங்குதியோ.
குறள் 1113
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
மூங்கில் கணக்கா தோள் இருக்க இவளுக்கு தளிர் கணக்கா மேனி, முத்துப் பல்லு, மயக்குத வாசம் (நறுமணம்), மை பூசின கண்ணு வேல்.
குறள் 1114
காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று
குவளைப் பூவுக்கு பாக்குத தன்ம வந்திச்சின்னா இவ கண்ணுக்கு ஈடா நாம இல்லையேன்னு தேம்பி தலை குனிஞ்சி நிலத்தப்பாக்கும்.
குறள் 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை
தன்னோட மென்மைய அறிஞ்சிக்கிடாம காம்பு எடுக்காத அனிச்சம்பூவ தலையில வச்சிக்கிட்டதால நொந்து நூலாப்போன இவ இடுப்புக்கு இனி நல்ல பறை ஒலிக்காது.
குறள் 1116
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்
இவ மொகத்துக்கும் நிலாவுக்கும் உள்ள வித்தியாசத்த அறிஞ்சிக்கிடமுடியாம நட்சத்திரங்க ஒரு நிலையில நிக்காம திரியுதுங்க.
குறள் 1117
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து
தேஞ்சு பொறவு வளந்து வெளிச்சத்தக் குடுக்குத நிலாவுல இருக்க களங்கம் கணக்கா சிறுசா கூட இவ மொகத்துல உண்டா? கெடையாதே.
குறள் 1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
இவ மொகத்துலேந்து வீசுத ஒளி கணக்கா நிலாவே நீயும் ஒளி வீசினா நீயும் என் காதலுக்கு உரிம பெறுவ.
குறள் 1119
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி
நிலாவே! பூ கணக்கா கண்கள் இருக்க இவ மொகத்த ஒத்து இருக்கணும்னு நீ நெனைச்சா எல்லாரும் பாக்குதமாரி வானத்துல வளையவராத.
குறள் 1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்
அனிச்சம்பூவுன்னாலும், அன்னத்தோட இறகுன்னாலும் என் காதலியோட பாதத்துக்கு நெருஞ்சிமுள்ளு கணக்கா செரையக் குடுக்கும். (அவ பாதம் அம்புட்டு மென்மை)