மழைகூட இவர்களுக்கு வாழ்த்துக்கூறி நிற்கிறதே!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா

வாழையிலை குடையாக
வதனமெலாம் மலர்ச்சியுற
விண்ணின்று பன்னீராய்
மழைத்துளிகள் சிந்திடவே
நாளைதனை நினையாமல்
நனையுமந்தத் திருக்கோலம்
பார்ப்பவரின் மனமெல்லாம்
பக்குவமாய்ப் பதிந்திடுமே!

உலகநிலை தனைமறந்து
உளமகிழ்வு முகம்காட்ட
மழைநனையும் அழகுநிலை
மனமதனில் அமர்கிறதே
களங்கநிலை காணாத
காதல்நிறை பிணைப்பாக
கைதொட்டு நிற்குநிலை
களிப்பூட்டி  நிற்கிறதே!

ஏழ்மையது எழிலாக
இங்குருவாய் ஆகியதே
ஆழமுடை  அன்புநிலை
அருகணைந்து தெரிகிறதே
வாழையிலை மகிழ்வுடனே
காதல்கண்டு மகிழ்கிறதே
மழைகூட  இவர்களுக்கு
வாழ்த்துக்கூறி நிற்கிறதே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *