கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 1

0

-மேகலா இராமமூர்த்தி

தமிழில் இயற்றப்பட்ட ஒப்பற்ற பெருங்காப்பியமாகவும் பேரிலக்கியமாகவும் திகழ்வது கம்பராமாயணம்.

“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை
” என்று மகாகவி பாரதியால் போற்றிக் கொண்டாடப்பட்ட புலவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்த கம்பரால் எழுதப்பட்ட காப்பியம் இது.

கம்பராமாயணம் ஒரு முதனூலன்று; வடமொழியில் இயற்றப்பட்ட, ஆதி காவியம் என்று அழைக்கப்படுகின்ற, வால்மீகி இராமாயணத்தை அடியொற்றி எழுதப்பட்ட ஒரு வழிநூலாகும்.

தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ.
(பாயிரம் – 10)

தேவ பாடை(பாஷை) என்றழைக்கப்படும் சமஸ்கிருதத்தில் இராமன் கதையைச் செய்தவர்கள் வால்மீகி, வசிட்டர், போதாயனர் எனும் மூவர். இவர்களுள் முந்தியவரான வால்மீகி தம் நாவால் உரைத்தவண்ணமே தமிழ்ப்பாவில் நான் இக்கதையை அமைத்துள்ளேன் என்று கம்பரே தம் பாயிரத்தில் இக்கருத்தை உறுதிசெய்திருக்கக் காண்கின்றோம்.

வழிநூலாக இருப்பினும் வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்பாகத் தம் காப்பியத்தைக் கம்பர் படைக்கவில்லை என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். வால்மீகி தம்முடைய இராமாயணத்தில் விரிவாகப் பேசிய சில கருத்துக்களைச் சுருக்கமாகவும், சுருக்கமாகப் பேசிய கருத்துக்களை விரிவாகவும் கம்பராமாயணம் பேசுகின்றது.

வால்மீகி இராமாயணத்தில் காணப்படாத இரணியன் வதைப்படலம், மாயா சனகப் படலம் ஆகியவை கம்பராமாயணத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 176 பாடல்களைக் கொண்ட இரணியன் வதைப்படலம் ஒரு தனிக் காப்பியம் என்றெண்ணத்தக்க வகையில் பொலிவோடும் வலிவோடும் கம்பரால் படைக்கப்பட்டுள்ளது. இதனைக் காப்பியத்துள் அமைந்த குறுங்காப்பியம் என்றே போற்றுகின்றார்கள் பல்கலைச் செல்வர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரும், கம்பரை மேனாட்டுக் கவிவலாருடன் ஒப்பிட்டு மகிழ்ந்த கம்பர் திறனாய்வாளரான வ.வே.சு. ஐயரும்!

வால்மீகியின் காவியத்தில் இராமன் சனகரின் அரண்மனையில் இருந்த அரன் வில்லை (சிவ தனுசு) வளைத்துச் சீதையை மணந்துகொண்டான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  பண்டைய மன்றல் முறைகளாகக் குறிப்பிடப்படும் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் எனும் எட்டனுள் இஃது ஆசுர மணத்தைச் சேர்ந்தது. ஆசுர மணத்தைப் பொறுத்தவரை அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மன ஒப்புதல் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. வில்லை வளைத்து நாணேற்றுபவர் எவரும் அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம்; கிழவனாக இருந்தாலும்!

தமிழ் அகப்பொருள் மரபில் திளைத்தவரான கம்பருக்கு இம்மணமுறையில் உடன்பாடில்லை. எனவேதான் மணத்துக்கு முன்பே இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டனர் எனும் அமைப்பில் கதையை மாற்றுகின்றார். மிதிலையின் அரசவீதியில் முனிவரோடும் இளவல் இலக்குவனோடும் நடந்துவருகின்ற இராமனைக் கன்னிமாடத்தில் நின்றிருக்கும் சீதை குனிந்து காண்கின்றாள். மேலே நிமிர்ந்துபார்க்கும் இராமனும் அவளை நோக்குகின்றாள். அப்போது நிகழ்ந்த இரசவாதத்தைத் தம் கவிதையில் ஓவியமாய்த் தீட்டி நம் உள்ளத்தில் பதித்துவிடுகின்றார் கம்பநாடர்.

எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
(கம்பராமாயணம்: மிதிலைக் காட்சிப் படலம் – 598)

இவ்வாறே நிறைகுணங்களின் உறைவிடமாய் விளங்கிய கேகயன் மட மானான கைகேயியின் தூயசிந்தை திரிந்தமைக்குத் தீய மந்தரையின் சூழ்ச்சியை மட்டும் காரணமாய்க் காட்டாமல், அரக்கர் பாவத்தையும் அல்லவர்செய் அறத்தையும் கூடுதல் காரணங்களாய்க் காட்டுவதும், இராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிச்சென்றான் என்று மொழியாது, அவள் வசித்துவந்த பர்ணசாலையோடு பெயர்த்தெடுத்துச் சென்றான் என்று புனைந்திருப்பதும் வான்மீகத்திலிருந்து கம்பர் மாறுபடும் இடங்களாகும்.

மூலநூலான வால்மீகி இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள சனகர், விசுவாமித்திரர், அசமஞ்சன், கங்கை போன்றோரின் வரலாறுகளைக் கம்பர் தம் காப்பியத்தில் பாடாமல் நீக்கியுள்ளார். வான்மீகத்தில் மிக விரிவாகப் பேசப்பட்டுள்ள சம்பராசுரப் போரை, அது கூனி கைகேயி விவாதத்தின் ஓட்டத்தைத் தடைப்படுத்தும் என்று கருதி, ஒரே ஒரு பாடலில் சுருங்கக் கூறி முடித்துவிடுகின்றார் கம்பர்.

நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென்
     நளிர் மணி நகையாய்
தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்
     தொலைவுற்ற வேலை
ஆடல் வென்றியான் அருளிய வரம்
     அவை இரண்டும்
கோடி என்றனள் உள்ளமும்
     கோடிய கொடியாள். (கம்பராமாயணம்: மந்தரை சூழ்ச்சிப்படலம் – 1576)

இவ்வாறு மூலநூலினும் விஞ்சிய பல்வேறு சிறப்புக்களைக் கொண்டதாய், காலத்தால் அழியாத புத்தாக்கப் படைப்பாய் (recreation) கம்பரால் உருவாக்கப்பட்டுள்ள இராமனின் கதைக்குக் கம்பர் தேர்ந்தெடுத்த பெயர் ’இராமாவதாரம்’ என்பதாகும். இதனைக் காப்பியத்தின் பாயிரச் செய்யுள் பகர்கின்றது.

நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம்அறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல் லூர்வயின் தந்ததே
(கம்பராமாயணம்: பாயிரம் – 11) ஆனால் கம்பராமாயணம் என்ற பெயரே கால ஓட்டத்தில் நிலைத்துவிட்டது.

அளப்பரிய கவியாற்றலும் வியத்தகு சிந்தனைத் திறனும் வாய்க்கப்பெற்ற கம்பர் புதிதாகவே ஒரு நூலைப் படைத்திருக்கலாமே? எதற்காக வால்மீகி வடமொழியில் எழுதிய இராமனின் வரலாற்றைத் தூசுதட்டியெடுத்துத் தமிழில் மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்றொரு வினாவும் இத்தருணத்தில் நமக்கு எழுதல் இயல்பே.

ஒரு சமுதாயம் சிறந்துவிளங்க வேண்டுமானால் அதற்கு முதன்மையான தேவை அங்குவாழும் மக்களின் புலனொழுக்கமே என்று கருதிய கம்பர், இன்றியமையா மக்கட் பண்பாகிய அப்புலனொழுக்கம் வழுவி நடப்பவர் எதிர்கொள்ளும் தீங்குகளையும் அவர்கள் பெறும் தண்டனைகளையும் விளக்கமாக அறிந்தால் இச்சமுதாயம் நன்னெறியில் நின்றொழுகும் என்று திண்ணமாய் நம்பினார். அக்கருத்தை விளக்குதற்குப் புதிதாகத் தாம் ஒரு கதையை உருவாக்குவதைவிடவும், தமிழ்மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமாகியிருந்த – அவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த, நடையில் நின்றுயர் நாயகனான, இராமனின் கதை பயன்படும் என்றெண்ணியே அதனை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியில் அவர் இறங்கியிருக்க வேண்டும் என்பது கம்பரில் தோய்ந்து, கம்பராமாயணத்தைத் தீர ஆய்ந்தவரான பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களின் கருத்தாகும்.

புலனொழுக்கத்தை வலியுறுத்துவதோடல்லாமல், அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்பதையும் இக்காப்பியம் விளக்குகின்றது. இவையன்றி, இன்னும் எத்தனையோ அறக்கருத்துக்களையும் வாழ்வியல் விழுமியங்களையும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நமக்கு விண்டுரைக்கும் பணியையும் கம்பரின் காப்பியம் குறைவறச் செய்திருக்கின்றது.

பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களைக் கொண்ட இக்காப்பியத்தில், சென்னை கம்பன்கழகப் பதிப்பின்படி 10368 பாடல்கள் உள்ளன.

கம்பர், தமிழ்க்கடலின் ஆழத்தைக் கண்டுணர்ந்த அறிஞர்; முத்தமிழ்த் துறையின் முறைபோகிய வித்தகக் கவிஞர்; தமிழ் மரபுகளில் ஊறித் திளைத்த நற்றமிழர். தம் பேரிலக்கியத்தில் இராமனைக் குறிப்பதற்கு அவர் பயன்படுத்தியிருக்கும், ”தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்” (கம்பராமாயணம்: நகர்நீங்கு படலம்-1741) என்ற சொற்கள் தென்மொழியாம் தமிழிலும் வடமொழியிலும் பெரும்புலமை பெற்றிருந்த கம்பருக்கும் பொருந்துவனவாகவே உள்ளன.

இத்தகு பேராற்றலும் பெரும்புலமையும் வாய்ந்த கம்பரின் கவிதை வாரிதியாம் கம்பராமாயணம் தமிழுக்குத் தகைசால் அணியாய்த் திகழ்கின்றதெனில் மிகையில்லை. இவ்வாரிதியில் அள்ள அள்ளக் குறையாத முத்தான கருத்துக்கள் வித்தாரமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சிலவற்றையேனும் நாம் அறிந்துகொள்வது தமிழ்ச் சமுதாயத்திற்கு நன்மை பயக்குமென நம்புகின்றேன்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  2. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  3. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *