அழகான ராட்சஸி (சூர்ப்பனகை)

ஆ. கிஷோர்குமார்
தயரதன் மகனைத்
தன்வயம் இழுக்க
சூர்ப்பனகையவள்
சூளுரை எடுத்தாள்
பேய் போல் இருந்தவள்
பேரெழில் கொண்டாள்
திங்கள் முகம்
செவ்வாய் இதழ்கள்
ஏற்ற இறக்கங்களுடன்
ஏற்புடை உடற்கட்டு.
அவள் மென்னடை விரும்பி
மெதுவாய்ச் செல்கையில்
ஏழு கோள்களும்
ஏங்கி நோக்கின
மெல்லினமான வல்லினக்காரி
இடையினம் கண்டு இமயம் சரிந்தது
இமயத்தின் நிலையே
இதுதான் என்றால்..
தன் நிலை எண்ணிக்
குமரியும் குழைந்தது
காமக் கண்ணுடன்
ராமனைக் காணும் முன்
இளைய பெருமாள்
எதிர்ப்பட நின்றாள்
இவனே ராமனோ
என மனம் கருதி
வார்த்தை வலையினை
வாயால் விரித்தாள்
இனம் கண்டு கொண்ட
இலக்குவன் அவனும்
சினம் கொண்டு வாளுக்குக்
கட்டளை கொடுத்தான்
வெகுண்டு எழுந்த
வெங்கதிர் வாளோ
பேசிய பெண்ணின் நாசி அறுத்து
காதிரண்டயும் வீசி எறிந்தது…
ஒப்பனை கலைந்து
பேய் உரு நிலைத்து
விகாரக்காரி
விலகி ஓடினாள்
விதி பின்னால் துரத்த
தமையனை நாடினாள்…