அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)
ச. கண்மணி கணேசன் (ஓய்வு)
முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
அக இலக்கியச் சிறுபாத்திரங்களுள் தலைவியுடன் பெரிதும் தொடர்புறும் நெருக்கமான குழுப்பாத்திரம் ‘ஆயம்’ ஆகும். ஆயம் பற்றிய குறிப்புகள் புறப்பாடல்களிலும் காணப்படுகின்றன.
ஆயம் என்னும் சொல்லின் பொருட்பரிமாணம்
ஆயம் எனும் சொல் ‘நெருங்கிய சுற்றம்’ எனப் பொருள்படும். இது உயர்திணை, அஃறிணை; ஆண்பால், பெண்பால், பலர்பால் அனைத்திற்கும் பொதுவானது. .
தொகை நூல்கள் ஆநிரையை ஆயம் என்கின்றன (புறம்.- பா- 224, 230, 258, 386; அகம்.- 54, 79, 291; நற்.- 37; மதுரைக்.- அடி- 692). ஆட்டுக் கூட்டம் ‘சிறுதலை ஆயம்’ எனப்படுவது உண்டு (புறம்.- 54). பிடியும், கன்றும் கூடிய களிற்றுக் கூட்டமும் ‘ஆயம்’ ஆகும் (மதுரைக்.- அடி- 101).
மகளிர் கூட்டத்தை ‘ஆயம்’ என்பர் (மதுரைக்.- அடி- 264). கூடலூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இறந்த போது அவனது மகளிரை ‘ஆயம்’ என்றழைக்கிறார் (புறம்.- 229). பாணர் குழுவின் விறலியர் ஆயம் எனப்படுவர் (சிறு.- அடி- 176). வண்டல் ஆடும் மகளிர் ஆயம் என்றழைக்கப் படுகின்றனர் (பெரும்.- அடி- 311). பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கட் கூட்டமும் ‘பல்லாயம்’ என்றழைக்கப்படும் (பட்டினப்.- அடி- 213). கரிகாற் பெருவளத்தானுக்குத் துணையாக இருந்த வீரர் ‘ஆயம்’ என்றே சுட்டப் படுகின்றனர் (புறம்.- 224). அவனது அவையத்து ஆயம் பற்றி ஆற்றுப்படை குறிப்பிடுகிறது (பொருநர்.- அடி- 123). நல்லியக்கோடனின் அவையில் ஆயம் சூழ்ந்திருந்தது (சிறு.- அடி- 220). வெளிமான் இறந்த பின்னர் அவனது பெண்டிர் ‘பேஎ யாயம்’ ஆகின்றனர் (புறம்.- 238). தொடித்தலை விழுத்தண்டினார் இளமையில் தன்னோடு சேர்ந்து ஆடிய நண்பர் கூட்டத்தை ‘ஆயம்’ எனச் சுட்டுகிறார் (புறம்.- 243).
ஆயத்தார் எனப் பன்மை விகுதியுடனும் குறிப்பிடக் காண்கிறோம் (பரி.- 16; கலித்.- 76, 114, 142).
தலைவியின் ஆயம் = விளையாட்டுச் சுற்றம்
தலைவியுடன் விளையாடும்; அவளை ஒத்த நெருங்கிய சுற்றம் ஆயம் ஆதலால்; ‘கலிகொள் ஆயம் (அகம்.- 11), ‘அலமரல் ஆயம்’ (அகம்.- 7) ‘கணங்கொள் ஆயம்’ (அகம்.- 250), ‘தன்னோரன்ன ஆயம்’ (அகம்.- 385), ‘விளையாட்டு ஆயம்’ (அகம்.- 254, 230; நற்.- 68, 172) என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
நெய்தல் நிலத்தலைவி ‘கானல் ஆய’த்துடன் சேர்ந்து (அகம்.- 220; நற்.- 72, 123) கழங்கு ஆடுவாள் (அகம்.- 17, 66); நண்டுக்குழிகளைக் கிண்டி; ஊஞ்சல் ஆடிக்; குரவை அயர்ந்து; கடல்நீரில் ஆடுவாள் (அகம்.- 20, 110; நற்.- 90). மண்ணில் ஆடுவதால் ‘வண்டல் ஆயம்’ என்றழைக்கப்பட்ட அவர் (அகம்.- 60; நற்.- 127); பந்தும் ஆடுவர் (அகம்.- 153, 180& 219; நற்.- 140). உணங்க வைத்த மீன் குவியலுக்குக் காவலாக இருந்துகொண்டு உப்பு வண்டிகளை எண்ணுவர் (நற்.- 331). காலையில் உப்புக் குவியலில் ஏறி; மீன்பிடித்து மீண்டு வரும் திமில்களுள் ‘இது என் தந்தை திமில்; அது உன் தந்தை திமில்’ என்று அடையாளம் கண்டு எண்ணுவர் (அகம்.- 190). பன்றி கிண்டிய இருஞ்சேற்றைக் கிளறி; ஆமை முட்டையையும், இனிய ஆம்பல் கிழங்கையும் பெறுவர் (புறம்.- 176).
குறிஞ்சி நிலத் தலைவி ஆயத்தோடு சேர்ந்து தழல் ஒலித்து; தட்டை முழக்கி; அசோகந் தளிரால் தழையாடை தைத்து உடுத்து; தினைப்புனம் காப்பாள் (அகம்.- 188); சுனை நீராடிக் (அகம்.- 358); குவளைப் பூக்களைப் பறிப்பாள் (நற்.- 317). அருவி ஆடுவதும் உண்டு (நற்.- 44).
மருதத் திணைத் தலைவி ஆயத்தோடு சேர்ந்து பொய்கையில் பூப் பறித்து விளையாடுவாள் (நற்.- 115). மன்னன் மகளாகிய தலைவிக்கு விளையாட்டின் இடையில் சினம் வந்தால் ஆயம் அவளைக் கைதொழுது இரந்து நிற்பதுண்டு (நற்.- 300).
தாய் தனது பெதும்பைப் பருவத்து மகள் ஆயத்தோடு விளையாடும் பொழுதெல்லாம் அவளைத் தொடர்ந்து கண்காணிக்கிறாள் என்பது அவளது வாய்மொழியாகவே இடம் பெறுகிறது (அகம்.- 49; நற்.- 68, 143).
தலைவி ஆயத்தின் தோற்றம்:
தலைவியோடு ஒத்த வயதினர் ஆகையால்; அவரது தோற்றமும் ஒத்த தன்மை உடையதாக வருணிக்கப்பட்டுள்ளது. “வடிக்கொள் கூழை ஆயம்” (நற்.- 23) என வாரிக் கட்டிய அவரது தலைமுடி புனைவு பெற்று உள்ளது. ஐந்துவகையாக ஒப்பனை செய்யக்கூடிய ஐம்பாலெனும் தலைமுடியை மயிர்ச்சாந்தம் பூசி அழகுறுத்த; அச்சாந்தம் புலர்ந்து உதிர்ந்தது;
“சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம்
வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப்
புலர்விடத்து உதிர்ந்த துகள்படு கூழைப்
பெருங்கண் ஆயம்” (நற்.- 140)
என விரிவாகவே ஆயத்தின் தோற்றம் இடம்பெற்று உள்ளது. “இழையணி ஆயம்” (நற்.- 80) என்றும் “ஆயத்து ஒண்டொடி மகளிர்” (புறம்.- 176) என்றும் அவர்கள் அணிந்த கலன்களும் அவருடன் சேர்த்துப் பேசப்பட்டுள்ளன.
ஆயத்தின் உணர்வுச் சித்தரிப்பு
ஆயத்திற்கு கூற்று நிகழ்த்தும் உரிமையில்லை. இரவுக்குறிக்குத் துணைசெய்யும் தோழி ஆயம் அறியாவாறு இருவரையும் சந்திக்க வைக்கிறாள் (நற்.- 323).
தலைவி உடன்போகிய பின்னர் ஆயத்தார் எவ்வாறு துன்புற்றனர் என்று மகட்போக்கிய தாய் கூறுகிறாள்.
“ஆயமும் அணியிழந்து அழுங்கின்று” (அகம்.- 165; நற்.- 295).
அவர் வாடி அழுததோடு விளையாட்டையும் மறந்தனர் (அகம்.- 369).
உடன்போக்கில் தலைவனோடு செல்லத் தயங்கும் தலைவி பற்றித் தோழி அவனிடம் பேசுங்கால் ஆயத்தையே காரணம் காட்டுகிறாள்.
“வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்
அரியமை சிலம்பு கழீஇ பல்மாண்
வரிபுனை பந்தொடு வைகிய செல்வோள்
இவை காண்தொறும் நோவர் மாதோ
அளியரோ அளியர் என் ஆயத்தோர் என”ப் (நற்.- 12);
பொழுது புலருமுன் தன்னை மறைத்துக்கொண்டு; ஒலி எழாதவாறு செல்ல ஏதுவாகக் கால்களில் அணிந்திருந்த சிலம்பினை நீக்கியவள் அழகாகப் புனைந்த பந்தினைக் கண்டவுடன்; ‘என் விளையாட்டுத் தோழியர் இதைக் கண்டு மனம் வருந்துவர் அன்றோ’; எனப் பின்வாங்கியதாக விவரிக்கும் சூழலில் ஆயத்தோடு தலைவிக்கிருந்த உணர்வு பூர்வமான நெருக்கம் புலப்படுகிறது. அடக்க மாட்டாமல் அழுத தலைவி என்பதால் ஆயத்திற்கும் தலைவிக்கும் இடையிலான அன்பின் பிணைப்பு தெரிகிறது. நிலைமை தலைவனுக்குச் சொல்லப்படுவதால்; அவன் நேரில் வந்து அவளைப் பெண்கேட்டு மணக்க வேண்டும் என்று குறிப்பாகக் கூறுகிறாள் தோழி. குறிஞ்சியின் கூடல் நிமித்தமாகிய வரைவு கடாஅதலைச் செயல்படுத்த ஆயம் பயன்பட்டுள்ளது.
மகட்போக்கிய தாய் ‘ஆயமும் உள்ளாள்’ எனத்; தன்மகள் நெருங்கிய விளையாட்டுச் சுற்றத்தைக் கூட நினைத்துப் பார்க்காமல் போய்விட்டாள் என அழுது புலம்புவதற்கு (அகம்.- 117) அவர்க்கு இடையில் இருந்த அன்புப் பிணைப்பே காரணமாகும்.
ஆயத்தைக் காணும் தாயின் உணர்வு
மகள் பிரிந்து சென்ற பின்னர் பூங்கண் ஆயத்தைக் கண்ட பொழுதெல்லாம் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறாள் தாய் (நற்.- 143, 293).
கற்புக்காலத்தில் ஆயம் கொண்ட அக்கறை
புறத்தொழுக்கத்தால் ஊடல் கொண்ட தலைவி தன் கணவனை;
“ஆயமும் அயலும் மருள” (அகம்.- 116)
வாயில் மறுத்தாள் என்னுமிடத்து; மருட்சியின் காரணம் தலைவியது நலவாழ்வின் மேல் ஆயம் கொண்டிருந்த அக்கறை என்பது புலனாகிறது.
தலைவன் இன்னொரு பெண்ணின் மேல் விருப்பு மீதுற்று ஒழுகினான் என்பதை ஆயத்துள் பேசத் தலைவியும் தோழியும் அறிந்து கொள்கின்றனர். ஆயம் பேசியதாகத் தோழி கூறுகிறாள்.
“ஒண்டொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
கொண்டனை என்ப ஓர் குறுமகள்” (அகம்.- 96)
இவ்விடத்து ஆயம் நடப்பு உண்மையைத் தெரிவிக்கும் கருவி ஆகப் பயன்கொள்ளப் பட்டுள்ளது. மருதத்திணை உரிப்பொருளாகிய ஊடல் நிமித்தத்திற்கும் ஆயம் காரியப்பொருள் ஆகிறது.
ஆயத்தால் தலைவனின் அச்சமும் தலைவியின் ஐயமும்
தலைவியோடு கூடியிருக்கும் வேளையில் தலைவன் ஆயத்தைக் காரணம் காட்டி; ‘அவர்க்குத் தெரிந்தால் கூட அலர் ஆகிவிடுமன்றோ’ எனத் தயங்கி விலகினான். தலைவிக்கு அவனது இச்செய்கை ஐயத்தை ஊட்டியது. தலைவியே அவன் பேசியதாகத் தோழியிடம் கூறுகிறாள்.
“கானல் ஆயம் அறியினும் ஆனாது
அலர் வந்தன்றுகொல் என்னும் அதனால்
புலர்வது கொல் அவன் நட்பு எனா
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே” (நற்.- 72)
சிறைப்புறமாக நின்ற தலைவன் காதில் விழும் வண்ணம் நிகழும் கூற்று இது. தலைவனின் அன்பு சுருங்கியதோ என்று ஐயுற்ற தலைவிக்கு அந்த அன்பை அளந்து காட்டும் கருவி என்ற நிலையில் ஆயம் என்னும் சிறு பாத்திரம் பயன்பட்டுள்ளது.
தாயின் ஆயம்
குடும்பத்தின் சொந்தபந்தம் தாயின் ஆயமாகும். உடன்போக்கின் பின்னர் தலைவியைத் தேடிச் செல்லும் ஆயம் பற்றி;
“செய்போழ் வெட்டிப் பெய்தல் ஆயம்
மாலைவிரி நிலவில் பெயர்பு புறம் காண்டற்கு” (நர்.- 271)
என அவரது தொழிலும் செய்கையும் தோன்றத் தாய் விவரிக்கிறாள்.
பனங்குருத்தைக் கீண்டு பதனிடப் போடும் மாலைப் பொழுதில் நிலவின் ஒளியில் தாயின் ஆயம் தலைவியை மீட்கச் சென்றதென்கிறாள்.
பரத்தையின் ஆயம்
தலைவி மட்டுமின்றிப் பரத்தையின் சுற்றமும் ஆயம் என்றே அழைக்கப்படுகிறது. தலைவனோடு பரத்தை புனலாடியதை அவளது ஆயம் மறைக்க முற்பட்டது (அகம்.- 256)
முடிவுரை
நெருங்கிய சுற்றமாகிய ஆயம் தொல்காப்பிய அகப் பாத்திரங்களான தலைவி; தாய், பரத்தை ஆகியோர்க்கு உண்டு. தலைவியின் ஆயம் ஒத்த வயதுடைய விளையாட்டுச் சுற்றம் ஆகும். தாயின் ஆயம் குடும்பத்தின் சொந்தபந்தம் ஆகும். பரத்தையின் ஆயம் அவளது செயல் தலைவிக்குத் தெரியாதவாறு மறைத்துக் காப்பாற்ற முனையும். தலைவியும் ஆயமும் ஒத்த தோற்றத்தினாராக வருணிக்கப்பட்டு உள்ளனர். குழுப் பாத்திரமாகிய ஆயத்திற்கு பாடலில் நேரடியாகக் கூற்று நிகழ்த்தும் உரிமை இல்லை; கூறியதாகத் தோழி கூறுகிறாள். இரவுக்குறியில் தோழி ஆயம் அறியாவாறு இருவரையும் சந்திக்க வைக்கிறாள். தலைவி உடன்போகிய பின்னர் ஆயம் மிகவும் துன்புறும். அவர்கட்கு இடையே அன்புப்பிணைப்பு இருந்தது. குறிஞ்சியின் கூடல் நிமித்தமாகிய வரைவு கடாஅதலைச் செயல்படுத்த ஆயம் பயன்பட்டது. மகள் பிரிந்து சென்ற பின்னர் தாய் ஆயத்தைக் கண்ட பொழுதெல்லாம் துன்பத்திற்கு ஆளாகிறாள். தலைவியது நலவாழ்வின் மேல் ஆயத்திற்கு அக்கறை இருந்தது. ஊடலுக்கு ஆயம் காரியப்பொருள் ஆகிறது. ஆயம் தலைவனின் அன்பை அளக்கும் கருவியாகப் பயன்பட்டுள்ளது.