நிலவொளியில் ஒரு குளியல் – 17

11

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_venkateshசென்ற வாரப் பத்தியில் மணற்கொள்ளை பற்றியும் மரங்கள் வெட்டப்படுவது குறித்தும் எழுதியதற்கு நல்ல பின்னூட்டங்கள் கிடைத்தன. அவற்றிலிருந்து ஒன்று புரிந்தது. நம் மக்கள் நல்ல மாற்றங்களை வரவேற்கக் காத்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, கூடிய சீக்கிரமே அது வரவேண்டும் என்றும் விரும்புகிறார்கள் என்பதே அது. அந்தப் பின்னூட்டங்கள் தந்த ஊக்கத்தில் இந்த வாரமும் ஒரு பொதுப் பிரச்சினை பற்றிப் பேசலாம் என்றிருக்கிறேன்.

இந்த யுகம் பிளாஸ்டிக் யுகம் என்று அறியப்படுகிறது. பிளாஸ்டிக் தயாரிக்கப்படும் தொழில்நுட்பம் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் இன்று இத்தனை இதர தொழில்நுட்ப வளர்ச்சி சாத்தியமாகி இருக்காது என்று தோன்றுகிறது. ஆனால் பிளாஸ்டிக் என்றதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக ஒரு வெறுப்பு இழையோடுகிறது. அதற்குத் தக்க காரணமும் இல்லாமல் இல்லை. சூழல் மாசு படுவதற்கு பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் முழு முதற்காரணம் என்பது அனைவரும் உணர்ந்த ஓர் உண்மை. நானும் இதே எண்ணத்தில்தான் இருந்தேன். பிளாஸ்டிக் என்பது ஓர் அரக்கன். வெட்ட வெட்ட முளைக்கும் தலை கொண்ட அரக்கன் போல், மண்ணுக்குள் எத்தனை வருடங்கள் கிடந்தாலும் மட்காத தன்மை உடைய ஒரு கொடிய ராட்சத கண்டுபிடிப்புதான் பிளாஸ்டிக் என்பது என்று நினைத்திருந்தேன். அந்த எண்ணத்தை மாற்றியவர் என் கணவரின் உற்ற நண்பர் சிவகுமார் என்பவர்தான்.

நாங்கள் ஒரிஸ்ஸா தலைநகரம் புவனேஸ்வரில் இருந்தோம் என்று கூறியிருக்கிறேன் அல்லவா? அங்கே cipet எனப்படும் பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தரும் மையத்தை நடுவணரசு அமைத்துள்ளது. (சென்னையிலும் தரமணியில் அந்த மையம் இருக்கிறது). அந்த மையத்தின் தொழில்நுட்ப மேலாளராகப் பணியாற்றியவர்தான் நான் மேலே குறிப்பிட்ட சிவகுமார் அவர்கள். ஒரு முறை அவர் வீட்டுக்குச் சென்றிருந்த போது பிளாஸ்டிக் பற்றி நான் நினைப்பதை அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் கூறிய பதில், நிச்சயமாக எல்லோருக்கும் தெரிய வேண்டிய ஒன்று.

Plastic_chairs_airport

“மேடம், நீங்க பிளாஸ்டிக்கை அரக்கன்ன்னு சொல்றீங்க! ஆனா அதுனால எவ்வளவு நன்மைகள் இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? உதாரணமா விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களை எடுத்துக்கங்களேன். அங்கே மக்கள் உட்காரப் பயன் படுத்துற நாற்காலிகளும் பெஞ்சுகளும் பிளாஸ்டிக்கால் ஆனவை. ஒருவேளை பிளாஸ்டிக் என்ற பொருள் கண்டுபிடிக்கப் படாமல் இருந்திருந்தால் அந்த இருக்கைகள் செய்வதற்கு எவ்வளவு மரம் வேண்டியிருக்கும்? அதனால் எத்தனை மரங்கள் வெட்டப்படும்? அதனால் இயற்கை எத்தனை கெடுதலுக்கு உள்ளாகும்?
அது போகட்டும், வீட்டு உபயோகப் பொருட்களையே எடுத்துக்குங்களேன்; பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட குடம், வாளி போன்றவை பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் இல்லாவிட்டால் அவற்றைச் செய்வதற்கு எவ்வளவு உலோகம் தேவைப்படும்? ஏற்கெனவே உலகில் உள்ள உலோகக் கனிம வளம் குன்றி வருகிறது. இந்நிலையில் வீட்டு உபயோக சாதனங்களுக்காக உலோகங்களைப் பயன்படுத்தினால் அவற்றின் விலையை விடுங்கள், அந்த உலோகம் கிடைக்காமல் போய்விடுவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. மேடம்! பிளாஸ்டிக் என்பது தீக்குச்சி மாதிரி. தீக்குச்சியின் வேலை பற்ற வைப்பது. அதைச் செய்யும் கைகளைப் பொறுத்தே அதன் பயன்பாடு அமையும்” என்று கூறினார்.

அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையில் தோய்ந்து இருந்தது. பிளாஸ்டிக் பற்றிய என் வெறுப்பு மறைந்தது. அதிலும் அவர் கடைசியாகக் கூறிய வாக்கியம் என் மனத்தைத் தொட்டது. நாம்தான் பயன்படுத்தத் தெரியாமல் பிளாஸ்டிக்கிற்கு கெட்ட பெயர் உண்டாக்கி விட்டோம். எய்தவர்கள் நாமே. ஆனால் நாமே அம்பைத் திட்டுகிறோம்.

மூன்று மாதங்களுக்கு முன்பு நாங்கள் குடும்பத்தோடு ஜெய்ப்பூர் போயிருந்தோம். நம் ஊர் வழக்கப்படி பணம் மட்டும் எடுத்துச் சென்று சில பொருட்கள் வாங்கினோம். எந்தக் கடையிலும் பிளாஸ்டிக் பை தரவில்லை. வெறும் காகிதப் போட்டலங்கள்தான். “நாங்கள் எப்படி இதைக் கொண்டு போவது?” என்று கேட்ட போது “பொருட்கள் வாங்கப் போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? கையோடு பை கொண்டு வந்தால் என்ன?” என்று கேட்டு விட்டு 5 ரூபாய் பெறாத ஒரு துணிப் பையை 20 ரூபாய்க்கு எங்கள் தலையில் கட்டினார்கள். எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் அங்கே பிளாஸ்டிக் பைகளுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடைக்காரர்களும் பொதுமக்களும் அதைப் பின்பற்றுகிறார்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

plastic waste

அதேபோலத்தான் நம் அண்டை மாநிலமான கேரளாவிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களும் இதைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது. நம் தமிழகத்திலும் சில சமயம் பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்கிறார்கள். ஆனால் நாம் யாரும் அதைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. அரசாங்கமும் அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது இல்லை. எப்போது தடை செய்கிறார்கள்? எப்போது அதை நீக்குகிறார்கள்? என்பதே தெரியாமல் இருக்கிறது. நம்மவர்கள், அதிலும் குறிப்பாகச் சென்னையில் குப்பையில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள்தான் காணப்படுகின்றன. காய்கறிக் கழிவுகளையும் மிகுந்து போன உணவையும் பிளாஸ்டிக் பைகளில் போட்டு, குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறார்கள். அந்த உணவைச் சாப்பிடும் மாடுகள், பிளாஸ்டிக் பையோடு சேர்த்து சாப்பிடுகின்றன. அந்தக் காட்சி காண்பதற்கே கண்றாவியாக இருக்கிறது. பின்னர் அந்தப் பசு தரும் பாலைத் தானே பதப்படுத்தி நாம் பயன்படுத்துகிறோம்? அதனால் நமக்கும் தானே கெடுதல்?

நம் மக்கள் காய் வாங்கக் கடைக்குப் போகிறோம் என்று தெரிந்திருந்தாலும் கையில் பை எடுத்துப் போவதில்லை. அப்படியே போனாலும் வேறு வேறு காய்கறிகளை வாங்கிவிட்டு  கடைக் காரர்களிடம் பிளாஸ்டிக் பையைக் கேட்டு வாங்குகிறார்கள். இந்த எண்ணம் மாற வேண்டும். கூடுமானவரை பை எடுத்துப் போக நாம் பழகிக்கொள்ள வேண்டும். நான் கடைக்குச் செல்லும்போதெல்லாம் பக்கத்திலிருப்பவர் பிளாஸ்டிக் பை கேட்டால் அதன் தீமைகளைச் சுருக்கமாகக் கூறி அதைத் தவிர்க்கும்படி சொல்லுவேன். இதனால் சில சமயம் கெட்ட வார்த்தையில் திட்டுக் கூட வாங்கியிருக்கிறேன். ஆனால் என்னால் ஆன முயற்சி. ஒரு நாளில் ஒருவரிடமாவது அதைச் சொல்லி விட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இதை ஒரு சடங்கு போல் பின்பற்றி வருகிறேன்.

நாம் நம் குழந்தைகளுக்கு விட்டுப் போகும் மிகப் பேரிய சொத்து, நம் முன்னோர்கள் நம்மிடம் தூய்மையாக ஒப்படைத்த இந்த பூமியை அதன் தூய்மைக்குப் பெரிதும் பங்கம் வராமல் அதை அவர்களிடம் ஒப்படைப்பதே. அதற்கான சிறு முயற்சியாய் நாம் ஏன் இதைச் செய்யக் கூடாது? அரசாங்கம் தடை செய்யும்போது செய்யட்டும். நாம் இன்று முதல் ஏன் இந்த நிமிடம் முதல் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்த்து விடுவோம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம். இது பற்றி நம் குழந்தைகளுக்கும் எடுத்துக் கூறுவோம்.

நம் வீட்டுக் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டாகப் பிரிக்கலாம். காய்கறிக் கழிவு, உணவுப் பொருட்கள், காகிதங்கள் முதலியன மக்கும் குப்பை வகையைச் சேர்ந்தவை. இதர பொருட்களான பிளாஸ்டிக் கழிவுகள் (டூத் பிரஷ்கள், பயன் படுத்திய பற்பசை டியூபுகள், போன்றவை) ஆகியவை மக்காக் குப்பைகள் வகையைச் சேர்ந்தவை. இந்த மக்காக் குப்பைகள் மண்ணைச் சென்று அடையும் போது அதனால் நில வளம் பாதிக்கப்படும். நல்ல வளமான மண் தன் தன்மையை இழக்கலாம். மேலும் பிளாஸ்டிக் மக்குவதற்கு நீண்ட வருடங்கள் பிடிக்கும் என்று முன்பே கூறியிருக்கிறேன் (அப்படியும் முழுமையாக மக்காதாம்).

அதனால் இந்த மக்காக் குப்பைகளை தனியே எடுத்து வைத்து, மறு சுழற்சிக்கு அனுப்பலாம். மறு சுழற்சி என்றவுடன் ஏதாவது தொழிற்சாலையைத் தேடிச் சென்று கொடுக்க வேண்டுமோ என்று நினைக்க வேண்டாம். நம் வீட்டுக்கு வரும் பழைய பேப்பர்க்காரரிடம் கொடுத்தால், அவர் அதை மறு சுழற்சிக்கு அனுப்பிவிடுவார். அந்தப் பணம் உனக்கு என்று நம் குழந்தைகளிடம் சொல்லி விட்டால், வீட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை அவர்களே தேடி எடுத்து, தனியாக ஒரு பையில் போட்டு வைக்கக் கற்றுக்கொள்வார்கள். இது அவர்களுக்கும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.

மாசுகளற்ற நல்ல பூமியை நாம் அடுத்த தலைமுறைக்கு அளிக்க உறுதி எடுத்துக்கொண்டு, மணல் நிறைந்த நன்னீராற்றில் நிலவொளியில் ஒரு குளியல் போட கனவு காண்போம்.

(மேலும் நனைவோம்….

==================================================

படங்களுக்கு நன்றி – விக்கிப்பீடியா, http://www.projectsmonitor.com

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 17

  1. பிளாஸ்டிக் பற்றி மிகவும் அருமையாக சொல்லி இருக்கறீர்கள். எந்த பொருளின் நன்மை மற்றும் தீமை பயன்படுத்துபவர் கையில் தான் உள்ளது.

    ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்கள் கூறியது போல மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று அன்றாடம் சேகரித்தால் சுற்று புற சூழ்நிலையை பாதுகாக்கலாம். அரசாங்கமும் குப்பைகளை கொட்டுவதற்கு வசதியாக மக்கும் குப்பைதொட்டி மற்றும் மக்காத குப்பைதொட்டி என்று வைக்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் இதை அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மிகவும் அருமையாக எழுதிய ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி.

  2. இந்த கட்டுரை உண்மையிலே மனதை தொடும் வகையில் இருந்தது. மாசுகளற்ற நல்ல பூமியை நாம் அடுத்த தலைமுறைக்கு அளிக்க இநதிய குடிமகன் அனைவரும் முன் வரவேண்டும் . நல்ல உள்ளம் இறைவன் இல்லம் என்பார்கள் . தங்கள் இது போல் நல்ல கருத்துகளை படைக்குமாறு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வேண்டிகொள்கிறேன்.

    என்றும் தங்கள் வாசகன்
    மு ஸ்ரீதரன்

  3. good article….bring out more of these neighbourhood social awareness issues which we all have not known or read somewhere during our school days but forgotten over a period…you can also start conducting small social awareness programs in your neighbourhood…….just a suggestion!!

    continue the good work…..all the best.

  4. Good article once again. I would consciously start carrying a non-plastic bag when I go out for shopping from now on. You have said that cows are eating plastic along with waste food. But are we seeing cows these days in streets?? Now I have given a topic for your next article on extinction 🙂

  5. Really Good Article. As soon as before I read this article, I had a bad impression about plastics and Madam has explained the biggest advantages of plastics also. Due to some bad habits and irresponsibility we are using the carry bag without knowing the background of that.

    I promise you, from now onwards, I will not use the carry bag and I recommend others also not to use.

    Thanks to Mami for taking this valuable resolution. and Appreciate for Good thought

    K. Ramesh

  6. This article really opened my eyes. My bad impression on plastic is now completely changed. Though some people may not like it, I think it is a good topic. Those who don’t like this topic just don’t care about our environment. I hope their eyes will be opened sometime or the other.

  7. இப்பவும் தாங்கள் எழுதிய கட்டுரை படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் மற்றும் அதன் தீமைகள் நன்கு அறிந்து கொண்டேன். என்னால் முடிந்தவரை தங்களின் கருத்துகளை என் நண்பர்களுக்கு தெரியபடுத்துகிறேன் .

    என்றும் அன்புடன்
    சாரதா ஸ்ரீதரன்
    ஆசிரியர் – மேல்நிலைப்பள்ளி – சென்னை

  8. பிளாஸ்டிக் பற்றிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என் மனத்தை தொட்டது இது பற்றி என் குழந்தைகளுக்கும் எடுத்துக் கூறுவேன்

    நன்றி, நன்றி,, நன்றி…

  9. I can remember, in my younger age we didn’t use plastic bags. We always used cloth bags. It is not difficult to change this situation. As our madam if every citizen really took care about environment, definitely our future generation will enjoy the clear environment. Nice article madam. Keep it up.

  10. Very nice article.Today onwards i will also follow your words.My family will be a drop good environment makers.Every citizen should have the awareness to make our environment healthy.Thanks for your work.

  11. உங்களுடைய கட்டுரை வித்தியாசமாகவும், புதிய சிந்தனையிலும் அமைந்துள்ளது. அனைவருக்கும் இது ஒரு பயனுள்ள தகவல் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *