வீரப் பெண்கள்

அண்ணாகண்ணன்

Annakannan

செய்யெனில் கேட்பாள், செய்யாயின் என்ன?
செய்யாதே என்று செப்பினாள் கேட்பாள்:
செய்தால் என்ன? எதிர்ப்பதக் கேள்வி
எழுப்பித் தெளிந்தபின் எதையும் செய்யும்
பெருத்த முழக்கவர் பேதைப் பெண்களாம்.

தீவிரப் பிழம்பைத் தெறிப்புற ஏந்தி
எத்தகை துக்கம் எழும்பிடும் போதும்
எற்றி உதைத்தே எதிர்நடை போடும்
பிரகடனத்தவர் பெதும்பைப் பெண்களாம்.

திட்டம் தீட்டித் திறம்படச் செயல்படும்
மதிநுட்பத்தை மகுடமாய்ச் சூடி
வெட்டொன்றாயின் துண்டிரண் டாக்கும்
மறம் மலிந்தவர் மங்கையர் ஆவராம்.

வாழ்க்கை என்கிற சதுரங் கத்தில்
காய்களை நகர்த்திக் கணக்கை முடிக்க
வாய்பேசாது செயலினில் பேசும்
வாலிபச் சித்தர் மடந்தையர் ஆவராம்.

மூடக் குழியில் முடங்கிய பேரைக்
கூட இழுத்துக் கொலுவுறச் செய்து,
தேடலின் பாடலைத் தினம்தினம் பாடும்
ஆடக விழியர் அரிவையர் ஆவராம்.

முலாம் பூசிவரும் முகங்களின் முன்னே
ஒப்பனை தரிக்கும் உயிர்களின் முன்னே
உண்மைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்
ஜீவ தேவியர் தெரிவையர் ஆவராம்.

அர்த்த நர்த்தனம் ஆடி, மனமெனும்
கர்ப்பக் கிரகத்தில் கவிதைகள் பாடி
நடுநிலை வகிக்கும் நாகரிகத்துடன்
அனுபவச் சிறகை அடித்துப் பறக்கும்
பிரபஞ்ச மெளனியர் பேரிளம் பெண்களாம்.

செயற்கை நெடியின் இறுக்கம் பொறாமல்
நியம  எஃகை நெஞ்ச நெருப்பால்
வசதியாய் வளைத்து வழி சமைப்பதிலே
தேரிய பேர்கள் தீரப் பெண்களாம்.

எதனை இயலாது என்று இயம்பினரோ
அதனை முதலில் நிகழ்த்திக் காட்டி,
இயம்பிய வார்த்தைக்கு எடைக்கு எடை சமமாய்ச்
சுயர்ஒளிர் கருத்தைச் சுடச்சுடக் கொடுக்கும்
வலி மிகுந்தவர் வைரியப் பெண்களாம்.

காரணங்களுக்கு விடை கொடுத்துவிட்டுக்
காரியங்களுக்கு மடை திறப்பதனால்
மலர்மறப் பெண்கள் மதியொளிர் மதிப்பில்
இலக்கை அடைவதே இயற்கை ஆதலால்
தோழியர் நெஞ்சத் தூய்மையின் நாமம்
வாழிய வென்று வாழ்த்துவம் நாமே.

(அண்ணாகண்ணனின் ‘உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து – முதல் பதிப்பு: 1997 நவம்பர்)

அண்ணாகண்ணன்

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் இளம் முனைவர்; ‘தமிழில் மின் ஆளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.

Share

About the Author

அண்ணாகண்ணன்

has written 86 stories on this site.

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர்; 'தமிழில் மின் ஆளுகை' என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.

4 Comments on “வீரப் பெண்கள்”

 • ரேவதிநரசிம்ஹன் wrote on 8 March, 2011, 9:39

  மங்கையர் தினத்துக்கு அஞ்சலி இந்தக் கவிதை. வீரம் விளைய ஆக்கம் கொடுக்கும் வரிகள்.
  அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

 • shobha premkumar wrote on 8 March, 2011, 10:09

  Excellent , .encouraging for all women .

 • ஷைலஜா
  shylaja wrote on 8 March, 2011, 11:12

  awesome poem!

 • Ilango wrote on 12 April, 2011, 10:45

  Thamizh mozhiyil mattume pengalin paruvathukkerpa mangai, pethai, pethumbai enrellam azhaikka sorkal irukkinrana. andha paruvathukkellam nalla vilakkam solliyirukkiraar kavignar. vaazhga avar tham pulamai.

Write a Comment [மறுமொழி இடவும்]


+ 2 = six


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.