நார்வேயிலிருந்து நடிக்க வந்துள்ள புதுமுகம்
பாலு மகேந்திரா, வி.சி. குகநாதன் ஆகியோர் ஏற்கெனவே தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்துள்ளனர். அண்மையில் ஆடுகளம் படத்தின் மூலம் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன், சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற பெயரை ஒரே படத்தில் பெற்றுள்ளார். தமிழ்த் திரைத் துறையில் இலங்கைத் தமிழர்களின் பங்கு, சற்றே அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்துள்ளார், வருண்.
ஆர்.கே. நாயகனாக நடிக்கும் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தில், இரண்டாவது நாயகனாக அறிமுகமாகிறார், நார்வேயில் வசிக்கும் வருண். இவரின் பெற்றோருக்குப் பூர்வீகம் இலங்கை என்றாலும், வருண் பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாம் நார்வேதான்.
மருத்துவத் துறையில் இரண்டாண்டு படிப்பை முடித்துள்ள வருணுக்கு, திடீரெனக் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தில் இரண்டாம் ஹீரோவாக வாய்ப்பு வந்தது. தயாரிப்பாளர் ஏ. சி. ஆனந்தன், வருணுக்கு உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் என்கவுன்டர் ஸ்பெலிஸ்ட் குழுவில் ஒருவராக வருண் வருகிறார். இவருக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து வருண் கூறுகையில், “இந்தப் படத்தில் நடிக்க வரும் முன்பு, சினிமாவில் நடிப்பது குறித்து எந்த ஐடியாவும் இல்லை. வாய்ப்பு வந்ததும் படிப்புக்குக் கொஞ்சம் பிரேக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். படம் முடிந்த பிறகு படிப்பைத் தொடரும் எண்ணமுள்ளது. அதே நேரம் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளேன்.
படத்தில் நான் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறேன். இதில் நடிக்கத் தேவையான குறிப்புகளை எனக்குச் சொன்னவர் படத்தின் நாயகன் ஆர்.கே.தான். அவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். போலீஸ் வேடத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் பயிற்சி கொடுத்தவரே அவர்தான்.
ஏதோ வாழ்ந்தோம், போனோம் என்றில்லாமல், வரலாற்றில் ஏதோ ஒரு இடத்தில் நமது பெயரும் பதிவாக வேண்டும் என்ற ஆசை, இந்த வகையில் நிறைவேறியுள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.
‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தை ஆப்பிள் புரொடக்சன்ஸ் சார்பில் ஏ. சி. ஆனந்தன் தயாரிக்கிறார். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார்.
============================
தகவல்: மக்கள் தொடர்பாளர் அ.ஜான்
50 ஆண்டுகளுக்கு முன் இணுவிலைச் சேர்ந்த தவமணிதேவி கவர்ச்சிப் புயலாக நடித்தவர், சிலோன் விசயேந்திரன் இளவாலையார், நவரச நடிகர், செய்ஆகாசர் தமிழிலும் தெலுங்கிலும் புயல் கிளப்பி முன்னிலைக் கதாநாயகனாக உள்ளார் மானிப்பாயார், தங்கவேலாயுதன் இராமேச்சரத்தில் பங்காற்றினார், சுண்டிக்குளி மனோகரன் பைலாப் பாட்டுகளைத் தமிழ்த் திரைக்குள் அறிமுகம் செய்து நடித்தவர். அப்துல் அமீது, மதுரா பாலன் என முகம் தெரியாத, பெயர் தெரியாத ஈழத்தமிழர் பலர் தமிழ்த்திரைக்குப் பங்காற்றி வருகின்றனர்.சினிமாசு குணரத்தினம் பல படங்களைத் தயாரித்தவர். எந்திரன் திரைப்படத் தயாரிப்பாளர் கருணாமூர்த்தி இணுவிலார். திரைத்துறையில் தயாரிப்பாளராக முகம் தெரியாத, சொல்லவிரும்பாத ஈழத்தமிழர் கோடம்பாக்கத்தில் முகாமிட்டுள்ளனர்.