அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (38)

1

பெரியார் அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 2

சுபாஷிணி

-போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.
-கம்பியில்லாத தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப்பையிலும் இருக்கும்.
-ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
-உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து -ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.

இனிவரும் உலகம்  – தந்தை பெரியார்

‘ஆகா.. இன்றைய சூழலின் நிலையை அன்றே சொல்லிய தீர்க்கதரிசி’ என யாரேகினும் அதிசயத்தையும் மாய உணர்வுகளையும் இவர் மேல் வலியத்திணித்தால் நிச்சயம் கோபம் கொள்வார் தந்தை பெரியார். நிகழ்கால நிலையை உலகக்கண்ணோட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையையும் உருவாக்கக் கூடிய சாத்தியங்களைக் கற்பனை செய்து பார்த்து சுய அறிவைக் கொண்டு செயல்படும் போது மனித சிந்தனை வருங்கால நிகழ்வுகளையும் ஓரளவு திட்டமிடக்கூடிய வல்லமையைப் பெறும். ஆயினும் மூட நம்பிக்கையிலும் மூடப் பழக்க வழக்கங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாது அல்லலுறும் பல மனிதர்களுக்கு அதிசயங்களும் மாயஜாலங்களும் மாய மந்திரங்களுமே உலகை நடத்துவதானதாக ஒரு எண்ணம் உறுதியாக இருக்கின்றது.

asu1

மக்கள் பெரும்பாலும் பழமை வாதத்தைப் பிடித்துக் கொண்டு, மாறி வரும் புதிய உலகிற்கு ஏற்றவர்களாக தம்மை தயார்படுத்திக் கொள்ள ஒப்பற்ற பரிசாக இருக்கும் கல்வியினைப் பெற்று ஆண் பெண் பேதமின்று இருபாலரும் சிந்தனை வளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் அனுபவிக்கும் திறன் கொண்டோரோக இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்காக மக்களை சந்தித்து தமது சொற்பொழிவுகளின் வழியாகவும் பத்திரிக்கைகளின் வழியாகவும் தமது கருத்துக்களை பரப்பியவர் திரு.ஈ.வெ.ரா அவர்கள்.

இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் பெரியார் எழுதிய சில கடிதங்களும், பெரியாருக்கு ஏனைய சிலர் எழுதிய கடிதங்களும் இருக்கின்றன. திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை 6.6.1928ம் தேதியிட்டு எழுதிய கடிதம் ஒன்று இங்கு காட்சிக்கு உள்ளது. அது போல பேரறிஞர் அண்ணா எழுதிய ஒரு கடிதமும், மூதறிஞர் திரு.இராஜாஜி 8.1.1925ம் தேதியிட்டு எழுதிய கடிதம் ஒன்றும் இங்கே உள்ளது.

பெரியார் பயன்படுத்திய சில பொருட்கள், நாற்காலி, உடைகள் என்பனவும் பாதுகாப்பாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

asu2

பெரியார் ஆரம்பித்து நடத்திய பத்திரிக்கைகள் குறிப்பிடத்தக்க என்ணிக்கையில் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள தகவலின் படி கீழ்க்காணும் தினசரி, வார மாத இதழ்கள் தந்தை பெரியார் அவர்களால் தொடக்கப்பட்டவையாக அறிய முடிகின்றது.

குடியரசு வார ஏடு – துவக்கிய நாள் 2.5.1925
திராவிடன் தினசரி ஏடு – துவக்கிய நாள் செப்டம்பர் 1927
ரிவோல்ட் வார ஏடு (ஆங்கிலம்) – துவக்கிய நாள் 6.11.1928
புரட்சி வார ஏடு – துவக்கிய நாள் 20.11.1933
பகுத்தறிவு வார ஏடு – துவக்கிய நாள் 15.3.1934
விடுதலை நாளேடு – துவக்கிய நாள்1.6.1935
திராவிட நாடு வார ஏடு – துவக்கிய நாள் 7.3.1942
லிபரேட்டர் (ஆங்கிலம்) நாளேடு – துவக்கிய நாள்7.12.1942
உண்மை (மாதம் இரு முறை) இதழ் – துவக்கிய நாள் 14.1.1970
தி மாடர்ட் ரேசனாலிஸ்ட் (ஆங்கில மாத இதழ்) – துவக்கிய நாள் செப்டம்பர் 1971

asu3
எழுத்துக்களின் வழி சமூகப்புரட்சியைச் செய்வது என்பது சாதாரண மக்களையும் சென்றடையக்கூடிய ஒரு யுக்தி. பொதுமக்களின் சிந்தனையில் படிப்படியாக தெளிவினை கொடுத்து சிந்திக்கச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு மிக முக்கியமானது மக்களை பலதரப்பட்ட நாட்டு நிலவரங்கள் அடங்கிய, விழிப்புணர்வினைத் தரக்கூடிய பத்திரிக்கை செய்திகள் தாம்.

asu4

இன்றைய காலகட்டத்தில் பத்திரிக்கை துறை என்பது மிக விரிவாக வளர்ந்துவிட்டது. பத்திரிக்கைகள் மக்களுக்கு உள்ளூர் மற்றும் உலக விஷயங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது ஒரு புறம் இருக்க தேவையற்ற மலிவான தரமற்ற விசயங்களையும் வழங்கி பொது மக்களின் வாசிப்பு நோக்கத்தினை திசை திருப்பும் பணியையும் மேற்கொள்வது ஒரு விதமான சமூக சீர்கேடு என்றே கருதத் தூண்டுகின்றது. ஆனால் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பத்திரிக்கைகள் என்பன மக்கள் மத்தியில் சுதந்திர தாகத்தை உருவாக்கவும், சமூக சீர்கேட்டினைச் சரி செய்யவும், தொழிலாளர் நலனுக்காகவும் என்ற வகையில் சமூகப் பார்வையை முன் வைத்து தொடங்கப்பட்டன. அதன் நோக்கம் மிக உயரியதாக இருந்ததால் அதன் விளைவாக பொது மக்கள் மத்தியிலே கல்விச் சிந்தனை, புதுமை சிந்தனை, பொது நலச்சிந்தனை, விரிவான மாற்றம் புரட்சிகரமான சிந்தனை ஆகியற்றிற்கு வித்திட்ட பங்கினையும் பத்திரிக்கைகள் ஆற்றின.

தொடரும்…

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (38)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *