தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்? – மறுமொழி

0

இன்னம்பூரான்
10 02 2017

five_elements2 (1)

வல்லமை இதழாசிரியரின், ‘தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்? என்ற கட்டுரை சிந்தனையை தூண்டுவது மட்டுமல்லாமல், கடந்த கால நினைவுகளை அசை போட செய்கிறது. நிகழ்காலத்தைக் கண்டு கலங்க வைக்கிறது. வருங்காலத்து பற்றிய கவலைகளை அதிகரிக்க வைக்கிறது. ஒரு வரி பதில் எளிது. தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது தமிழர்கள் மட்டுமே என்று முரசு கொட்டலாம்; அல்லது பிலாக்கணம் பாடலாம். முதற்கண்ணாக, பவள சங்கரி,

’எந்த அரசியல் கட்சியையும் சாராத என் போன்று பொது மக்கள் பலருக்கும் ஒரு கட்சித் தலைவராக ஜெயலலிதா மீது பல வகையான கருத்து வேறுபாடுகளும், வருத்தங்களும் இருந்தாலும், ஒரு நாட்டின் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சாமான்ய மக்களின் நிலை குறித்த அச்சம் ஏற்படுவதில் ஆச்சரியமென்ன?’

என்று எழுப்பும் வினாவை பற்றி சற்றே விலாவாரியாக அலசுவோம். ‘கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? என்று வரும் திங்களுக்குள் தெரியபடுத்தவேண்டும் என்று உயர் நீதி மன்றம் இப்போது (காலை 11 மணி: 10 2 2017) கேட்பதே சாமான்ய மக்களின் அச்சத்தை பிரதிபலிக்கிறது. நேற்று என் தொலைக்காட்சி இயந்திரம் பழுது பட்டு இருந்ததால், நிம்மதியாக இருந்தேன். பின்னர் பல அவலக்காட்சிகளை கண்டு மனம் வெதும்பினேன். நான் கட்சி சாராதவன் மட்டுமல்ல; பிரகாசம் காரு முதல் ஜெயலலிதா வரை நடந்த அரசியல் காட்சிகளை நேரில் கண்டவன். 1969ம் வருடம் வீழ்த்தப்பட்ட தமிழனின் நற்பண்பு இன்றும் மிதிபட்டுத்தான் கிடக்கிறது. மூலகாரணம், தமிழனின் தரம் குறைந்தது தான். தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள்கிறான்.

“.. மக்களின் மன நிலை எப்படியிருக்கும் என்று சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவரவர் தாங்கள் பிழைக்கும் வழியை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே!…”

சட்டை போடாத சா.கணேசன் என்ற தேசபக்தன் ஒருவர் இருந்தார். ‘பணம் கொடுத்து வாக்கு வாங்கும் பணநெறியை இந்தியா கண்டதன்று’ என்ற அந்த சான்றோனின் வாக்கு பொய்த்து விட்டதே! இரண்டு திராவிடகட்சிகளும் செல்லாத நோட்டும் செல்லும் நோட்டுமாக அள்ளிக்கொடுப்பதை ஏற்கும், ‘திரு அமங்கலம் புகழ்’ தமிழன் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த சட்ட மன்ற உறுப்பினர் மக்களின் மனநிலையை பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? அவரவர் பிழைக்கும் வழியை இலக்காக வைத்துத்தானே மக்கள் மீது முதலீடு நடந்தது. எனவே, இதழாசிரியரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது!

‘இந்த நாடு எப்படி விளங்கும்? ‘

மெத்த கடினம். ஜனம் நாயக பொறுப்பை தாமதமானால் கூட, கல்லும், முள்ளும் ஆன பாதையில் நடந்து, லஞ்சம் வாங்காமல் நிறைவேற்ற முயன்றால் கூட போதும். வெற்றி நமதே.

மனித உரிமை கமிஷன் என்று ஒன்று இருக்கிறதே? அதுகூட விலைபோய் விட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு அமைதியாக இருக்கிறதே!

மனித உரிமை கமிஷன் தலையிட வாய்ப்பில்லை. அது விலை போனதாக தோற்றமில்லை.

‘பிச்சைக்காரர்கள் போல துச்சமாக எண்ணி நம்மைக் கூறு போடத் துடிக்கும் இந்த அரசியல் வியாதிகளின் சுயரூபங்களை புரிந்து கொள்ளவேண்டிய கடைசி வாய்ப்பு. இதிலும் ஏமாந்து போனால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.’

இதழாசிரியரின் இந்த கருத்தை பிட் நோட்டீஸ் அடித்து, பட்டி,தொட்டி எங்கும் பரப்பவேண்டும். ஃப்ளெக்ஸ் பதாகைகள் கூட வைக்கலாம். தலைப்பு: ஏமாறதே! ஏமாறாதே!

‘இன்று நாட்டின் நிலை என்ன என்று எந்த அரசியல் தலைவர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.’

கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக, இந்த அவல நிலை, தமிழ்நாட்டில்.

அவரவர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள போராடுவதே முக்கியப்பணியாக கொண்டிருக்கிறார்கள்.

ஆம். அவர்கள் நிழல் யுத்த மன்னர்கள்.

விவசாயிகளின் தற்கொலைகள் கூட இன்று சாதாரண செய்தியாகிவிட்டது.

இங்கு ஒரு ஐயம் எழுகிறது. இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்கோலத்தை பொதிகையில் காண்பித்தார்கள். அது வேளாண்மை பிராந்தியம்; கிராமீயம். ஆனால் ஜல்லிக்கட்டு வரவு செலவு லக்ஷக்கணக்கில். எங்கிருந்து அந்த பணம் வந்தது? விவசாயம் நன்கு நடைபெற்றால், தரகு ஒழிந்தால், விவசாயிகள் செல்வந்தர் ஆகலாம். அப்படியா, ஜல்லிக்கட்டார் திரவியம் சேகரித்தனர்? அப்படியானால், விவசாயிகள் ( ப.சிதம்பரம் போன்ற காஃபி எஸ்டேட்டார்) வருமான வரி கட்டலாமே!

இந்த ஏறு தழுவதல் மற்ற ஜாபிதாவுக்கு சால்ஜாப்பு. வாடிவாசலில் மிரட்டப்படும் காளைகள் பீதியில் ஓடி வர, இளந்தாரி ‘வீரர்கள்’ கும்பலாகப் பாய்ந்து அவற்றை துன்புறுத்துகின்றனர். இது சங்க கால பண்பாடு என்றால், அக நானூற்று பகற்குறியும், சங்க கால பண்பாடு தான். நம் வீராதி வீர, சூராதி சூர, தீராதி தீரர்கள் ஒரு வெம்புலியுடன் சண்டைப்போட்டு, ஒரு பெண்புலியை சம்பாதிக்கட்டுமே.

பக்கத்து ஊரான பள்ளிபாளையத்தில் தண்ணீர் குழாய்கள் சரியாக கவனிக்கப்படாமல் தெருவில் கீழே போய்க்கொண்டிருக்கிறது. இதை நான் நேற்று நேரில் கண்ட நிலவரம். நாட்டின் நிர்வாகம் இந்த இலட்சணத்தில் இருந்தால் மக்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது?

இது மக்களின் உதாசீனம் கலந்த நிர்வாக அலட்சியம். We need Citizen-Auditors. Can be done with professional expertise.

இதையெல்லாம் பற்றி எந்த கவலையும் இல்லாமல் சசிகலா அம்மையார் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று பேராசை கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

கேள்வி சசிகலாவுடனேயோ, பன்னீர்செல்வத்துடனோ, இந்த இழை நிற்கவில்லை. சிண்டு, கூடு விட்டு கூடு பாயும் நிலை. பின்ணணி வினா: அரசு மேலாண்மையை நிர்ணயிக்கும் தகுதியுடனா, மக்களின் பிரிதிநிதிகள் இருக்கிறார்கள்? அவர்கள் தன்னிச்சையாக இயங்குகிறார்களா? மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறார்களா? என்பதே. இன்றைய தமிழ்நாட்டு அரசியலின் தன்மை வெட்கத்தால் தலை குனிய வைக்கிறது. தற்காலம், அது தொங்கலில் இருப்பதாலும், அசாதாரணமான தாமதத்திற்கு பின், சசிகலா சம்பந்தப்பட்ட வழக்கை உச்ச நீத் மன்றம் எடுத்துக்கொள்ளப்போவதாக சுட்டியதாலும், மவுனம் காக்கவேண்டியிருக்கிறது. எந்த கட்சி பதவியிலிருந்தாலும் வன்முறைக்கு பஞ்சமில்லை என்பதும் உண்மை.

ஒரு இறுதி வரி: தமிழா! உன் விதி உன் கையில் மட்டும் தான் இருக்கிறது.
-#-
சித்திரத்துக்கு நன்றி:
http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SeLi1gU7fSI/AAAAAAAAANk/OAmRnHuE8R0/s400/five_elements2+(1).jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *