சுடர்விடும் நின் புகழ்!
முனைவர் சி. சேதுராமன்,
தமிழாய்வுத்துறைத்தலைவர், மா.மன்னர் கல்லூரி,புதுக்கோட்டை.
(சென்னை – அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சாந்தா அம்மையார் அவர்களுக்கு அஞ்சலி)
சாந்தத்தைப் பிறர்க்குத் தந்த
சக்தியின் வடிவம் நீங்கள்
காந்தமாய் நின்ற புற்று நோயை
உங்கள் சாந்தத்தால் விரட்டினீர்கள்
பாந்தமாம் உங்கள் பண்பு
பாரிலே யார்க்கும் உண்டோ?
பந்தமில் உறவுக்கிங்கே
பாசமாம் தாயுமானீர்
ஏதமில் எங்கள் தாயே!
ஏழையேம் எம்மைவிட்டு
ஏன் நீங்கள் வானம் சென்றீர்?
உம்மை யாம் இழந்ததாலே
ஏதிலிகள் ஆனோம் இன்று!
இன்பத்தைக் காண்போம் என்று?
புற்றுநோயினை அழித்துப் பலரின்
வாழ்வினைச் செழிக்கச் செய்தாய்!
பற்றின்றி வாழ்ந்த தாயே!
பாரெலாம் உன்றன் பேரே
பரவியே நிற்கும் என்றும்!
பாரதத் திருமகளே!
பார்க்கெலாம் திலகமானாய்!
சாந்தத்தின் வடிவமானாய்!
மருத்துவத் துறையில் என்றும்
மனிதத்தைக் காத்த தாயே!
மருவிலா உந்தன் வாழ்க்கை
மானிடர்க்குப் பாடம் என்றும்
மாசிலா எங்கள் தாயே! உம்மை
மாநிலம் போற்றும் நாளும்!
மக்களின் மனதில் வாழ்வாய்!
மா நிலத்திற்கே ஒளியுமாவாய்!
குன்றினில் விளக்கைப் போல என்றும்
சுடர்விடும் நின்றன் புகழே!