குறளின் கதிர்களாய்…(340)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(340)

கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

– திருக்குறள் – 722 (அவை அஞ்சாமை)

புதுக் கவிதையில்...

கற்றோர் நிறைந்த அவையில்
அவர் முன்
தாம் கற்றதை
அவர் மனத்தில் பதியுமாறு
எடுத்துரைக்க வல்லவரே,
கல்வி கற்றோருள் நன்கு
கற்றவரென மதிக்கப்படுவர்…!

குறும்பாவில்...

கற்றோர் அவையில் தாம்
கற்றவைகளை அவர்கள் மனதுக்கேற்ப சொல்லவல்லாரே
கற்றோருள்ளும் மிகக்கற்றவரெனக் கருதப்படுவர்…!

மரபுக் கவிதையில்...

கற்றோர் பலரும் நிறைந்திருக்கும்
கண்ணிய மிக்க அவையதிலே
முற்றிலும் அவர்கள் மனம்மகிழ்ந்தே
முழுதும் விரும்பிக் கேட்டிடத்தான்
கற்ற வற்றை எடுத்துரைக்கும்
கலையை யறிந்த வல்லவர்தான்
கற்ற றிந்த பலருள்ளும்
கல்வியி லுயர்ந்ததாய் ஆவாரே…!

லிமரைக்கூ..

கற்றோர் அவையில் சொல்லுவார்
கற்றவற்றைக் கற்றவர் மனத்திற் கேற்றபடி,
கற்றாரிலுயர்ந்தா ரெனும்பேர் வெல்லுவார்…!

கிராமிய பாணியில்...

மதிப்புவரும் மதிப்புவரும்
படிச்ச படிப்புக்கு மதிப்புவரும்,
படிச்சவங்க சபயில
படிச்சதத் தெளிவா
பயமில்லாம எடுத்துச்சொன்னாத்தான்
படிச்ச படிப்புக்கு மதிப்புவரும்..

படிச்சவங்க நெறஞ்ச சபயில
பயமில்லாம
அவங்க மனசுக்கேத்தபடி
படிச்சத எடுத்துச் சொல்லுறவன்தான்
படிச்சவங்களிலயெல்லாம்
ஒசந்தவனுண்ணு
ஒலகம் சொல்லுமே..

பாத்துக்கோ
மதிப்புவரும் மதிப்புவரும்
படிச்ச படிப்புக்கு மதிப்புவரும்,
படிச்சவங்க சபயில
படிச்சதத் தெளிவா
பயமில்லாம எடுத்துச்சொன்னாத்தான்
படிச்ச படிப்புக்கு மதிப்புவரும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.