குறளின் கதிர்களாய்…(341)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(341)

சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கு மரிது.

– திருக்குறள் – 647 (சொல்வன்மை)

புதுக் கவிதையில்...

எண்ணியதைப் பிறர்
ஏற்றிடும்படிச் சொல்லும்
ஆற்றல் மிக்கவன்,
சொல்லிடும் செய்தி
சொல்லிடக் கடினமானதெனிலும்
சோர்வுறாமல் சொல்பவன்,
கேட்பவர்
பகையாளர் என்றாலும்
பயமில்லாதவன் எனப்
போற்றப்படும் இவனை
மாறுபாட்டால் வெல்வதென்பது
எவர்க்கும்
மிக அரிதாகும்…!

குறும்பாவில்...

புரியும்படி எடுத்துச்சொல்வதில் வல்லவனாய்
கடினமான செய்தியையும் சோர்வுறாமல் சொல்பவனாய்
அஞ்சாதவனை மாறுபாட்டால் வெல்வதரிது…!

மரபுக் கவிதையில்...

சொல்ல எண்ணிடும் சேதியினைச்
சொல்லும் வகையில் சொல்லியேதான்
எல்லோர் மனத்தையும் ஈர்ப்பவனாய்,
எந்தக் கடினச் செய்தியையும்
சொல்லிடச் சோர்வு கொளாதவனாய்,
சுற்றிலும் பகைவரே யிருந்தாலும்
சொல்லிட அச்சமே யிலாதவனைச்
சூழ்ந்தும் வென்றிடல் அரிதாமே…!

லிமரைக்கூ..

பிறரறியும் வகையில் சொல்லல்
சோர்வுறாமை அஞ்சாமை அமைந்திருந்தால் ஒருவனிடம்,
மிகவரிதாம் அவனை வெல்லல்…!

கிராமிய பாணியில்...

வேணும் வேணும்
தெறம வேணும்,
மனுசனுக்கு வேணும் நல்ல
பேச்சுத் தெறம..

தன் மனசுல உள்ளதத்
தெளிவா மத்தவங்க
புரியும்படி பேசத்தெரிஞ்சவனா,
கடினமான பேச்சிக்கும்
களச்சிப் போவாதவனா,
எதிரிக்கும் பயப்படாதவனா இருக்கவன
எப்புடி எதுத்தாலும்
செயிக்கிறது ரெம்ப செரமந்தான்..

அதால
வேணும் வேணும்
தெறம வேணும்,
மனுசனுக்கு வேணும் நல்ல
பேச்சுத் தெறம…!

About செண்பக ஜெகதீசன்

இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்...

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க