அண்ணாமலை சுகுமாரன்

வீட்டு நெறிப் பால், அதிகாரம் 2 – உடம்பின் பயன்

உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே

யுணர்க உணர்வுடையார்

உடம்பினால் ஏற்பட்ட பயனெல்லாம் அறிவினை உண்டு பண்ணுவதற்கே ஆகும். இதை அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள். என்கிறது இந்தக் குறள். உடம்பில் பல உணர்வு உண்டு. அழியும் உணர்வெது, அறிவுடன் கூடிய அழியா உணர்வெது என உணர்வதே அறிவாகும்.

உடம்பின் பயன், உடம்பினுள் உத்தமனை உணர்வதே என்று இதற்கு முந்தையக் குறளில் பார்த்தோம். இப்போது உடம்பின் பயன் அறிவினை உண்டு பண்ணுவதே என்கிறார் ஔவைப் பிராட்டி. இந்த அதிகாரம் முழுவதும் உடம்பின் பயன் என்ன என்பதை பட்டியலிடுவதேயாகும்.

அறிவு என்பதற்கு இன்னதுதான்  பொருள் என்பது நிலையான அர்த்தம் கொண்டு எந்த நாளும் இதுவரை இருந்ததில்லை. அறிவு என்பது அறியப்படுவது, அது அனுபவங்களின்  தொகுப்பு மட்டும்  இல்லை, அனுபவத்தில் இருந்து அறியப்படுவதுதான் அறிவு.

அதை “அற்றம் காக்கும் கருவி” என்கிறார் திருவள்ளுவர். காலத்துக் காலம் இடத்துக்கு இடம் அந்த அறிவு என்பதன்  பொருள் மாறுபட்டே வருகிறது. அது காலம் தோறும் வளர்ந்து கொண்டே வருகிறது. முழுமை பெறுவது இறைநிலை வாய்க்கும் போது மட்டுமே.

நமது தமிழர்தம் பாரம்பரிய மரபில் மட்டும்தான்,  ஒரு அறிவுள்ள பிராணி, இரண்டு அறிவுள்ள பிராணி எனப்  பிரித்துக் கொண்டே போய்  மனிதனை ஆறு அறிவுள்ள வாழும் ஜீவன் என்ற பிரிவினை இயம்பப்படுகிறது, இன்னும் ஏழாம் அறிவு எட்டாம் அறிவு என்று இப்போது விவாதம் வளர்ந்து வருகிறது.

இதையே ஆங்கிலத்திலே சொல்லும் போது சிக்ஸ்த் சென்ஸ், செவன்த் சென்ஸ் என்றுதான் கூறுவார்கள் . அவர்களுக்கு அறிவு என்பது புலன் வழிக் கிடைக்கும் சென்ஸ் தான் நமக்கோ புலன்வழிக் கிடைக்கும் சென்ஸ் மட்டும் அறிவு என்பது ஆவதில்லை.

அறிவு என்பது சற்று அதைவிட மேம்பட்டது, என நினைக்கிறோம், அது புலனைவிட வித்தியாசமானது . ஆனால் அறிவு வளர்ந்து கொண்டே வருவது, காலம் மாறும் போது அதுவும் மாறுகிறது.

ஒரு காலத்தில் அரணியக் கட்டையைக் கடைந்து நெருப்பு எடுப்பது மிகப்பெரிய அறிவு எனப்பட்டது, பின்பு இயற்கையில் கிடைக்கும் கல்லைச் செதுக்கிக் கூராக்கி ஆயுதம் செய்வது அறிவாக எண்ணப்பட்டது. ஆயுதம் வைத்து வேட்டையாடுவது அப்போது மிகப்பெரியக் கண்டுபிடிப்பு. பின் கல் ஆயுதமே உணவுக்கு, மனித வாழ்வின் ஆதாரம் ஆக அமைத்தது, கற்கள் கிடைக்கும் இடங்களில் ஆதி மனிதன் பெரும் பாலும் குடியேறினான்..

ஆனால் இன்னமும் ஆயுதம் செய்வது பெரிய அறிவாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆதி மனிதனுக்கு ஆயுதம் அவனுக்கு உணவைப் பெற்றுத் தந்தது. இப்போதோ ஆயுதம் பிறரை அடக்கி ஆளத் தேவைப்படுகிறது.

பின்பு செடி கொடிகளில் இருந்து உணவை சேகரிக்கும் அறிவு போதாமல், தானே விளைவிக்க அறிவு வளர்ந்தது. அத்தகைய அனுபவ  அறிவு வேளாண்மை எனப் பெயர் பெற்றது.

அறிவு என்பது காலத்துக்கு காலம் காலம் மாறியே வந்தது. மனிதனின் அறிவு வளர்ச்சி தொடர்ந்து வகுக்கப்பட்டு அது விஞ்ஞானம் என்று மொத்தப் பெயர் பெற்றது. அறிவைத் தேடி ஆய்வுகள் தொடர்ந்தது . அவைகள் அறிவியல் உண்மைகள் என வகுக்கப்பட்டன.

அநேகமாக இதுவரை நிகழ்ந்த அனைத்து ஆய்வுகளும் நம்மைச் சுற்றி இருக்கும், பிரபஞ்சத்தையும், இயற்கையையும் புரிந்து கொள்ளவே நடைபெற்றது. ஏன்? ஏன்?  என்று இயற்கையின் அத்தனை செயல்களுக்கும் காரணம் தேடி அவைகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இயற்கையைப் புரிந்து கொள்ளவே இந்த்தனை ஆயிரம் ஆண்டு அறிவுத் தேடலும் பயன்பட்டது. ஆய்வுகள் அத்தனையும் மனிதனைச்  சுற்றி இருக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியே நடைபெற்றன. கண்ணால் காண்பதைப் பற்றியே நடைபெற்றது. எனவே இதுவே பௌதீகம் எனப்பட்டது.

ஆய்வுக்குப் பிந்தைய கண்டுபிடிப்புகள் அறிவியல் உண்மைகள் எனத் தொகுக்கப்பட்டபோது, அறிவியலில் உண்மையைத் தவிர பொய்யும் உண்டா எனும் கேள்வி எழத்தான் செய்யும். அறிவியல் உண்மைகள் என ஆய்வுக்கு பின் தொகுக்கப்பட்டவை போக இன்னும் ஏராளமான,   பிரபஞ்சத்தைப் பற்றிய ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் புராதனமான, பெருவாரியான  மக்களால் நம்பப்பட்டு, அனுபோகத்தில் இருந்து வந்த  பல நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன.

இதுவரை ஆயிரம் ஆண்டுகளான மனிதகுல வளர்ச்சியால் பெற்ற அறிவைக் கொண்டு ஆய்வின் நியதிக்கு வராத, அல்லது இன்னும் விடை கண்டுபிடிக்க முடியாத பிரபஞ்சத்தைக் குறித்த நம்பிக்கைகள் ஆராயப்படாமலேயே இன்னமும் அறிவியல் முத்திரை தற்கால அறிஞர்களால் பொறிக்கப்படாமல் இருந்து வருகிறது.

இப்போது அறிவின்மை, முட்டாள்தனம் என்று உதாசீனப்படுத்தப் படும் பல அறியியல் நம்பிக்கைகள் , காலப்போக்கில் அசைக்க முடியாத தொழில் வாய்ப்புகளையும், மனிகுல வாழ்வின் போக்கையுமே மாற்றக் கூடியதாக அமைத்து விடுகிறது.

உதாரணத்திற்கு, அப்படித்தான் 1875 march 9 இல் அமெரிக்காவில் கிரகாம்பெல் என்பவர், முதல் முதலில் , உள்ளுணர்வின் மூலம் நீண்ட கம்பியை ஒரு முனையை அவரது நண்பரிடம்  தந்து மறுமுனையின் மூலம் “Mr WATSON COME HERE PLEASE “, என்று மனித  குலம்  முதலில்  டெலிபோன் மூலம் பேசிய பேச்சைப் பேசினார் .

தூரத்தில் இருப்பவர்க்கு இவர் பேச்சு சரிவரக் கேட்டதும், தன் கண்டுபிடிப்பை மக்களுக்குத் தெரிவிக்க, அரசாங்கத்திற்கு அவர் “நான் தொலைபேசி என்ற கருவியைக் கண்டுபிடித்திருக்கிறேன் அதற்கு படேன்ட் தர வேண்டும்” என்று விண்ணப்பித்தார்.

மறுநாள் அமெரிக்க பத்திரிகையில் ஒரு தலையங்கம் வந்தது .

Yesterday  We have arrested a fellow attempting to obtain money under false pretences என்று கூறி சிறையில் அடைத்தது மேலும்,” without doubt the man is a fraud and an unscrupulous tricker and must be taught a lesson that the american public is too smart and intelligent to be the victiom of this and similar schemes. Even if this insane idea worked, it would have no practical value other than for circus shows.”

அதாவது இந்த தொலை பேசி பேணும் கண்டுபிடிப்பு, எந்தச் செய்முறை சாத்தியமும் இல்லாத ஒரு கண்டுபிடிப்பு, இது சர்க்கஸில் வேண்டுமானால் பயன் படலாம் நடை முறை வாழ்க்கைக்குப் பயன்படாது என அப்போது  கணித்தது அந்தப் பத்திரிக்கை.

ஆனால் இன்று தொலை பேசி இல்லாமல் மனிதனால் இருக்க முடியுமா? செல் போன் கையில் இல்லா விட்டால் அவன் உயிரோடு இருப்பவனாகவே கருதப்படுவதில்லையே? எனவே அறிவு என்பது காலத்துக்குக் காலம் மாறும் ஒன்றாகவே இருக்கிறது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இன்றுவரை, இயற்கையைப் புரிந்துக் கொள்ளவே செய்யப்படுகின்றன. அதைத் தாண்டி புதியதாக ஒன்றும் அறியப்படுவதில்லை.

மேலும் ஒன்றையும் நினைவு கொள்ள வேண்டும். அறிவு என்பது கல்வி மட்டுமல்ல, புலமை மட்டுமல்ல  கல்வி என்பது வள்ளுவர் சொல்வது போல் ஒரு பிறவியில் கற்றது எழும் பிறவி எல்லாம் வருகிறது. ஆனால் அறிவு என்பது எழுகின்ற பிறவி யெல்லாம் மேலும் மேலும் அறிந்து பெறப்படுவது. அது ஒரு குறிக்கோளை நோக்கி வளர்கிறது.

கல்விக்கு குறிக்கோள் இல்லை. கல்வி என்பது பொதுவானது. அது பன்முகம் கொண்டது. ஆனால் அறிவு தனிப்பட்ட மனிதனுக்கு விகிதப்படி அமைவது. தனித்தனி வகைப்பட்டது. அது பொதுவானது அல்ல.

மனிதர்கள் முன்னேறி விட்டார்கள். ஆனால் மனிதன் முன்னேறி விட்டானா? மூளை எத்தனையோ சாதனைகள் புரிகிறது. ஆனால் அது நெஞ்சுக்குள்  போகவில்லை, நெஞ்சோடு இயந்த அறிவு உண்டாகவில்லை. உணர்வுடன் கூடிய அறிவு அமையவில்லை. தாவரவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் இன்னம் பிற அறிவியல் அத்தனையும் திணித்தாலும் அது மூளையோடு நின்று விடுகிறது . உணர்வின் ஆழம் போகவில்லை.

வெறும் அறிவானது வார்த்தைகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும், பொழிப்புரை, பதவுரை அதன் இசை, யாப்பு இப்படித்தான் உணர்வுடன் கூடாத அறிவு போய்க் கொண்டிருக்கும்.

‘கண்ணினும் செவியுனும் திண்ணினும் உணர்வது’ எனத் தொல்காப்பியர் எனும் பண்டைத் தமிழர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்  வகுத்த சூத்திரம் போல், உணரும் அறிவு பெறுவதே உடம்பின் பயன் என்கிறார் அவ்வையார்.

உணரும் அறிவு, உணர்வுடன்  கூடிய அறிவு. அது இரை தேட மட்டுமல்ல, இறைவனுக்கும் நமக்கும் ஒரு உறவு உண்டாக்கும் அறிவு. அத்தகைய உயர் நோக்கம் கொண்ட, மனிதனின் பரிணாமத்தின் அடுத்த நிலைக்கு உயர்த்தக் கூடிய அறிவைப் பெறுதலே இந்த உடம்பைப் பெற்ற பயன்.

இனி அடுத்த பகுதியில் இன்னமும் இவ்வுடலின் பயன்களைப் பார்க்கலாம்.

 

கிரகாம்பெல் படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.