சூர்யா வழங்கிய இளம் சாதனையாளர் விருது – செய்திகள்
சென்னை. 13 நவம்பர் 2011. பல்வேறு சமூக பொருளாதாரத் தடைகளைத் தாண்டி கல்வி, விளையாட்டு, யோகா, சமூக சேவை, கலை போன்ற துறைகளில் சாதனைகள் செய்த பத்து தமிழக மாணவ மாணவிகளுக்கு மா ஃபா அறக்கட்டளை ‘தீஷா இளம் சாதனையாளர்கள் விருது 2011’ இன்று வழங்கியது. இந்த விருதை, திரைப்பட நடிகர் சூர்யா குழந்தைகளுக்கு வழங்கினார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலா ஒரு கேடயமும், ரூபாய் பத்தாயிரம் ரொக்கப் பரிசும், சாதனைப் பதக்கமும் வழங்கப்பட்டது.
மா ஃபா அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு விழாவில் ஒரு அங்கமாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இந்த விருதை விழாவில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட டேக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவர் திரு எச். ஸ்ரீநிவாசன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய மா ஃபா அறக்கட்டளையின் நிர்வாகப் பொறுப்பாளர் திருமதி. லதா ராஜன், “வறுமையில் வாடும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவுவதற்காக சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஐந்தே வருடங்களில் சுமார் 70.000 மக்களுக்குப் பல உதவிகளைச் செய்து சிறப்பாக வளர்ந்திருக்கிறது. எங்கள் நோக்கம் சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கிய குழந்தைகள் மற்றும் பெண்கள் முன்னேறத் தேவையான உதவிகளைச் செய்வது தான். இன்று தீஷா அறக்கட்டளையின் உதவியுடன் படித்த சுமார் 150 பேர் நல்ல நிறுவனங்களில் வேலை செய்துவருகின்றனர்.” எனக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் தமிழ் வழிக் கல்வி கற்கும் குழந்தைகளின் பொது அறிவு வளர்ச்சிக்கான “நாளை நமதே” என்ற கல்வி இதழ் வெளியிடப்பட்டது.
தமிழகமெங்கும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த நூலை சென்னை மற்றும் கேபிடல் ட்ரஸ்ட் ஆகிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ம ஃபா அறக்கட்டளை தயாரிக்கிறது.
அறக்கட்டளையின் பொறுப்பாளர்களில் ஒருவரான, திரு. கே. பாண்டியராஜன் பேசுகையில், “தமிழ் வழிக் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு பயனுள்ள தகவல்கள், கருத்துக்கள் கொண்ட இதழாக நாளை நமதே இருக்கும். எங்கள் அறக்கட்டளையின் மூலம் அந்த குழந்தைகளுக்கு சுய முன்னேற்றம், ஆளுமைத்திறன் ஆகியவற்றில் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தவுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்: ”தீஷா விருது தமிழகத்தில் இளைய சமுதாயத்திற்காக வழங்கப்படும் விருதுகளில் சிறப்பான விருதாகக் கருதப்படுகிறது. ஐந்தாவது முறையாக வழங்கப்படும் இந்த விருதிற்கு தமிழகமெங்கும் இருந்து கல்வி, விளையாட்டு, யோகா, சமூக சேவை மற்றும் கலைத் துறைகளில் சாதனை படத்த, சமூக பொருளாதாரத்தில் பிந்தங்கிய பிரிவுகளைச் சார்ந்த 284 மாணவ மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதல் சுற்றில் ஐம்பது குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்த சுற்றில் சமூக பொருளாதாரப் பின்னணி, முயற்சி, தலைமைப்பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் பத்துக் குழந்தைகள் விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டனர்.” என்றார்.