செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(361)

கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோ ரேஎ ருடைத்து.

– திருக்குறள் – 1053(இரவு)

புதுக் கவிதையில்...

ஓளிவு மறைவு இல்லாத
மனம் உடையவராய்,
ஈவது
தன் கடமையென
நன்கு அறிந்தவரின்
முன்னே நின்று இரந்து
ஓன்றை அவரிடம்
கேட்பதும்
கேட்பவர்க்கு அழகுதான்…!

குறும்பாவில்...

நெஞ்சில் ஒளிவு மறைவின்றி
கொடுப்பது கடமை என்றறிந்தவர் முன்னின்று
கேட்டு இரப்பதும் அழகே…!

மரபுக் கவிதையில்...

இருப்பதை மறைத்தே இல்லையெனா
இயல்பினைக் கொண்டே கையிருப்பை
விரும்பியே கொடுத்தல் கடனென்ற
விபரம தறிந்த நல்லோர்முன்
இரந்திடச் சென்றே யவர்களிடம்
இருப்பதைக் கொடுக்க வேண்டுவதும்
பெருமையா யெண்ணிப் பெறுவதுவும்
பேரழ கென்றே கருதலாமே…!

லிமரைக்கூ...

இல்லை அவரிடம் கரத்தலே,
கொடுப்பது கடமையெனக் கொடுப்பவர், அழகுதான்
அவரிடம் சென்று இரத்தலே…!

கிராமிய பாணியில்...

அழகுதான் அழகுதான்
எரப்பதும் அழகுதான்,
மனசு நெறஞ்சவங்கிட்டபோய்
எரப்பதும் அழகுதான்..

வச்சிக்கிட்டு இல்லங்கிற
ஒளிவு மறவு இல்லாம,
இல்லாதவனுக்குக்
குடுக்கிறதக் கடமண்ணு
அறிஞ்சிச் செய்யிறவன்
முன்னால போயி
எரந்து
கேக்கிறது கூட அழகுதான்..

தெரிஞ்சிக்கோ
அழகுதான் அழகுதான்
எரப்பதும் அழகுதான்,
மனசு நெறஞ்சவங்கிட்டபோய்
எரப்பதும் அழகுதான்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *